கல்முனை உப பி செயலக விடயமும் உச்சக்கட்ட பலயீன முஸ்லிம் அரசியலும்

வை எல் எஸ் ஹமீட்

கல்முனை உப ( தமிழ்) பி செயலகம், தமிழருக்கு அதற்கான ஒரு தேவை இருக்கின்றது; என்பதற்காக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டதல்ல.

வட கிழக்கில் 80 களின் ஆரம்பத்தில் ஆயுதப்போராட்டம் உக்கிரமடையத் தொடங்கியபோது, சிங்கள அரசின்கீழ் ஆளப்படும் இனமாக தாம் இருக்கவிரும்பாத அதேவேளை மொத்த வட கிழக்கிலும் தாமே ஆளும் இனமாக இருக்கவேண்டும்; இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம்கள் ஆளப்படும் இனமாகவே இருக்கவேண்டும்; என்பதில் தமிழ் ஆயுதப்போராட்டம் தெளிவுடன் இருந்தது.

அன்று தந்தை செல்வா, கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகு வழங்கப்படவேண்டுமென்பதை கொள்கைப் பிரகடனமாக செய்தார். அவ்வாறான, முஸ்லிம்களுக்கான ஒரு தனி அலகிற்கு அடையாளப்படுத்தப்படக்கூடிய ஒரே பிரதேசமாக தென்கிழக்கே இருந்தது.

வட கிழக்குப் பிரிப்பு சாத்தியமே இல்லை; என்ற ஒரு தோற்றப்பாடு இருந்தபோது மாற்று வழியில்லாமல் தென்கிழக்கை அடிப்படையாகக்கொண்ட தனி அலகைக் கோரினார் மறைந்த தலைவர்.

வட கிழக்கு தனக்கான ஆளுகைப் பிரதேசம் என்பதை உறுதிப்படுத்த, தமிழ் ஆயுதப்போராட்டத்திற்கு தென்கிழக்கு முஸ்லிம்களை நிர்வாகரீதியாக பலயீனப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

இந்தப்பின்னணியில்தான் நிந்தவூரில் இருந்து காரைதீவைப் பிரித்து உப செயலகமும் கல்முனை இரண்டாக உடைத்து தமிழருக்கான உப செயலகமும் உருவாக்கப்பட்டன.

குறிப்பாக, கல்முனை உப செயலகம் ஆயுதமுனையில் பிரிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில், வட கிழக்கு இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்த அதேவேளை பிரேமதாசவையே அசைத்துப்பார்க்கக்கூடிய அளவு சக்திவாய்ந்த முதலமைச்சராக வரதராஜப்பெருமாள் இருந்தார்.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் அதற்கெதிராக எதையும் செய்யக்கூடிய நிலையில் இருக்கவில்லை. மறுபுறம் அது ஒரு சாதாரண உப செயலகம் என்பதால் , வேளாண்மை வருடத்திற்கு இரண்டுபோகம், இனக்கலவரம் நாலுபோகம் என்று கூறுமளவு சூழ்நிலையும் ஆயுதக்கலாச்சாரமும் நிலவியபொழுது அதற்கெதிராக எழுப்பப்படும் கோசங்கள் பாரிய உயிரழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய வாய்ப்பும் இருந்தது.

இருந்தபோதிலும் உப செயலகமாக தோற்றம்பெற்ற காரைதீவு செயலகம் முழுமைபெற ஆட்சேபனை தெரிவிக்காத முஸ்லிம்தரப்பு, கல்முனைவிடயத்தில் ஆட்சேபித்தது. அப்பொழுதே முஸ்லிம்களின் தலைநகரான கல்முனையை முஸ்லிம்கள் விட்டுத்தரமாட்டார்கள்; என்பதைத் தமிழ்த்தரப்பு புரிந்திருக்க வேண்டும்.

அதேநேரம் ஆயுதபலம் இருந்தபோதும் மறைந்த தலைவர் இருந்தவரை தரமுயர்த்தல் கோரிக்கைக்கு தமிழர்கள் பெரிய வீரியம்கொடுக்கவில்லை அந்தப் பெருவிருட்சத்தின் பலத்தை உணர்ந்திருந்ததனால்.

