• Home »
  • Slider »
  • கல்முனையை காவுகொடுக்க ஹக்கீம் யார்? மக்களிடம் ஓர் அவசர வேண்டுகோள் -வை எல் எஸ் ஹமீட்

கல்முனையை காவுகொடுக்க ஹக்கீம் யார்? மக்களிடம் ஓர் அவசர வேண்டுகோள் -வை எல் எஸ் ஹமீட்

வை எல் எஸ் ஹமீட்

எனதன்பின் கல்முனை சொந்தங்களே!

அமைச்சர் ஹக்கீமின் சாய்ந்தமருது உரையைக் கேட்டதிலிருந்து மனம் சஞ்சலமாக இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தது சுமார் மூன்று மாதங்களில் பாராளுமன்றம் பெரும்பாலும் கலையும். அதனால் சாய்ந்தமருது வாக்குகளைக் குறிவைத்து அதை அடைவதற்காக கல்முனையின் ஒரு பகுதியை தமிழர்களுக்கு தாரைவார்க்க அவர் தயாராகிவிட்டது; சாய்ந்தமருது உரையில் தெளிவாகின்றது.

ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் சாய்ந்தமருதில் இருந்து 15,000 வாக்குகள் கட்டியாக கிடைக்கும், கல்முனைக்குடியில் 5,000 வாக்குகள்தான் கிடைக்கும்.

FILE Image

 

கல்முனைக்காக சாய்ந்தமருது வாக்குகளை இழக்கமுடியாது; என்றுகூறிய வீடியோ வலம் வந்துகொண்டிருக்கிறது.

 

ஆண்டாண்டு காலம் நாம் பாதுகாத்துவந்த கல்முனை நகரம் நமது கைகளைவிட்டு போவதற்கான சமிக்ஞை தெரிகிறது. நீங்கள் தொடர்ச்சியாக அளித்துவந்த வாக்குகளுக்கு ஹக்கீம் விரைவில் கைகமாறு செய்யப்போகிறார்; என்பது புரிகிறது.

எனவே, உங்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள்:

பிரதேச செயலகத்திற்கும் உள்ளூராட்சி சபைக்கும் தொடர்பில்லை. கல்முனையின் பெரும்பகுதியைப் பறிகொடுக்காமல் ஹக்கீம் செயலகப் பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை. Win-Win situation ஐப் பற்றிப் பேசுகிறார். அதாவது கல்முனையில் தமிழருக்கு பாதி- முஸ்லிம்களுக்கு பாதி.

இந்நிலையில் எதிர்வரும் 6ம் திகதி கல்முனைக்கு வரும் ஹக்கீமிடம் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து பின்வரும் கோரிக்கையை முன்வையுங்கள்.

1. செயலகப் பிரச்சினை அப்படியே இருக்கட்டும். இன்ஷாஅல்லாஹ், பொதுத்தேர்தலுக்குப்பின் அதனைப் பார்ப்போம்.
2. கல்முனையை 1987ம் ஆண்டிற்கு முன்பு இருந்ததுபோல் நான்காகப் பிரிக்கட்டும்.

இவை இரண்டிற்குமான உத்தரவாதத்தை அவர் பகிரங்கமாக 6ம் திகதிய மேடையில் தரவேண்டும்.

தயவுசெய்து சிந்தியுங்கள்.

சாய்ந்தமருதுக்கு ஒரு சபை கொடுப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அடுத்த உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு பிடிவாதமாக கல்முனையை இழந்தாலென்ன? அது இருந்தாலென்ன? எங்களுக்கு சபை அவசரமாக வேண்டும்; என்பது அவர்களது நிலைப்பாடு. அவர்களது வாக்கு வேண்டும்; என்பது ஹக்கீமினதும் அவருடைய ஆட்களினுடையதும் நிலைப்பாடு. இதற்கு கல்முனை பலியாகப்போகிறது.

இந்த சபையை இவ்வளவு அவசரமாக பெறாவிட்டால் சாய்ந்தமருதுக்கு ஏற்படப்போகின்ற பாதிப்பு என்ன? ஏன் முஸ்லிம்களின் முகவெற்றிலையை அந்நியவருக்கு தாரைவார்த்தாவது அவசர அவசரமாக சபை பெறவேண்டும்; என நினைக்கிறார்கள். நினைத்தாலே வேதனையாக இருக்கிறது.

இது தொடர்பாக நிறைய எழுதிவிட்டேன்; பேசிவிட்டேன். அவர்களுடைய பூட்டுப்போடப்பட்ட உள்ளங்களைத் திறக்கும் சக்தி நமக்கு இல்லை; இறைவன் அவர்கள் உள்ளத்தில் கல்முனை தொடர்பாக ஈரத்தை ஏற்படுத்தினாலேயொழிய.

பக்கத்து ஊரும் கல்முனைக்கு என்ன நடந்தால் எங்களுக்கென்ன? எங்களுக்கு சபைவேண்டும்; என்ற நிலைப்பாடு.

நீங்கள் வாக்களித்த கட்சியும் வாக்குகளைக் கணக்குப்பார்த்து எங்கே கூடுதலாக வாக்குக்கிடைக்கிறதோ அவர்களுக்கே நீதி என்கிறது.

இவற்றிற்கான விலை கல்முனையில் ஒரு பகுதியை இழப்பது.

நமது நியாயங்களை முன்வைத்து எப்போதோ தமிழ்த்தரப்பின் வாய்களை மூடவைத்திருக்கவேண்டிய ஹக்கீம் தன்நாக்கில் பலமில்லாததால் இன்று கல்முனையை காவுகொடுக்கத் தீர்மானித்துவிட்டார்.

கல்முனையை காவுகொடுக்க ஹக்கீம் யார்?

அழுதபிள்ளைதான் பால்குடிக்கும் என்பார்கள். சாய்ந்தமருதில் அழுதார்கள். இன்று கல்முனையை காவுகொடுத்தாயினும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற உங்கள் தானைத்தளபதி ஹக்கீம் முனைகிறார்.

கல்முனையில் நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். கொழும்புக்கு ஒரு குழு வந்து பேசினால் எல்லாம் நடந்துவிடாது. ஊர்மக்கள் விடயத்தைக் கையில் எடுக்கவேண்டும்.

தயவுசெய்து கல்முனை பறிபோவதற்குமுன் செயற்படுங்கள். பள்ளிவாசல் நிர்வாகங்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியில் வாருங்கள்.

அவர்கள் புதிய, ஒரு சிறிய அடைவுக்காக இவ்வளவு போராடுகிறார்கள். அதற்காக ஒரு பெரிய இழப்பை சந்திக்கும் விளிம்பில் நீங்கள் இருந்தும் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

எனவே, எதிர்வரும் 6ம் திகதி பகிரங்க மேடையில் ஹக்கீம் வாக்குறுதி தரவேண்டும். சாய்ந்தமருதுக்கு சபை கொடுக்கட்டும். எதுவித ஆட்சேபனையுமில்லை. அதுவும் நமது ஊர்தான். ஆனால் 1987ம் ஆண்டைய எல்லையால் நான்காகப் பிரிக்கவேண்டும்.

1987ம் ஆண்டு கல்முனையின் தோள்களின் இரு பக்கமும் மூன்று சபைகள் ஏற்றப்பட்டன. இப்பொழுது ஒன்றை மட்டும் இறக்கி வைப்பதை கல்முனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் ஏற்படுகின்ற imbalance ஐ கல்முனை சுமக்கமுடியாது.

அடுத்த ஊர்களுக்கு சபை கேட்பதற்கு இருக்கும் உரிமைபோன்று கல்முனைக்கும் அதனது அன்றைய தனியான சபையைக் கேட்கின்ற உரிமை இருக்கின்றது. ஒருவரை ஒருவர் விமர்சிக்கவேண்டிய அவசியமில்லை.

இங்கு எல்லைப்பிரச்சினை எதுவுமில்லை. புதிதாக எல்லை எதுவும் கேட்கவில்லை. அன்று இருந்த எல்லையையே கல்முனை கேட்கின்றது.

எனவே, கல்முனை சொந்தங்களே! தயவுசெய்து ஒன்றுபட்டு எதிர்வரும் 6ம் திகதி பொதுமேடையில் இந்த இரண்டு வாக்குறுதிகளையும் ஹக்கீமிடமிருந்து பெறுங்கள்.

ஒன்று: செயலகப்பிரச்சினையை பொதுத்தேர்தல் முடியும்வரை ஒத்திவைப்பது.
இரண்டு: உள்ளூராட்சி சபை 1987 இல் இருந்ததுபோல் மீண்டும் பிரிப்பது.

இப்பொழுது நீங்கள் செயற்படவில்லையாயின் கல்முனையின் பாதியை ஹக்கீம் தமிழருக்குத் தாரைவார்த்ததன்பின் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாலோ, ஆர்ப்பரிப்பதாலோ எதுவும் ஆகப்போவதில்லை.

செயற்படுங்கள்!!!

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-