“ஹக்கீமின் சேதாரமில்லாத விட்டுக் கொடுப்பு “ தொடர்பான கருத்து தொடர்பில் கல்முனை முஸ்லிம்களே உஷாரடையுங்கள் – YLS ஹமீட்

வை எல் எஸ் ஹமீட்

‘கல்முனை பிரச்சினைக்கு “ இரதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்” உடனடியாகத் தீர்வு காணவேண்டும்’ என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது.

“ இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு” என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் ‘ கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன்சமிக்சையா அது? எனும் பலமான சந்தேகம் எழுகின்றது.

கட்சிக்குள் கடுமையான ஒரு உள்ளகப்போட்டி நடைபெறுவதாகவும் ஏற்கனவே செல்வாக்கிழந்த அடுத்த ஊரின் ஆதரவை மீளப்பெற்றுக்கொள்வதில் உரிமை கோருவது யார்? என்ற போட்டி நிலவுவதாவும் செய்திகள் அடிபடுகின்றன.

அது அவர்களது கட்சியின் உள்விவகாரம். அது நமது கவனத்திற்குரியதல்ல. ஆனால் நமது பயமெல்லாம் எதை விட்டுக்கொடுத்தாவது அடுத்த ஊரின் பிரச்சினையையும் சேர்த்து அவசர தீர்வுகண்டு செல்வாக்கை கையகப்படுத்தும் உள்ளகப்போட்டியில் கல்முனையின் ஒரு பகுதியை இழந்துவிடுவோமோ! என்பதாகும்.

எல்லை விடயத்தில் கட்சியின் உள்ளே உறுதியான நிலைப்பாடு இல்லை; என்ற சில செய்திகள் ஏற்கனவே கிடைத்ததனால்தான் சில தினங்களுக்கு முன் சூசகமாக சில குறிப்புகளைச் செய்திருந்தேன். இந்நிலையில் “ தீர்வு” என்ற பெயரில் கல்முனையின் கணிசமான பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் உள்ளத்தை கவலைகொள்ளச் செய்கிறது.

எனவே, கல்முனை மக்கள் சற்று உசாரடையுங்கள். “ கல்முனை” விடயத்தில் அந்தக் கட்சி ஒரு பாராமுக நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது; என்பது இத்தனை ஆண்டுகள் எதுவித அபிவிருத்தியுமில்லாமல் கல்முனை பாழ்கிடப்பதில் இருந்து இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. எனவே, நாம் அசந்தால் “முதலுக்கே சேதாரமாகலாம்”.

பாண்டிருப்பு, சே குடியிருப்பு, ம சேனை, தி மடு தமிழருக்கு செயலகம் தேவை என்றால் அதனைக் கொடுக்கட்டும்; ஆட்சேபனை இல்லை.

கல்முனை வாழ் முஸ்லிம், தமிழர், சிங்களவர்க்கு பி செயலகமும் மாநகர சபையும் இருக்கும்போது இன்னுமென்ன செயலகத்தை தமிழர் கோரமுடியும்?

கல்முனையில் இருக்கும் தமிழருக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் உடன்பாடு இல்லையெனில் அவர்கள் இடம்பெயர்ந்து பாண்டிருப்பு பிரதேச செயலக எல்லைக்குள் சென்று வாழலாம். அது அவர்களது உரிமை. அதைவிடுத்து, கல்முனையை உடைத்து பாண்டிருப்பு செயலகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல் அதற்கு “ கல்முனை வடக்கு எனப் பெயர் சூட்டுவது எந்தவிதத்தில் நியாயம்.

எனவே, “விட்டுக்கொடுப்பு” என்ற சொல்லே “ கல்முனைக்கான ஆப்பாகும். ஏன் அமைச்சர் ஹக்கீம் எந்த சொற்றொடரைப் பாவித்திருக்கின்றார்; என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அவர் தமிழ்த்தரப்பிற்கு தெட்டத்தெளிவாக சொல்லவேண்டிய பதில், “ கல்முனையில் செயலகம் இருக்கும்போது கல்முனைத் தமிழர் இன்னுமொரு பிரசத்திற்கான செயலகப் பிரிவுக்குள் வரவிரும்பினால் அவர்கள்தான் செல்லவேண்டுமே தவிர கல்முனை உடைத்துக்கொண்டு செல்லமுடியாது; என்பதாகும்.

இதை எப்பொழுதே சொல்லி பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும். வரலாற்றில் முஸ்லிம்களின் எந்தப்பிரச்சினையையும் தீர்க்கவில்லை; என்பதற்காக கல்முனையில் ஒரு துண்டைப் பறிகொடுத்து ஒரு தீர்வு கல்முனைக்கு வேண்டாம்.

எனவே கல்முனை மக்கள் உசாரடையுங்கள்.

M S காரியப்பர், M C அஹமட், A R மன்சூர், மறைந்த தலைவர் போன்றவர்கள் பாதுகாத்துத் தந்த கல்முனையைப் பறிகொடுத்துவிடவேண்டாம்.
அது இலங்கை முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்.

இத்தனை நியாயங்களையும் தன்னகத்தேகொண்ட ஒரு கல்முனையையே பாதுகாக்கமுடியாத முஸ்லிம் அரசியல் முஸ்லிம்களின் எதைப் பாதுகாக்கப்போகின்றது.

இலங்கையில் எங்கு முஸ்லிம்களுக்கு பாதிப்பு நடந்தாலும் அதற்கெதிராக தலைமைத்துவம் வழங்கி போராடவேண்டிய கல்முனை தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருந்தால் நிலைமை என்ன?

எனவே, உசாரடையுங்கள்.

கல்முனை பிரச்சினைக்கு இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து உடனடியாக தீர்வு காணவேண்டும் – றஊப் ஹக்கீம்