தகுதியானவர்களுக்கு சரியாக வாக்களித்தல் – ஏ.எல்.நிப்றாஸ்

✍️ ஏ.எல்.நிப்றாஸ்

‘தேர்தல் என்பது மக்களின் தீர்மானமாகும். அவர்கள் தங்களது முதுகுகளை நெருப்பின் பக்கம் திருப்பி தாமாகவே எரித்துக் கொள்ள தீர்மானிப்பார்களாயின், எதிர்காலத்தில் அவர்கள் கொப்புளங்களில் உட்கார வேண்டிய நிலையே ஏற்படும்’ என்று அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் கூறினார்.
‘சிறந்த பிரஜைகளாக இருந்தும் கூட ஒரு தேர்தலில் தமது வாக்குகளை அளிக்காமல் வீட்டில் முடங்கிக் கிடக்கின்ற நபர்களே, நாட்டில் கெட்ட ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு காரணமாகின்றார்கள்’ என்பது உலகப் புகழ்பெற்ற இன்னுமொரு அறிஞர் சொன்ன வார்த்தைகளாகும்.
உண்மைதான்! ஆளுவதும் மக்களை ஆட்டிப்படைப்பதும் அரசியல்வாதிகளும் அரசாங்கங்களுமாக இருந்தாலும் அவர்களை எல்லாம் அதிகாரக் கதிரையில் அமர்த்துவதற்கான ‘வாக்கு’ எனும் ஆயுதம்; மக்களின் கையிலேயே இருக்கின்றது. எந்தச் சப்தமோ ஆர்ப்பாட்டமோ இல்லாமல் இந்த வாக்குரிமையை வாக்காளர்கள் எப்படி கையாளப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்தே அடுத்த ஐந்தாண்டுகளின் தலைவிதி அமையப் போகின்றது.


இத் தேர்தலில் நாம் இப்போது அப்படியான ஒரு கட்டத்திற்கு வந்திருக்கின்றோம். சிறுபான்மைச் சமூகங்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் யார் யாரை தமது பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப் போகின்றார்கள்? எந்த பெருந்தேசியக் கட்சிக்கு ஆணை வழங்கப் போகின்றார்கள் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் ஒரு தீர்க்கமான கட்டத்தில் நிற்கின்றோம்.

கேசரியின் இந்தப் பக்கத்தில் இதற்கு முன்னர் எல்லா விடயங்களையும் எழுதியும் பேசியுமாயிற்று. சிறுபான்மைச் சமூகங்கள் கடந்த ஆட்சிக்காலங்களில் பெற்றுக் கொண்ட பட்டறிவுகள், குறிப்பாக முஸ்லிம் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த நல்லது கெட்டதுகள், தகுதியான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் முஸ்லிம்கள் ஒரு சமூகமாக விட்ட தவறுகள் பற்றி விலாவாரியாக எழுதியாயிற்று.

அதேபோல், விகிதாசாரத் தேர்தல் முறைமையின் அடிப்படை என்ன? அதன் அனுகூலங்களை எவ்வாறு சிறப்பாக பயன்படுத்தலாம் என்பது பற்றியும், எப்பேர்ப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்? எப்பேர்;ப்பட்ட வேட்பாளர்களை ‘தியவன்ன ஓயா’ பக்கம் அனுப்பக் கூடாது என்பது பற்றியும் பல தடவைகள் குறிப்புணர்த்தியதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
இது தீர்க்கமான தருணம். இப்போது மக்கள் புள்ளடியிடுவது மாத்திரமே மீதமிருக்கின்றது. வாக்கு என்பது மக்களின் உரிமை மட்டுமல்ல, வாக்களிப்பானது நம்மீது இருக்கின்ற பாரிய பொறுப்பும் என்பதை உணர்ந்து கட்டாயம் வாக்களிக்க வேண்டும். ‘நாம் ஒரு புள்ளடி இடுவதால் பெரிதாக என்ன மாற்றம் நடந்து விடப் போகின்றது?’ என்று சோம்பேறித்தனமாக எண்ணிக் கொண்டிருக்காமல் ஒப்பீட்டுத் தெரிவின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு சரியான முறையில் வாக்களிப்பதற்கு முன்வர வேண்டும்.
முஸ்லிம்களும் சரி தமிழ், சிங்கள மக்களும் சரி கடந்த காலங்களில் மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் விட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஆகஸ்ட் 5 பொதுத் தேர்தலை கருத வேண்டும். சமூக சிந்தனையற்ற அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டுவதற்கும் தகுதியுள்ள, சிறந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்குமான ஒரு கருவியாக கையிலுள்ள வாக்கு எனும் அஸ்திரத்தை பயன்படுத்த வேண்டியது தார்மீக பொறுப்பாகும்.

