ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த டிரம்ப் தயாரா..?

 

சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால் ஈரான் இருப்பதாக அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் ஈரான் இதனை மறுக்கிறது. இதற்கிடையே சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பதில் தாக்குதலை நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டத்தை தயாரித்து அமெரிக்க ராணுவ தலைவர்கள் ஜனாதிபதி டிரம்பிடம் வழங்கினர்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தின் மீது, ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல், நேரடி ராணுவ தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு டிரம்ப் மறுத்துவிட்டதாக வெள்ளைமாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘அமெரிக்கா இனி எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது என மக்களுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்ற டிரம்ப் விரும்புகிறார். அதுமட்டும் இன்றி ஈரானுடன் போர் ஏற்பட்டால், அது பொருளாதாரத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்ற கவலை அவருக்கு உள்ளது’’ என்றார்.