சுமந்திரன் அவர்களே! தயவு செய்து பொறுப்புடன் கருத்துக்களை முன் வையுங்கள் – வை எல் எஸ். ஹமீட்

திரு சுமந்திரனின் கூற்று……………..?
==========================
வை எல் எஸ் ஹமீட்

திரு சுமந்திரன், முஸ்லிம் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக கூறியிருக்கின்றார். அந்த அநியாயங்கள் என்னவென்று வெளிப்படையாக அவர்கூறவேண்டும்.தமிழ்த்தரப்பினர் அடிக்கடி முஸ்லிம்கள்மீது பலவாறான, அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை வழக்கமாக்கிக்கிக் கொண்டுள்ளனர்.

 

இலங்கையில் எந்தவொரு இடத்திலும் ஒரு நகரத்தை இரண்டாக கூறுபோட்டு இரு சமூகங்களுக்கு வழங்கிய வரலாறு இல்லை. அவ்வாறிருந்தும் வடகிழக்கை இணைத்துக்கேட்கின்ற தமிழ்த்தரப்பு கல்முனையைக் கூறுபோடக்கோரும் முஸ்லிம்களுக்கெதிரான அநியாயத்தை நியாயமானது; என வாதிடுகின்ற திரு சுமந்திரன்,

வாழைச்சேனையில் உள்ள சில கிராமசேவகர் பிரிவுகளை எத்தனையோ கிலோமீற்றர் தூரத்திற்காப்பால் உள்ள வாகரையுடன் இணைத்து வைத்துக்கொண்டு அதனை விடுவிப்பதற்கைதிராக முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்துகொண்டு, என்று எத்தனையோ அநியாயங்களை முஸ்லிம்களுக்கெதிராக தமிழ்த்தரப்பு அரங்கேற்றுகின்ற நிலையில் சுமந்திரன் போன்றவர்களும் இவ்வாறு பேசுவது தர்மமாகாது.

சுமந்திரன் சில உதவிகளை அவ்வப்போது முஸ்லிம்களுக்கு செய்கிறார்; என்பது மறுப்பதற்கில்லை. அதனால்தான் ஒப்பீட்டளவில் தந்தை செல்வநாயகம், அண்ணன் அமிர்தலிங்கம், திரு சிவசிதம்பரம், ஆனந்த சங்கரி ஐயா போன்றவர்கள் வரிசையில் ஓரளவு மிதவாத தமிழ்த்தலைவராக திரு சுமந்திரனை முஸ்லிம்கள் பார்க்கிறார்கள்.

அதற்காக, அவர் அவ்வப்போது இவ்வாறான விசமக்கருத்துக்களை வெளியிடுவது சரியல்ல. குறிப்பாக பேரினவாதம் இன்று முஸ்லிம்களைக் குறிவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிற்றினவாதமும் அவ்வப்போது அதற்கு ஆதரவுக்கரங்களை நீட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மிதவாத்த்தலைவர்களும் முஸ்லிம்களை இலக்கு வைப்பது நியாயமில்லை.

 

துரதிஷ்டவசமாக, முஸ்லிம் பிரதிநித்துவங்கள் முஸ்லிம்தரப்பு நியாயங்களை எந்தவொரு விடயத்திலும் சரியான முறையில் முன்வைப்பதில்லை; என்பது முஸ்லிம் தரப்பின் பலயீனம். கல்முனை செயலகப்பிரச்சினையில் முஸ்லிம் பிரதிநிதியே முஸ்லிம்களின் நியாயத்தை சொல்லத்தெரியாமல் “தமிழர்களின் கோரிக்கை நியாயமானதுதான்” என்று தங்களிடம் கூறியதாக நீங்கள் அதிர்வில் கூறியது உண்மையாக இருக்கலாம்.

அது எங்கள் மக்கள் வலிந்து பெற்றுக்கொள்ளும் வரம். அதற்காக உங்களைப்போன்ற படித்த, நிதானமான தலைமைகள் பொறுப்பில்லாமல் கருத்துக்களை முன்வைக்கக்கூடாது.

எங்கள் மக்கள் தெரிவுசெய்யும் பிரதிநிதிகள் தமிழர்களிடம் இருந்து நியாயங்களையே பெற்றுக்கொடுக்கத் தெரியாத அப்பாவிகள். தமிழர்களுக்கு அநீதி இழைத்து முஸ்லிம்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்காப்பார்கள்; என்பது சற்று அதீத கற்பனையில்லையா?

எனவே, தயவுசெய்து பொறுப்புடன் கருத்துக்களை முன்வையுங்கள்.