நமது வாக்குரிமை

ஜனநாயகத்தின் அடிப்படையாக தேர்தல் காணப்பகின்றது. உலக நாடுகளில் ஜனநாயக வழிமுறையில் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான செயன்முறையாக ஏதோவொரு அடிப்படையிலான வாக்கெடுப்பு நடைபெறுவதைக் காணலாம். பெரும்பாலான நாடுகளில் வாழும் மில்லியன் கணக்கான மக்களுக்கு வாக்குரிமை உள்ளது. 30 இற்கு மேற்பட்ட நாடுகளில் ஒவ்வொரு வாக்காளனும் வாக்களிப்பது சட்ட ரீதியாக கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் வாக்குரிமைக்காக பெரும் போராட்டங்களும், பிரளயங்களும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றும் கூட பல இலட்சணக்கான மக்கள் உலகில் வாக்குரிமையை இழந்திருக்கின்றார்கள். சில நாடுகளில் பாலினம், இனம், சுயாட்சி, உள்நாட்டுக் கலவரங்கள் போன்ற காரணத்தால் அங்குள்ள மக்களுக்கு வாக்குரிமை மறுதலிக்கப்பட்டுள்ளது. வேறு சில ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புக்களில் வாழும் மக்கள் உள்ளடங்கலாக இன்னும் ஒரு தொகுதி மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

 

இலங்கையராகிய நமது நிலை அவ்வாறில்லை. இன்றைய தலைமுறை பிறப்பதற்கு முன்பே யாரோ போராடி அவ்வுரிமையை நமக்குப் பெற்றுத் தந்துவிட்டுப் போயிருக்கின்றார்கள். இதனால் பலருக்கு அதன் தார்ப்பரியம் விளங்குவதில்லை. வாக்குகளின் பெறுமதி உணர்ந்து, பொறுப்புடன் வாக்களிக்கத் தவறி விடுவதையும் காண முடிகின்றது. அத்துடன், 96 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவைக் கொண்ட நமது நாட்டில் வாக்குரிமையின் பெறுமதியை கணிசமான மக்கள் உணராத காரணத்தினாலேயே வாக்களிப்பு வீதமும் ஒரு எல்லையைத் தாண்டவில்லை எனலாம்.
இலங்கையில் ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமையே காணப்பட்டது. 1931ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழு கொண்டுவந்த பிரேரணையின் மூலம் இலங்கை மக்களுக்கு சர்ஜன வாக்குரிமை கிடைத்தது. உலகின் விரல்விட்டு எண்ணக்கூடிய நாடுகளிலேயே அனைவருக்குமான வாக்குரிமை கிடைத்திருந்த ஒருகாலத்தில், தென்னாசியாவிலேயே முதன்முதலாக பெண்கள் உட்பட சகலருக்குமான வாக்குரிமையை அறிமுகப்படுத்திய நாடு இலங்கையாகும். அதன்பின்னர் 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு குடியரசு யாப்புகளின் ஊடாக ஒரு அடிப்படை உரிமையாக வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

 

சுமார் 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கையில் இம்முறை 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். நீண்டதொரு இழுபறிக்குப் பிறகு ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் 16 இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். அதுபோலவே மலையகத் தமிழர்கள் உள்ளடங்கலாக கிட்டத்தட்ட 20 இலட்சம் தமிழர்களின் வாக்குகள் இருக்கின்றன.

