IPL போட்டிகளை ரசிகர்கள் இன்றி நடத்த முடியுமா? என்பது குறித்து BCCI விரைவில் முடிவு செய்யும் என்கின்றார் கங்குலி

கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடந்தால் வெளிநாட்டு வீரர்கள் வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது விமான போக்குவரத்து தொடங்கி உள்ளதால், ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த முடியுமா? என்பது பற்றி  ஆலோசிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.

ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் என அனைவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பதாகவும் கங்குலி தெரிவித்தார்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என சமீபத்தில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். எனவே, நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இது தொடர்பாக பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்யும்’ என்றும் கங்குலி தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெறாவிட்டால் ரூ. 4000 கோடி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும், ஐபிஎல் நடைபெறாவிட்டால் சம்பளத்தில் கை வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் கங்குலி ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது.