• Home »
  • Slider »
  • முன்னுக்குப் – பின் முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றார் தவிசாளர் நௌஷாட் – கலாபூசணம் மீரா .எஸ்.இஸ்ஸடீன்

முன்னுக்குப் – பின் முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றார் தவிசாளர் நௌஷாட் – கலாபூசணம் மீரா .எஸ்.இஸ்ஸடீன்

முன்னுக்குப் – பின் முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கின்றார் தவிசாளர் நௌஷாட்

 அதாவுல்லா அணியின் அதிகரித்த செல்வாக்கு சிலருக்கு தொடை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

✍️ கலாபூசணம் மீரா எஸ்.இஸ்ஸடீன்

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் பிரசார நடவடிககைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இவ்வேளை சில பிரமுகர்கள் முன்னுக்குப்பின் சமன்பாடில்லாத முரண்பாடான கருத்துக்களை மக்கள் மத்தியில் முன்வைக்கின்றனர்.

இந்த வகையில் தூர நோக்கு மக்கள் இயக்கம் என்ற நிறுவனம் நமது மாவட்டத்தை நாமே வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் கூட்டங்களை நடாத்தி வருகின்றனர்.
இதில் பிரதான பேச்சாளராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முனனாள் நிந்தவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் “சுவிற் மஜித்|” மர்ஹூம் ம் எம்.ஐ.எம். அப்துல் மஜித் அவர்களின் புதல்வரும் முன்னாள் அமைச்சர் (பிரதி) மர்ஹூம் எம்.ஏ.அப்துல் மஜித் அவர்களின் மருமகனும் மதிப்பிற்குரிய ஏ.எம். நௌஷாட் அவர்களின் உரையை எடுத்துக் கொண்டால் அவர் குறிப்பிடும் சில விடயங்கள் சிநதனையை உராய்வது போன்று இருக்கின்றது.

சம வயதுடைய நாங்களிருவரும் இதுவரை காலமும் மிகுந்த நட்புறவோடு பழகி வருகின்றோம்.அந்த வகையில் அவரை நான் என்றும் மதிப்பவனாகவும் இருக்கின்றேன்.இருந்த போதிலும் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தன்று அநேகமான அரசியல் வாதிகள் எல்லாம் உறவுகளோடு பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற வேளையில் தவிசாளர் அவர்கள் மாவட்ட அரசியல் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் சில குழறுபடியாக இருந்தன.

அந்த வகையில் அவரின் உரையில் இருந்தே பின்வரும் விடயங்களை கூற விரும்புகின்றேன்.

1. தான் மேடை ஏறியதன் நோக்கம் எந்தவொரு அரசியல்வாதிக்கோ கட்சிக்கோ வாக்கு சேகரிப்பதற்காக அல்ல. எந்த கொந்தராத்து நடவடிக்கையும் அல்ல.பதவி மோகமோ அல்லது வேறு காரணிக்காகவோ அல்ல. என்று அடித்துக் கூறிவிட்டு நடைபெறவுள்ள தேர்தலில் டெலிபோன் சின்னத்துக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் நோக்கம் முஸ்லிம் காங்கிரஸிற்கு வக்காலத்து வாங்குவதற்காகவா? தன்னை நடுநிலையாளன் என்று கூறிக் கொண்டு மு.காவிற்காக குரல் கொடுத்தது நீதி, நியாயம், தர்மத்தை நிர்வாணமாக்கியது போலுள்ளன.

2. 2015ஆம் ஆண்டு அம்பாரை மாவட்டத்தில் ரிஷாட் பதியுதீன் உள்நுழைந்ததை அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கின்றேன். என்று கூறினீர்கள். அப்படி என்றால் 2018ஆம் ஆண்டு (மார்ச்சு காலப்பகுதி என்று நினைக்கின்றேன்) நடந்து முடிந்த பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவோடு போட்டியிட்டு தவிசாளரானது தங்களுக்கு மறந்துவிட்டது போலும்!

3. இந்தத் தேர்தலில் மயில் கட்சியோ, குதிரை கட்சியோ ஆடாது என்று கூறினீர்கள்.ஒரு மயில் கட்சியின் தவிசாளராக இருந்து கொண்டு அந்தக் கட்சிக்கு ஆதரவு திரட்டாவிடினும் பரவாயில்லை அந்தக் கட்சியினது அபேட்சகர்களினதும்; அக்கட்சியினதும் தோல்விக்கு உங்கள் நாவை கூராக்கி கத்தரிப்பது நியாயமா? உங்களது தவிசாளர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இவ்வாறு பேசி இருந்தாலும் ஒரு வேளை நியாயமாக இருந்திருக்கும்.
இன்றைய நாட்களில் ரிஷாட் பதியுதீன் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் அவரை நோகடிப்பது கவலையளிக்கிறது.

