இரண்டாவது அலை..

 

உலகில் இதுவரை காலமும் பரவிய அநேகமான தொற்று நோய்கள் மற்றும் உலகம்பரவும்; (பென்டமிக்) பெருந்தொற்றுக்களை ஒரு குறுகிய காலத்திற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்த வரலாறு இல்லை. பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மை, மலேரியா என இந்தப் பட்டியல் நீள்கின்றது.

 

3ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக கண்டறியப்பட்ட பெரியம்மை நோய் கட்டம் கட்டமாக ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 1980ஆம் ஆண்டிலேயே இந்நோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையில் 2 மில்லயனுக்கும் அதிகமான உலக மக்கள் பலியாகினர். அதுபோலவே, 50ஆயிரம் வருட வரலாறு இருப்பதாக கூறப்படும் மலேரியாவுக்கு மில்;லியன் கணக்கானோரை காவு கொடுத்த பிறகும் இன்று வரை சில நாடுகள் இந்த தொற்றுநோயை ஒழிப்பதற்காக போராடிக் கொண்டுதானிருக்கின்றது.

 

2019ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுக்கும் பரவிவிட்ட கொவிட்-19 வைரஸ் தொற்றுநோயும் இந்த வரிசையில் புதிதாக இணைந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. உலகெங்கும்; 36 மில்லியன் மக்களை தாக்கி, 10 இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்த பிறகும் கொரோனா வைரஸ் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. மாறாக, இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று கட்டம் கட்டமாக தாக்கிக் கொண்டே இருக்கின்றது.

 

இலங்கையிலும் இவ்வாறான இரண்டாவது அலைத் தாக்கம் ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையில் கொவிட்-19 வைரஸ் ‘சமூக மட்டத்திலான பரவல் அறவே கிடையாது’ என்று சுகாதார அதிகாரிகள் சான்றுபடுத்திய பின்னணியில், அரசாங்கம் நாட்டை வழமைக்குத் திருப்பி, மக்களும் ‘கொரோனாவுடன் வாழப் பழக்கத் தொடங்கிய’ இரண்டு மாதங்களின் பின்னர் பெருவீச்சில் ஒரு சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கின்றது.
எல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்ற ஆறுதலில் அரசாங்கம் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திலும், மக்கள் தமது அன்றாட வாழ்க்கையிலும் மூழ்கித் திளைத்திருந்த வேளையில், மீண்டும் ஏற்பட்டுள்ள வைரஸ் பரவல் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் சவாலை ஏற்படுத்தியிருப்பது மட்டுமன்றி, ஆரோக்கியமான வாழ்வு பற்றிய பேரச்சத்தையும் மீண்டும் உண்டுபண்ணியிருக்கின்றது.

முதலாவது அலை

 

இலங்கையில் முதலாம் கட்டமாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சில நாட்களில் அரசாங்கம் கடுமையான சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்தியதுடன், ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும் மார்;ச் மாதத்தில் கிட்டத்தட்ட முழு நாடுமே மூடப்பட்டது. ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டு மக்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது. சமகாலத்தில், வைத்தியர்களும் சுகாதாரப் பணியாளர்களும் பெரும் அர்ப்பணிப்புடன் இந்த வைரஸிற்கு எதிராக போராடினர்.

 

இதனால் நாடு முடங்கியது மட்டுமன்றி பாராளுமன்ற தேர்தலையும் ஒத்திப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே நாட்டை வழமைக்கு கொண்டு வருவதுடன் தேர்தலையும் நடாத்த வேண்டிய தேவையொன்று அரசாங்கத்திற்கு இருந்ததை யாரும் மறுக்க முடியாது. எனவேதான், மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து அமுல்படுத்தப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் ஜூன் மாத இறுதிக்குள் பெருமளவுக்கு நீக்கப்பட்டன.

 

இந்த சந்தர்ப்பத்தில், உலகின் பல நாடுகளில் கொவிட்-19 தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்தது. இலங்கையிலும் எவ்கையிலேனும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருந்தனர். ஆகவே, கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என்ற கோரிக்கைகள் பரவலாக முன்வைக்கப்பட்டன. ஆனால், ‘சமூக மட்டத்தில் பரவல் இல்லை என்றும், சமூகப் பரவல் முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டது என்றும்’ சுகாதார சேவைகள் பணிப்பாளர் போன்ற முக்கிய சுகாதார அதிகாரிகள் கூறினர்.

