மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி விவகார அவசர கூட்டம்

 

நூருல் ஹுதா உமர்

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடகங்களின் வாயிலாக பலநாட்களாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் சனிக்கிழமை காலை ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலின் ஒரு பகுதி கடலரிப்புக்கு இலக்காகி இடிந்து விழுந்துள்ளது.

 

கடலரிப்பை தடுத்து ஜனாஸா மையவாடியின் சுற்றுமதிலை பாதுகாக்க காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் குறித்த துறைக்கு பொறுப்பான காரைதீவு பிரதேச செயலக அதிகாரியின் ஆலோசனையுடனும் மேற்பார்வையுடனும் மண் மூட்டைகளை அடுக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்றிருந்து. ஆனால் அத்தற்காலிய பாதுகாப்பு நடவடிக்கையும் கைகூடவில்லை.

மதில் இடிந்து விழுந்ததால் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் கடலரிப்பின் காரணமாக இனிவரும் நாட்களில் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அச்சம் எழுந்துள்ளது. கடலரினால் நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் வெளியேறி அண்மித்த பிரதேசங்களில் கரையொதுங்கும் நிலையும் இதனால் பல்வேறுபட்ட பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலினால் அரச அதிகாரிகள், காரைதீவு பிரதேச சபையினர், அரசியல் கட்சிகளின் பிரதேச அமைப்பாளர்கள், பொதுமக்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு  நேற்று (03) மாலை அந்நூர் கலாச்சார மண்டபத்தில் அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம், காரைதீவு பிரதேச சபை செயலாளர், காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம். ஜாஹீர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர், தேசிய காங்கிரஸ் அமைப்பாளர் யூ.எல்.என். ஹுதா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டார அமைப்பாளர் எம்.எச்.எம். நாஸர், மாளிகைக்காடு கிராம நிலதாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அந்நூர் ஜும்மா பள்ளி பேஸ் இமாம், முன்னாள் தலைவர், பிரதி தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிர்வாகிகள் மற்றும் பல முக்கியதர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற அவசர கூட்டத்தில் ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழாமல் பாதுகாக்க நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மித்த பகுதியில் புதிதாக ஜனாஸா மையவாடி ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுப்பது என்றும் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டது.