4. நீங்கள் கூறினீரகள் “ நான் அரசியல்வாதி இல்லை. – யதார்த்தவாதி என்று.” ஆம் உண்மைதான் யதாரத்தவாதி என்பவன் எப்போதுமே வெகுசன விரோதி என்பதைத் தாங்கள் அறிவீர்களா?

அ) நான் அரசியல் வாதி அல்ல என்று கூறினீர்கள். ஐந்து வயதிலேயே அரசியல் வாதியான தந்தை மஜிதின் மடியில் இருந்தவர். இளைஞனாக தாய்மாமன் மஜிதின் அன்பிற்குரியவராகத் திகழ்ந்தவர் .  மர்ஹூம் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை எதிர்த்து நீங்களும் பைசல் காசிம் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு இருந்தீர்கள் .

 

ஆ) ஐ.தே.கவின் உபதவசாளராக இருந்தவர்
இ). பிறகு மு.காவில் இணைந்து பாராளுமன்றப் பிரதிநிதியையும் வகித்தவர்.
ஈ). பின்னர் சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டீர்கள்.
உ). அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடனான உறவு.
ஊ). இப்போது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்பார்களே அப்படி சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமமான மு.காவின் டெலிபோன் ஆதரவாளர்.

இவ்வாறிருக்க நான் அரசியலவாதி அல்ல யதார்த்தவாதி என்று தாங்கள் மக்களிடம் கூறுவதை மக்கள் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்.

நான் விரும்பிய அரசியலில் இருப்பேன் , என் எண்ணப்படி நடப்பேன் யாரும் என்னைக் கட்டுப் படுத்த முடியாது.மட்டுமல்ல எந்த அரசியல் கட்சியும் எனக்கெதிராக நடவடிக்கை எடுப்பதில்லை என்று.நீங்கள் சொல்வது உண்மைதான். தானாக விலகிச் செல்பவர்களுக்கு யார்தான் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்.?

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் 1987, 1989களில் மாகாண,பாராளுமன்றத் தேர்தலில்களில் துடைத்தெறிந்த பிரதேசவாதத்தை நீங்கள் கையிலெடுத்துக் கொண்டு கல்முனை, கல்முனை என்று பிரிவினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்.மகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்களின் முகம் தெரியாமல் இலக்கத்திற்கு மக்கள் வாக்களித்தனர். 1989ல் மாவட்டத்தையே ஒரு தொகுதியாக்கி ஒரே மரநிழலின் கீழ் முஸ்லிம் சமூகத்தைத் தலைவர் ஒற்றுமைப்படுத்தினார்.

கதிரையை சூடாக்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவரைப் பற்றி நையாண்டி பண்ணிவிட்டு மறுகணம் அவருக்கே மீண்டும் வாக்கைப் போட்டு கல்முனையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறுகின்றீர்கள். நையாண்டித் தனத்திற்கும் ஒரு அளவிருக்க வேண்டுமல்லவா?

ராஜபக்ச அரசை குறை காண்கின்றீர்கள். ஆனாலும் 1977ஆம் ஆண்டு ஆடசிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்கள்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி முகத்தில் கரி பூசியவர்.. (இஸ்ரவேல் தூதுவராலயம் கொழும்பில் திறக்கப்பட்டதை அப்போதைய தலைவர்கள் ஆட்சேபித்தபோது “நான் பேயோடும் பிசாசோடும் பேசுவேன் விரும்பினால் இருக்கலாம் இல்லையேல் கதவு திறந்திருக்கிறது வெளியேறலாம்” என்று கூறியதை தாங்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலத்திலிருந்து குறிப்பாக 1960ஆம் ஆண்டு முதல் உங்கள் உறவுகள்தான் (தந்தை,மாமா) இம்மாவட்டத்தில் அரசியல் செய்தவர்கள். அம்பாரையில் முதற் தடவையாக 1960 மார்ச்சில் தான் ஒரேயொரு எம்.பி தெரிவானார்.

அந்த வகையில் கல்முனை. நிந்தவூர், பொத்துவில் தொகுதிகளில் தெரிவு செய்யப்படட மூவரும் மருதானை சாலிமார் ஹோட்டலில் தூங்கிக் கொண்டிருந்த போது அம்பாரை எம்.பி மாத்திரம் காரியங்களை நகர்த்திக் கொண்டு சென்றார்.

மர்ஹூம் அல்ஹாஜ். எம்.ஐ.எம்.மொஹிடீனிற்குப் பின்னர் நிலப்பரப்புக்கள் குடிப் பரம்பல்கள் தொடர்பில் நல்ல கருத்துக்களைத் தெரிவித்திருந்தீர்கள். (விரிவஞ்சி அவற்றை விபரிக்கவில்லை).

இதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.கல்லோயாத் திட்டம் வந்த போது ஹிங்குராணை கொண்டுவட்டுவான் தொடக்கம் காணியை வைத்திருந்த முஸ்லிம்கள் அம்பாரைப் பிரதேசத்துக்குச் சென்று குடியேறாமல் பின்தங்கி விட்டனர்.

பின்னர் 1977ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். பதுளை மாவட்டத்திற்கு மிக நெருக்கமாக இருந்த தெஹியத்தகண்டி போன்ற பிரதேசங்களை அம்பாரைத் தொகுதியுடன் இணைத்தமை பெரும்பான்மை சமூகத்தின் அதிகரித்த நிலப்பரப்புக்குக் காரணமாகும்.
1977களில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த கே.டபிள்யூ தேவநாயகம் அவர்களது செயற்பாடுகளுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றி பெற்ற உறுப்பினராக இருந்து ஐ.தே.கவுக்கு தாவிய பொத்துவில் தொகுதி எம்.பி.எம்.சீ.கனகரெத்தினம் அவர்களின் உத்வேகமான நடவடிக்கைகள் அவரது மறைவின் பின்னர் அவரது தங்கை திருமதி ரங்கநாயகி பத்மநாதன் எம்.பியின் எல்லை வகுப்பு நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் இம்மாவட்ட ஐ.தே.க எம்.பிக்கள் மூவரினதும் கையாளாகாத தனத்தினால் “எங்கள் பம்பரம் இதற்கு மேல் ஆடாது ” என்று அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாயலில் வைத்துக் கூறியவர்கள் யார் என்பதனைத் தாங்கள் அறிவீர்கள்.

இந்தப் பதிவில் நிறைய விடயங்களைப் பற்றி குறிப்பிட முடியும். ஆனாலும் சில விடயங்களைத் தவிர்த்து சிறு சிறு விடயங்களாக உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கையில் இம்மாவட்டத்தில் அமைதியாக இருந்த உங்களைப் போன்று இன்னும் சிலர் முஸ்லிம்களின் இருப்பையும் இந்த மாவட்டத்தின் வெற்றியையும் எமதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடன் களமிறங்கி இருப்பதும் அதாவுல்லாவையும் ரிஷாத்தையும் குறைத்து மதிப்பீடு செய்வதும் தகுமானதொன்றல்ல.

நானறிந்த வரையில் மொட்டுக் கட்சியுடன் நட்புறவாடிய அதாவுல்லா தேர்தல் உடன்பாட்டில் உரிய இலக்கை அடையாததனால் நான் தனித்துச் செல்கின்றேன் என்று கூறியுள்ளார். இது அவரின் நல்லெண்ணத்தைக் காட்டுகின்றது. தேர்தலுக்கு முன் கூட்டுச் சேர்ந்தவர்களில் ஒருவரைவிட்டு தானும் இன்னுமொருவரும் இணைவது நியாயமாகாது என்று அதாவுல்லா எண்ணி இருக்கக் கூடும். ஆகவே அதாவுல்லா தனித்து அவரது கட்சியில் குதித்துள்ளார். இந்தக குதிரைப் படை அணி இன்று முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல அதாவின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக தமிழ் சிங்கள மக்களையும் ஈர்த்துள்ளது.

இந்தத் தேர்தலில் சிறுபான்மை அபேட்சகர்கள் மத்தியில் அதிக விருப்பு வாக்குகளைப் பெறக் கூடிய போட்டியாளராக அதாவுல்லா விளங்குவார் என மக்கள் நம்புகின்றனர். தேர்தல் ஆரம்பிக்கும் போது தனித்து விடப்பட்ட அதாவுல்லா தோல்வியடைந்து அரசியிலில் அநாதையாகி விடுவார் என்று நினைத்த தரப்புகளின் எண்ணங்களெல்லாம் தவிடு பொடியாகி இன்றைய நிலையில் பார்க்கும் போது அதாவுல்லாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பது தொடை நடுக்கத்தை ஏறபடுத்தி இருக்கக் கூடும்.

2015ல் தோல்வி அடைந்திருந்த அதாவுல்லா இரண்டாம் கட்ட அரசியல் அவதாரம் எடுத்திருப்பதும் அவரோடு இம்மாவட்டம் முழுவதும் அணி திரண்டிருப்பவர்களினால் தமது அரசியல் இருப்புக்கு அச்சுறுததல் ஏற்படும் என்ற மனவெழுச்சிப் போராட்டத்தின் உச்ச வெளிப்பாடு தான் இன்றைய நாட்களில் நடைபெறும் தெருக் கூத்து நாடகங்களாகும்.

இந்தப் பதிவில் இடம்பெற்றவைகள் “இருப்பை தக்க வைப்போம் மாவட்டத்தை வெல்ல வைப்போம்” என்று கூறிய பிரமுகர்களின் உரைகளில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளும் பதில்களுமாகும்.

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-