கொரோனாவால் இழுபறி

இலங்கைப் பாராளுமன்றம் மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்பட்டு ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடாத்துவதற்கு திகதி குறிக்கப்பட்டது. இருப்பினும், உலகெங்கும் பரவிய கொவிட்-19 வைரஸ் தொற்று இலங்கையையும் ஆட்கொண்டதன் விளைவாக தேர்தலை உரிய திகதியில் நடாத்த முடியாமல் போனது. கடைசியில், பெரும் சவால்களுக்கு மத்தியில் எதிர்வரும் 5ஆம் திகதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்முறை பெருந்தேசியக் கட்சிகள், தமிழ், முஸ்லிம் கட்சிகளும் சிங்கள சிறுகட்சிகள், சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் 7452 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கின்றார்கள். அநேக மாவட்டங்களில் நீளமான வாக்குச் சீட்டுக்களும் சில மாவட்டங்களில் அகலமான வாக்குச் சீட்டுக்களும் வழங்கப்படவுள்ளன.
கொரோனா நோயில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் வழக்கத்தை விட அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் இம்முறை நிறுவப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் மையங்களில் இருப்போருக்கு விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வாக்களிப்பு மையங்களில் கடமையில் உள்ள அதிகாரிகளும், வாக்களிக்க வருகின்ற பொதுமக்களும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவானது அறிவுறுத்தல் வழங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும்.

 

எவ்வாறிருப்பினும், இம்முறை ஒரு வித்தியாசமான சூழ்நிலையின் கீழ் தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில், வாக்களிப்பு நிலைய விதிமுறைகள் மற்றும் வாக்குச்சீட்டில் புள்ளடியிடும் முறை பற்றி தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ள போதிலும் கூட, இதுபற்றி சாதாரண, பாமர மக்களுக்கு தெளிவும் வாக்களிப்பதற்கான ஊக்கமும் போதுமானளவுக்கு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அரசியல்வாதிகளும் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள்.
மக்களிடையே குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களி;ன் வாக்காளர்களிடையே தேர்தலுக்கான ஆர்வம் குறைவடைந்துள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கூறியிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. எது எவ்வாறிருப்பினும், மக்கள் தெளிவான சிந்தனையுடன் சென்று செல்லுபடியாகும் விதத்தில் வாக்களிக்க வேண்டிய தேவை அனைவருக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விட வேண்டாம்.

வாக்களிக்கும் முறை

முதலாவது விடயம், நமது உரிமையைப் பயன்படுத்துவதில் நாமே பொடுபோக்குத்தனமான, அக்கறையற்றவர்களாக இருப்பதென்பது பிழையானவர்கள் பாராளுமன்றத்திற்கு செல்வதற்கும், சரியான ஆட்சியாளர்கள் தெரிவு செய்யப்படாமல் இருப்பதற்கும் நாம் வழங்குகின்ற மறைமுக ஒப்புதலாகவே அமையும். எனவே அனைவரும் தவறாது வாக்களிக்கச் செல்ல வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாக்காளர்களும் முகக் கவசம் அணிந்து செல்வதுடன் அங்கு நடைமுறைப்படுத்தப்படும் அனைத்து விதமான சுகாதார நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். எக்காரணங்கொண்டும் அவற்றை அலட்சியம் செய்யக் கூடாது. அத்துடன் வாக்காளர்கள் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தைக் கொண்டு செல்வதுடன், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்கள் மேலதிகமாக தமது கடவுச்சீட்டுக்களையும் கொண்டுவர வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருக்கின்றது.

 

பரவலாக அதிகமான அரசியற் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றமையால் இம்முறை நீளமான, அகலமான வாக்குச் சீட்டுக்களே தரப்படும். சில மாவட்டங்களில் இரண்டு நிரல்களைக் கொண்ட வாக்குச் சீட்டுக்களும் வழங்கப்படும். வாக்குச் சீட்டில் மேலிருந்து கீழாக கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பெயர்களும் சின்னங்களும் அதற்கெதிரே புள்ளடியிடுவதற்கான ஒரு வெற்றுக் கூடும் இருக்கும். வாக்குச் சீட்டின் கீழ்ப்பகுதியில் விருப்பு வாக்கு இலக்கங்கள் இடமிருந்து வலமாக காணப்படும்.
• வாக்காளர் ஒருவர் முதலில் கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிக்க வேண்டும். அதன்படி தான் விரும்பும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவின் பெயர் மற்றும் சின்னத்திற்கு நேரெதிரே அருகில் உள்ள வெற்றுக்கூட்டில் ஒரு புள்ளடியை இடவேண்டும்.