கைவிடப்பட்ட நடைமுறை

 

ஊரடங்கு போன்ற பிரதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விட்டாலும் தொடர்ச்சியாக முகக் கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளி போன்ற அடிப்படை சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கிவிட்டு, அரசாங்கம் தேர்தலுக்குச் சென்றது. பின்னர், படைத் தரப்பிற்குள் பரந்தளவில் கொவிட்-19 வைரஸ் பரவிய சூழ்நிலையிலும் கூட ‘அது ஒரு சமூகப் பரவல் இல்லை’ என்ற கற்பிதத்தோடு, நாடு வலிந்து இயல்பு வாழ்க்கைக்கு திருப்பப்பட்டது எனலாம்.

 

ஆனால், தேர்தல் பிரசாரங்கள் தொடக்கம் அனைத்து விதமான நிகழ்வுகளிலும் இந்த கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதை காண முடியவில்லை. அடிப்படை சுகாதார நடைமுறைகளை அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தொடக்கம் அதிகாரிகள் தொட்டு சாதாரண பொதுமக்கள் வரை யாரும் இந்த அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவில்லை. ‘கொரோனா இல்லாத நாட்டில் எதற்கு முகக் கவசம்?’ என்ற தோரணையிலேயே அவர்களது செயற்பாடுகள் அமைந்திருந்தன.

 

ஜுன் இறுதியில் இருந்து நாடு வழமைக்குத் திரும்பியிருந்தாலும் கூட அரசாங்கம் வர்த்தக விமான சேவைகளுக்காக விமான நிலையத்தை திறக்காமல் செயற்பட்டமை நல்லது என்றே இப்போது தோன்றுகின்றது. எவ்வாறிருப்பினும் வெளிநாடுகளில் இருந்து விசேட விமானங்களில் வருவோரிடையே இருந்து தினமும் நான்கைந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுக் கொண்டே இருந்தனர். இந்தியாவில் கொரோனா தீவிரமாகிவிட்ட பிறகு, கடல்வழிக் கடத்தல்காரர்கள் குறித்த செய்திகளும் வெளியாகின.

 

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கொவிட் நோயாளர்கள் இருவரின் மரணங்கள் பதிவானது ஒருபுறமிருக்க, இரண்டொரு தொற்றாளர்களும் சமூக மட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டனர். குறிப்பாக, லங்காபுர பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றமை ஜூலை 30 ஆம் திகதி கண்டறியப்பட்டது. ஆனால் இதனை ஒரு சமூகப் பரவலாக நாம் கவனத்தில் எடுக்கவில்லை என்பதுடன் ஆயிரத்தில் ஒருவர் கூட இதனது ‘சீரியஸ்’ தன்மையை புரிந்து கொண்டதாக தெரியவில்லை. நாம் அப்போதே விழித்துக் கொண்டிருந்தால், இன்று இரண்டாவது அலையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிக்குண்டிருக்காமல் தடுத்திருக்கலாம்.

தொழிற்சாலையில் தொற்று

 

மினுவாங்கொடையில் உள்ள பிராண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிகின்ற, திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதான பெண்ணொருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றியிருப்பது கடந்த ஞாயிறன்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர் அவரது மகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்படிப் பார்த்தால், ஜூலையில் லங்காபுர பிரதேச செயலக ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து 2 மாதங்களின் பின்னர் சமூக மட்டத்தில் இருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இது எங்கெல்லாம் பரவியிருக்கும் என்று சுகாதார அதிகாரிகள் தேடிய போது, பி.சி.ஆர். முடிவுகள் அதிர்ச்சிகரமானவையாக அமைந்தன. இன்னும் இந்த அதிர்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. மினுவாங்கொடை தொழிற்சாலையில் 1034 ஊழியர்களி;ற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் வெலிசர தொழிற்சாலை ஊழியர் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் குடும்பத்தினர் கணிசமானோர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

 

காசல் வீதி வைத்தியசாலையில் ஒரு கர்ப்பிணி, மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உணவக உரிமையாளர் என்று பிராண்;டிக்ஸ் ஊழியர்கள் எவ்வழியிலேனும் தொடர்புடைய பலருக்கு பரவலாக இத்தொற்று ஏற்பட்டிருக்கின்றது. இத் தொழிற்சாலை ஊழியர்கள் நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பதால் கிழக்கின் அம்பாறை மாவட்டம், வடக்கின் புங்குடுதீவு மற்றும் தென்னிலங்கையின் பல பிரதேசங்களுக்கும் கொவிட்-19 பரவியிருக்கின்றது.

