இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 727 ஆக உயர்வு

பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி உள்ளது. இவற்றில் சிலரின் உயிரையும் குடித்து விட்டது.

அந்தவகையில் மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா, இமாசல பிரதேசம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மொத்தம் 16 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்து விட்டனர். இதில் நேற்று மட்டுமே 6 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகரின் ஹைதர்போராவை சேர்ந்த 65 வயது முதியவர் உயிரிழந்ததன் மூலம், காஷ்மீரில் முதல் பலி பதிவாகி உள்ளது.

இதைப்போல நாடு முழுவதும் கொரோனாவுக்கு ஆட்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் நேற்று 727 ஆக உயர்ந்து விட்டது.

இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கேரளாவிலும் சுமார் 120 பேர் கொரோனாவின் கொடூர கரங்களில் சிக்கி உள்ளனர்.

குஜராத்தில் நேற்று மேலும் 4 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 43 ஆனது. டெல்லியிலும் இதுவரை 36 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.