• அதன்பின்னர் அக்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களில் தங்களுக்கு விருப்பமான ஒரு வேட்பாளருக்கு அல்லது இருவருக்கு அல்லது 3 பேருக்கு விருப்பு வாக்குகளை அளிக்க முடியும். அதற்காக கீழேயுள்ள அவர்களது விருப்பு இலக்கங்களின் மீது புள்ளடியிட வேண்டும்.
இவை இரண்டும் நடைமுறைகளும் மிக இலகுவானவை என்றாலும் வாக்களிப்பில் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

நிராகரிக்கப்படும் வாக்குகள்

இலங்கையில் ஒவ்வொரு தேர்தலிலும் கணிசமான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே வாக்களிப்பது எந்தளவுக்கு முக்கியமோ அதுபோலவே அதில் சரியான முறையில் புள்ளடியிடுவதையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே எவ்வாறான வாக்குகள் நிராகரிக்கப்படும் என்பதை முன்னறிந்து கொண்டு சரியான முறையில் வாக்களிக்க வேண்டும்.
அந்த வகையில், பின்வரும் வகைகளைச் சேர்ந்த வாக்குகள் நிராகரிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது:
• எந்தவொரு அரசியற் கட்சிக்கோ அல்லது சுயோட்சைக் குழுவுக்கோ அளிக்கப்படாத வாக்குகள்
• ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளுக்கு அல்லது சுயேட்சைக் குழுக்களுக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குகள்
• குறித்த வாக்கு எந்தக் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையிலுள்ள வாக்குகள்
• விருப்பு வாக்குகள் மட்டும் அடையாளமிடப்பட்ட வாக்குகள்
• வாக்காளர் யார் என்பதை இனம்கண்டு கொள்ளக் கூடிய விதத்தில் வாக்குச் சீட்டில் ஏதேனும் எழுதப்பட்டுள்ள வாக்குகள் போன்றன நிராகரிக்கப்படும்.
இதேவேளை, விருப்பு வாக்குகளுக்கு அடையாளமிடும் போது மூன்றுக்கு மேற்பட்ட இலக்கங்களுக்கு புள்ளடியிடப்பட்ட வாக்குகள் மற்றும் தெளிவற்ற விதத்தில் அடையாளமிடப்பட்ட வாக்குகளும் விருப்பு வாக்குகளை எண்ணும்போது கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடாத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணியாகும். அதேபோன்று வாக்குகளை எண்ணுவதையும் வெற்றியாளர்களை தீர்மானிப்பதையும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள். இப்போது மக்களுக்கு இருக்கின்ற பொறுப்பு ‘சரியான நபர்களுக்கு முறையாக வாக்களிப்பதே’ ஆகும். வீணாக யாருடனும் சண்டை பிடிப்பதோ, விவாதிப்பதோ தேவையற்ற விளைவுகளுக்கே இட்டுச் செல்லும்.

அந்த வகையில், வாக்களிப்பு இடம்பெறும் நேரமான ஆகஸ்ட் 5 காலை மணி தொடக்கம் மாலை 5 மணிவரை சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் தேர்தல் விதிமுறைகளுக்கு அடிபடிணிந்து செயற்படுவதுடன், வாக்களிப்பின் போது முதலில் ஒரு கட்சிக்கு அல்லது சுயேட்சைக் குழுவுக்கு வாக்களிப்பதுடன், விருப்பு வாக்களிக்கும் போது மூன்றுக்கு மேற்படாதவர்களுக்கு புள்ளடியிட வேண்டும் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடைசிக் குறிப்பு

இந்தத் தேர்தல் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மிக முக்கியமானது என்பதை பல தடவை வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம். அதற்கான காரணங்களும் முன்னமே விபரிக்கப்பட்டு விட்டன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் தமது கடந்தகால அனுபவங்களின் படி முஸ்லிம்கள் தீர்மானமெடுக்க வேண்டியுள்ளது. வெறும் உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்குமாக முடிவெடுக்காமல் பகுத்தறிவைப் பயன்படுத்தி சிந்தித்துச் செயற்பட வேண்டி தருணமிது.

இத்தேர்தலில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பிரதான முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். கடந்த மற்றும் அதற்கு முந்திய பாராளுமன்றத்தில் அங்கம் வகி;த்தவர்கள் உள்ளடங்கலாக, பழைய புதிய முகங்கள் களமிறங்கியுள்ளன. இதுதவிர, பிரதான கட்சிகளின் தேசியப்பட்டியல்களிலும் ஓரிரு முஸ்லிம்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
முஸ்லிம் அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான அரசியலாக கடந்த 20 வருடங்களாக சோபிக்கவில்லை. அது பெருந்தேசியத்திற்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் தலைவர்களை, அரசியல்வாதிகளை வளர்க்கின்ற கூடாரமாக மாறியிருக்கின்றது. இதனால் முஸ்லிம் சமூகத்தின் எந்தவொரு அபிலாஷையும், நீண்டகால பிரச்சினைகளும் தீர்த்து வைக்கப்படவில்லை இந்தப் போக்கினை மாற்ற வேண்டும்.

அரசியல் சமநிலையையும் பேணும் விதத்தில் தகுதியான மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மட்டுமன்றி, முஸ்லிம் சமூகத்திற்கு வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிய தலைவர்கள், மக்களை பேய்க்காட்டுகின்ற அரசியல்வாதிகள், சமூக சிந்தனையற்றவர்கள், வாயால் மட்டும் சேவைசேவை எனப் பேசுபவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், பணத்தாசை பிடித்தவர்கள், போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்டவர்கள் போன்றவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

அந்தவகையில், கடந்த காலங்களில் தகுதியற்றவர்களை தெரிவு செய்தமைக்காக பிரயாச் சித்தம் தேடும் ஒரு தினமாக ஆகஸ்ட் 5ஆம் திகதியை முஸ்லிம் வாக்காளர்கள் பயன்படுத்தத் தவறக்கூடாது. அடுத்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை எண்ணிக்கை அடிப்படையில் உறுதிப்படுத்துவது மட்டுமன்றி, தெரிவு செய்யப்படும் எம்.பி.க்கள் தகுதிவாய்ந்தவர்களாக, உருப்படியானவர்களாக இருப்பதும் அவசியமாகும்.

மக்களை அரசியல் அதிகாரத்தின் மூலம் ஆட்டிப் படைப்பவர்களுக்கும் அதேபோன்று, தமக்கு வாக்களித்த மக்களுக்கு சேவையாற்றாத எம்.பிக்களும் பாடம் புகட்டுவதற்கான இந்த வாய்ப்பு நமக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறைதான் கிடைக்கின்றது. இந்த முறை புள்ளடி இடுவதில் தவறுசெய்தால், அதைத் திருத்துவதற்கு இன்னும் நான்கு, ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
பரீட்சை ஒன்றை எதிர்நோக்கியுள்ள மாணவனுக்கு விளக்கமளிப்பது போல முஸ்லிம் வாக்காளர்களுக்கு போதுமான விளக்கங்களை கொடுத்திருக்கின்றோம். பரீட்சையில் என்ன என்ன கேள்விகள் வரும்? எவ்வாறு விடையளி;த்தால் சித்தியடையலாம் என்பது பற்றிய முழுமையான விபரங்கள் பரீட்சைக்கு முன்னமே வழங்கப்பட்டு விட்டன. ஆகஸ்ட் 5இல் பரீட்சை நடைபெறுவது மாதிரி, வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. இனி, சமூகத்தின் சித்தியும் தோல்வியும் வாக்காளர்களின் கைகளிலேயே உள்ளது.
எனவே, ஆறாம் அறிவுக்கு வேலை கொடுங்கள். தகுதியானவர்களுக்கு செல்லுபடியாகும் விதத்தில் சரியாக வாக்களியுங்கள். அதைவிடுத்து, மீண்டும் பொருத்தமற்றவர்களுக்கு வாக்களித்து விட்டு, பிறகு தலையில் அடித்துக் கொள்ளக் கூடாது. அதைத்தவிர, இனிமேல் சொல்வதற்கு வேறொன்றுமில்லை !

THANKS (வீரகேசரி – 02.08.2020)