 

இதற்குப் புறம்பாக, பிராண்டிக்ஸ் தொழிற்சாலையுடன் நேரடித் தொடர்பை பேணியவர்களாக அறியப்படாத ஜ.சி.பி.டி. கெம்பஸ் மாணவன் மற்றும் கொழும்பின் பிரபல பாடசாலை மாணவர் ஒருவரின் பெற்றோர், மன்னாரில் ஒருவர் என தொடர்;;ச்சியாக வேறுபலரும் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரண்டாவது அலையில், இந்த நிமிடம் வரை நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர். இதனைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்வேறு சந்தேகங்கள்

இந்தப் பின்னணியில், இரண்டாவது அலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் முன்வைக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பிராண்டிக்ஸ் தொழிற்சாலைக்கு இந்தியாவில் இருந்து வந்தவர்களால் பரப்பப்பட்டது என்று ஒரு கருத்து உள்ளது. இக் குறிப்பிட்ட நிறுவனத்தை வீழ்த்துவதற்கு செய்யப்பட்ட சதியா என்று சந்தேகம் தெரிவிப்போரும் உள்ளனர். அத்துடன், இந்த இரண்டாவது அலைக்குப் பின்னால் அரசியல் ஆதாயம் தேடல்கள் இருக்கின்றதா என்ற சந்தேகத்தை பலரும் முன்வைக்கின்றனர்.

 

இலங்கையில் கொவிட்-19 சமூகப் பரவல் இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நற்சன்றுப் பத்திரம் வழங்கிய முக்கிய சுகாதார அதிகாரிகளை இப்போது வெகுஜன ஊடகங்களில் அதிகம் காணக் கிடைக்கவில்லை. வேறு அதிகாரிகளே பெரும்பாலும் கருத்துத் தெரிவிப்பதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன், எம்.ஆர்.ஐ. நிறுவகத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய டாக்டர் ஜயருவன் பண்டார பதவியிறக்கப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. சமூகப் பரவல் அவர் தெரிவித்த கருத்து ஒன்றுக்காகவா அல்லது அரசியல் காரணங்களுக்காகவா இந்த பதவிக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று அரசாங்கத்தை நோக்கி முன்வைக்கப்படுகின்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில்கள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.
இரண்டாம் கட்ட வைரஸ் பரவலின் பின்னணி, மேலே சொல்லப்பட்ட எதுவாகவும் இருக்கலாம். ஆனால், அதுபற்றி விவாதித்து, குழம்பி, அதிலேயே கவனத்தைக் குவிப்பது என்பது இப்போதைக்கு அவசியமற்றது. அது நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விரைந்த செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடலாம்.

 

‘இப்படி நடந்திருக்கலாம் அல்லது அது காரணமாக இருந்திருக்கலாம்’ என்ற ஊகங்கள் புறக்கணிக்கத்தக்கவையும் அல்ல. ஆனால், அது தொடர்பில் சில விடயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, இந்தியாவில் பணிபுரியும் தமது நிறுவன தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இலங்கைக்கு 3 விசேட விமானங்களில் அழைத்து வரப்பட்டனர் என்பதை பிராண்டிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆயினும், அவர்கள் 28 நாட்கள் முறையான தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததாகவும் அவர்களுக்கும் மினுவாங்கொடை தொழிற்சாலைக்கும் இடையில் நேரடி தொடர்பில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இருந்து வைரஸ் காவி வரப்பட்டது என்ற தகவலை மறுத்துரைத்துள்ளது. அத்துடன் இந்தியாவில் இருந்து துணி வகைகள் வரவழைக்கப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபுறத்தில், வைரஸ் பரவலானது அரசியலுக்காக மறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

 

ஆனால் ஒன்று, இது எவ்வழியில் பரவியிருந்தாலும் கூட, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட அனுகூலங்கள் அடைந்து கொள்ளப்படலாம் என்பது வேறுவிடயம். சத்தமில்லாமல் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்படலாம். அத்துடன், இலங்கையின் முக்கிய ஏற்றுமதி வருமானத் துறையாக காணப்படுகின்ற ஆடை உற்பத்தி துறையில் சரிவு ஏற்படுவதுடன் மேலும் பல அரசியல், சமூக, பொருளாதார மட்டத்தில் இன்னும் இழப்புக்களை நாடு சந்திக்க இரண்டாவது அலை காரணமாகலாம்.
55ஆயிரம் பணியாளர்கள்
இதேவேளை, பிராண்டிக்ஸ் என்பது மிகப் பெரிய நிறுவனங்களுள் ஒன்றாகும். ஆடைத் தயாரிப்பு துறையில் சுமார் 40 வருடகால அனுபவத்தை கொண்ட இந்நிறுவனத்திற்கு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹெய்டி, கம்போடியா போன்ற பல நாடுகளில் தொழிற்சாலைகள் உள்ளன. இலங்கையில் கிழக்கு மாகாணம் உள்ளடங்கலாக பல இடங்களிலும் இந்நிறுவனத்திற்கு 20 தொழிற்சாலைகளும் பயிற்சி கல்லூரியும் உள்ளது.

