தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார்

தப்பித் தவறியாவது கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதியாக இருக்கவிடமாட்டார். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (04) திங்கட்கிழமை மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது;

பேரினவாத சக்திகள் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சிலரை இராஜினாமா செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், நாங்கள் ஒட்டுமொத்தமாக பதவிகளைத் துறந்து சமூகத்தையும் முஸ்லிம் தலைமைகளையும் காப்பாற்றினோம். அதுமட்டுமின்றி, றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையையும் முறியடித்தோம்.

 

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வந்திருந்தால், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலர் அவருக்கு எதிராக வாக்களிப்பதற்கு காத்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையும் இதுதொடர்பில் கலங்கி நின்றது. அவர்மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு, அதில் தோல்வியடைந்து பதவியை துறப்பதிலிருந்து அவரை காப்பாற்றியிருக்கிறோம்.

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஆறுதலடையும் வகையில் எங்களது இராஜினாமா அமைந்தது. எதிர்வரும் தேர்தல்களிலும் ஒற்றுமையாக ஒரே கட்சியின் கீழ் போட்டியிட வேண்டுமென்று என்ற அழுத்தங்களும் மக்கள் மத்தியில் உள்ளன. அதன் சாத்தியத்தன்மை தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை.

வில்பத்து விவகாரத்திலும் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக இனவாத சக்திகள் வேண்டுமென்றே குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மன்னார், முசலி போன்ற பல இடங்களில் பாதுகாக்கப்பட்ட வன பிரதேசங்களை அழித்து வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டதாக, நாடெங்கிலும் இனவாத ரீதியாக விசமப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈற்றில் நாங்கள் பதவியில் அமர்த்திய ஜனாதிபதியே, அப்பிரதேசங்களை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக அங்கீகரித்து ரஷ்யாவில் இருந்தவாறே, வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்து இருந்த நிலைமையை இன்னும் மோசமாக்கினார்.

இந்நிலையில், றிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸ் வெளிப்படையாக பிரசாரம் செய்ய முற்பட்டால், பேரினவாத சக்திகள் மேலும் உக்கிரமடையும் என்பதை அறிந்திருந்தோம். ஜனாதிபதி செயலகத்தின் அங்கீகாரத்துடன், வன பரிபாலன சபையின் மேலதிகாரிகளையும் பேராதனை பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர்களையும் துறைசார் நிபுணர்களையும் அழைத்துக்கொண்டு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம்.

வில்பத்து விவகாரத்தின் பின்னணியில் இருக்கின்ற பேரினவாத கும்பலின் விசமக் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவும், அதன் உண்மைத் தன்மையை நாடறியச் செய்யவேண்டும் என்ற நோக்கிலும் நாங்கள் அதனைச் செய்தோம். ஆனால், அங்கும் சிலர் மாமூல் அரசியல்வாதிகளாகத்தான் செயற்பட்டார்கள்.

தவறியேனும் மாற்றுத்தரப்பு ஆட்சியைக் கைப்பற்றினால் கடந்தகாலத்தில் முஸ்லிம்கள் அனுபவித்த இன்னல்களைவிட இரட்டிப்பான விளைவுகளை சந்திக்க நேரிடும். அந்தக் கும்பலின் நோக்கமே, ஆட்சியைக் கைப்பற்றி நிரந்தரமாக தன்னகத்தே வைத்துக்கொள்வதாகும். அதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்வார்கள்.

ஒருவேளை கோட்டபாய ஆட்சிக்கு வந்தால், மஹிந்த ராஜபக்ஷ அவரை நீண்ட காலத்துக்கு ஜனாதிபதி ஆசனத்தில் இருக்கவிடமாட்டார். தனக்கு கிடைக்காத பதவி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்பதில் அவர் உறுதியானவர். முதற்கட்டமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பார்கள்.

சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் என்பதால், அன்றிலிருந்தே தனது தந்தையின் நிழலிலிருந்து ஜனாதிபதி கதிரைக்காக தயார்படுத்தப்பட்டவர் அல்ல. ராஜபக்ஷவின் குமாரர்களை போல் இவருக்கு வாய்ப்புகள் இருக்கவில்லை. தந்தையின் ஆசீர்வாதத்திலும் தயவிலும் அரசியல் செய்ய வேண்டிய வாய்ப்பு சஜித் பிரேமதாசவுக்கு கிட்டவில்லை.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருக்கிறோம். ராஜபக்ஷவின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டையில் சஜித் பிரேமதாச வெற்றிபெறப் போகின்றார். எனவே, அங்கும் பாரிய மாற்றமொன்று நிகழவிருக்கின்றது.

நாட்டுப்பற்று பற்றி மேடைகளில் அள்ளிவீசி விளையாடுபவர்கள் உண்மையில் நாட்டுப்பற்று கொண்டவர்கள் அல்ல. தமிழர்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தின் விமான நிலைய பெயர்பலகையில் தமிழுக்கு முதலிடம் வழங்கப்பட்டதை விமல் வீரவன்ச விளாசித் திரிகிறார். வெறிந்தனம் பிடித்த இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்குமென்று சிந்தித்துப் பாருங்கள்.

முஸ்லிம் சமூகம் முழுமையாக வெறுக்கின்ற வேட்பாளர் ஒருவரை வெற்றிபெறச் செய்வதற்கு பக்கவாத்தியமாக ஹிஸ்புல்லாஹ்வும் தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் ஒன்றுசேர்ந்து இராஜினாமா செய்தால், அவர் மீண்டும் அந்த இனவாதக் கும்பலின் வெற்றிக்காக தேர்தலில் போட்டியிடுகிறார்.

எமது சமூகம் மிகத்தெளிவாக சிந்தனையுடன் வாக்களிப்புகளில் ஈடுபட வேண்டும். முஸ்லிம் தலைமை எடுத்த முடிவின் மீது நம்பிக்கை வையுங்கள். சஜித் பிரேமதாசவின் வருகையின் மூலம் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும். நாம் புதிய யுக மாற்றத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்