‘நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய் திகழாதவரை சுவனம் புகமுடியாது’- நபி மொழி

{"subsource":"done_button","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","source":"other","origin":"gallery","sources":["307909684028211"],"source_sid":"6963B6EF-4153-4C31-BEC0-C099EBFFF2B1_1602353209304"}

ல்லாம் வல்ல அல்லாஹ் இந்த உலகைப்படைத்து அதில் மனிதர்கள் மற்றம் பிற உயிரினங்கள் வாழ வழிசெய்தான். மனிதர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் அன்புடனும், நேசத்துடனும், பாசத்துடனும் வாழவேண்டும் என்பது இறைவனின் விருப்பமாகும். குறிப்பாக இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என்று வழிகாட்டினான்.

இறைவன் அருளிய திருக்குர்ஆனில் ஒற்றுமையுடன் வாழ்வது குறித்த வசனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒற்றுமையுடன் இருந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், பிரிந்து கிடந்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கி இருக்கின்றான்.

“அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 8:46).

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும், அவர்களுக்குள் கருத்துவேறுபாடு எதுவும் வரக்கூடாது என்பதை இந்த திருக்குர்ஆன் வசனம் அழகாக வலியுறுத்துகிறது. அதேநேரத்தில் கருத்துவேறுபாடு கொண்டால் என்ன ஆபத்து காத்திருக்கிறது என்பதையும் இந்த வசனம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. ஆம் நமக்குள் கருத்து வேறுபாடு வந்தல் பலம் குன்றிவிடுவோம். பலம் குறைந்தால் எதிரிகள், இறைமறுப்பாளர்கள் நம்மை வெற்றிகொள்ளும் நிலை ஏற்படும்.

இதனால் தான் அல்லாஹ் மனிதர்களிடம் கூறுகிறான், நீங்கள் பொறுமையுடன் இருங்கள், கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அனைவரிடமும் நேசத்துடன் வாழுங்கள். இவ்வாறு செய்யும் போது அத்தகைய பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்ற நற்செய்தியும் வலியுறுத்தப்படுகிறது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஒருவர் மற்றவரை நேசிக்க வேண்டும். இது அவர்களின் இறைநம்பிக்கையின் அம்சங்களில் ஒன்றாகும். இந்த நேசத்தின் தொடக்கம் ‘ஸலாம்’ கூறுவதில் இருந்து தொடங்க வேண்டும். ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்ற சொல்லின் பொருள் ‘உங்கள் மீது சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்’ என்பதாகும். இந்த வாழ்த்துச்சொல்லை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொள்ளும் போது இயல்பாகவே அங்கு உள்ளவர்கள் இடையே சாந்தியும், சமாதானமும் நிலவத்தொடங்கிவிடும். அன்பு மலரும்போது, நேசம் வளரத்தொடங்கும்.

இதுபற்றிய நபிமொழி வருமாறு:

“அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: நீங்கள் உண்மையான இறைநம்பிக்கையாளர்களாய் திகழாதவரை சுவனம் புகமுடியாது. நீங்கள் ஒருவருக்கு ஒருவர் நேசிக்காதவரை உண்மையான இறை நம்பிக்கையாளர்களாக விளங்க முடியாது. நீங்கள் எதனைச்செய்தால் உங்களிடையே நேசம் வளருமோ அத்தகைய ஒரு செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? உங்களிடையே ஸலாமை பரப்புங்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்).

இது தொடர்பான இன்னொரு நபி மொழி வருமாறு:

அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் ஒருமனிதர் இஸ்லாத்தில் எந்த செயல் சிறந்தது? என்று வினவினார்கள். அதற்கு அண்ணலார், ஏழை, எளியவர்களுக்கு உணவளிப்பதும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஸலாம் சொல்வதுமாகும். அவர் உமக்கு தெரிந்தவராக இருப்பினும் சரி, தெரியாதவராக இருப்பினும் சரியே. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்).

நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை இந்த திருக்குர் ஆன் வசனம் இவ்வாறு வலியுறுத்துகிறது:

“நீங்கள் அனைவரும் அல்லாஹ்வுக்கே அடிபணிந்து வாழுங்கள். அவனோடு எதனையும் இணையாக்காதீர்கள். தாய் தந்தையரிடம் நல்ல விதமாக அன்புடன் நடந்து கொள்ளுங்கள்! மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், மற்றும் வழிப்போக்கர், உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடனும் நயமாக நடந்து கொள்ளுங்கள்! திண்ணமாக, அறிந்து கொள்ளுங்கள்: வீண் பெருமையிலும், கர்வத்திலும் உழல்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (திருக்குர்ஆன் 4:36).

திருக்குர்ஆனில் குறிப்பிட்டுள்ளபடி நாம் நடந்தால் நமக்கு சுவனம் நிச்சயம் என்றும் அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் உறுதி கூறுகின்றான்.

“எவர்கள் நம் வசனங்களை ஏற்று நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களை கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனப் பூங்காக்களில் நுழைவிப்போம். அங்கு அவர்கள் என்றென்றும் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்”. (திருக்குர்ஆன் 4:57).

நாம் அனைவரிடமும் நேசத்துடன் நடந்து கொண்டு இறைவனின் அருளைப்பெறுவோம்,