 

இலங்கையின் பிரதான தைத்த ஆடை ஏற்றுமதிக் கம்பனி என்ற வகையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியி;ல் அதிக பங்கை வகிப்பது மட்டுமன்றி, 55 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொழில்வாய்ப்பை வழங்கியிருக்கின்றது. இவர்களுள் அதிகமானோர் சிங்களவர்களாவர். எனவே இப்பேர்ப்பட்ட ஒரு நிறுவனத்திற்குள் வைரஸ் பரவியிருக்கின்றது என்பதை பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டியது அவசியமே.

 

ஆனால், அதற்காக ‘இது முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிறுவனம் என்பதால் இலக்கு வைக்கப்பட்டதா?’ என்ற கோணத்தில் சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களே கேள்வி எழுப்புவது அபத்தமானதும் அவசியமற்றதும் என்றே சொல்ல முடிகின்றது. பிராண்டிக்ஸை ‘ஒரு இனத்திற்குரிய’ நிறுவனமாக சிங்கள மக்களே பார்க்காத வேளையில், பொல்லைக் கொடுத்து அடி வாங்குகின்ற வேலை முஸ்லிம்கள் செய்யத் தேவையில்லை.

நடந்த தவறுகள்

 

கொவிட்-19 வைரஸ் பிராண்டிக்ஸிற்கு எங்கிருந்து வந்தாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத காரணத்தினாலேயே ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு விரைவாக பரவியுள்ளது என்பதை எந்தக் கோணத்திலும் மறுக்கவியலாது. குறிப்பிட்ட நிறுவனத்தின் ஊழியர்களுக்கு வெளியில் இருந்தும் பரவியிருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பது போலவே, இப்போது கண்டறியப்பட்டுக் கொண்டிருக்கும் தொற்றாளர்கள் சிலர் வேறு மூலங்களில் இருந்து கூட கொவிட்-19 தொற்றியிருக்கலாம் என்பதற்கான நிகழ்தகவுகளும் உள்ளன.

 

எனவே, எந்த இடத்தில், எந்தப் பின்னணியுடன் கொரோனா வைரஸ் பரவியது என்பதையெல்லாம் தேடிப்போவதை விட இலங்கையில் இரண்டாவது அலை பெருவீச்சில் ஏற்பட்டுள்ளது என்ற அடிப்படையிலும், சமூக மட்டத்தில் முற்றாக துடைத்தெறியப்பட்டு விட்டதாக கூறப்பட்ட இவ்வைரஸ் இன்னும் சமூகத்தில் அங்குமிங்கும் உயிர்ப்புடன் இருக்கின்றது என்ற அடிப்படையிலும் சிந்தித்து செயற்படுவதே அவசிமாகும்.

 

இலங்கை அரசு இந்த இரண்;டாவது அலையை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், ஆளும் பொதுஜனப் பெரமுண அரசாங்கம் இதனைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருக்கின்றது. அத்துடன் வைத்தியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் படையினரின் அர்ப்பணிப்புக்கும் கடந்தகால அத்தாட்சிகள் உள்ளன.

 

இந்நிலையில், ‘அடுத்துவரும் 7 நாட்கள் தீர்க்கமானது’ என்று இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில் கொரோனாவை கட்டுப்படுத்த காத்திரமான நடவடிக்கை எடுத்தால், மக்கள் அதற்கு ஒத்துழைப்பை வழங்கினால் கட்டுப்படுத்தலாம் என்பதே இதன் உள்ளர்த்தம் எனலாம்.
எனவே இந்த வைரஸ் இப்போது நாட்டின் எந்த மூலையிலும் பரவியிருக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வின் அடிப்படையில் அனைவரும் குறிப்பாக முஸ்லிம்களும் தமிழர்களும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.பி.க்கள் அரச அதிகாரிகள் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். குறுகிய மனப்பாங்கு கொரோவை விட கொடியது.

– ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி – 11.10.2020)

 

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-