ஊரடங்கு உத்தரவினை மீறி கொள்கலன் லாரிகளில் பதுங்கி சென்ற பயணிகள் – கையும் களவுமாக பிடித்த போலீசார்

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 727 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. மேலும், இந்த வைரசுக்கு இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.    
இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளது.  மருத்துவம், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் என சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே வாகனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களில் வேலை, கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிக்கியுள்ளனர்.   
இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இருந்து தேசிய நெடுச்சாலை வழியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நேற்று இரண்டு கொள்கலன் லாரி நுழைய முயன்றது. அந்த லாரிகளை மகாராஷ்டிராவின் யவட்மல் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் டிரைவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 
விசாரணையின் போது லாரி டிரைவர்கள் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் கண்டெய்னரை திறந்து ஆய்வு செய்தனர். லாரிகளின் கண்டெய்னர்களை திறந்த போது அதன் உள்ளே 30-க்கும் அதிகமானோர் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் கண்டெய்னரில் பதுங்கி இருந்தவர்கள் அனைவரும் தெலுங்கானாவில் இருந்து வந்தது, சொந்த ஊரான பஞ்சாப் செல்லவே இந்த பயணம் மேற்கொண்டதையடும் கண்டுபிடித்தனர்.