யுத்த நிறைவின்பின் மூடப்படவில்லை
————————————————-
2009 இல் யுத்தம் நிறைவடைந்ததன்பின் இதனை மூட முஸ்லிம் தரப்பு முயற்சிக்கவும் இல்லை. ஆகக்குறைந்தது 2015ம் ஆண்டு வழங்கிய ஆதரவுக்கு பகரமாக எந்தவொரு முஸ்லிம் கட்சியும் ஒரு ஒப்பந்தமும் செய்யவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அதில் இதனை மூடுவது தொடர்பாக அல்லது 1987 ம் ஆண்டு எல்லையால் நான்காகப் பிரிப்பது தொடர்பாக ஒரு சரத்தை உள்வாங்கியிருக்கலாம். ( எமது கட்சியில் ஒரு ஒப்பந்தம் செய்யவேண்டும் என்று வலியுறத்தப்போய் கை வையாத அளவு சண்டை பிடித்த வரலாற்றை முன்னர் எழுதியிருக்கின்றேன்.)

இந்நிலையில் சிறிய முனகல்போல் அவ்வப்போது தமிழ்தரப்பினர் தரமுயர்த்தல் கோரிக்கையை அரசிடம் முன்வைப்பதும் அதனை முஸ்லிம் தரப்பு முறியடிப்பதும் என்ற செயற்பாடு தொடர்ந்தது.

பிரச்சாரம்
—————-
இதேவேளை தமிழ்த்தரப்பு தங்களது தரமுயர்த்தல் கோரிக்கை தொடர்பான பிரச்சாரங்களை பாராளுமன்றத்திலும் வெளியிலும் மிகவும் லாவகமாக, தந்திர வார்த்தைஜாலங்களால் அலங்கரித்து பரப்பிவந்தார்கள்.

இவற்றில் பிரதானமாக இத்தனை ஆண்டுகாலமாக இது உப அலுவலகமாக இயங்கிவருகிறது. இதனை தரமுயர்த்தவே கேட்கின்றோம்; புதிதாக எதையும் கேட்கவில்லை; என்பது ஒன்றாகும். வெளிப்பார்வையில் எல்லோருக்கும் இது நியாயமாகவே தோற்றியது. ஏன்? அம்பாறை மாவட்ட முஸ்லிம்களில் பலருக்கே இது நியாயமாகத்தான் பட்டது. அவர்கள் புதிதாக எதையும் கேட்கவில்லையே! இருப்பதைத்தானே தரமுயர்த்தி கேட்கின்றார்கள். என்பதுதான் அவர்களின் பார்வையாக இருந்தது.

இந்த அடிப்படையில்தான் சிலமாதங்களுக்கு முன் ஜே வி பி உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் தமிழருக்கு ஆதரவாக இதுதொடர்பாக பேசும்போது, கல்முனைப் பாராளுமன்ற உறுப்பினர் “ எல்லைப் பிரச்சினை இருக்கிறது” என்று பதிலளிக்க அதற்கு ஜே வி பி உறுப்பினர்; “அங்கு ஒரு எல்லைப் பிரச்சினையும் இல்லை; நீங்கள் உங்கள் அரசியலுக்காகவே தடைசெய்கிறீர்கள்” என்று கூறினார்.

அதாவது எங்கள் பக்க நியாயங்களை தாம் தெட்டத்தெளிவாக பாராளுமன்றிலோ, வெளியிலோ கூறாததால் தமிழ்த்தரப்பின் தந்திரப் பிரச்சாரத்தை உண்மையென்றே எல்லோரும் நம்பினார்கள்.

ஆகக்குறைந்தது, அவ்வாறு தரமுயர்த்துவதானால் எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும்; அவர்கள் மொத்த நகரத்தையும் கோருவதுதான் பிரச்சினையே தவிர தரமுயர்த்துவது பிரச்சினையல்ல; கல்முனை வரலாற்று ரீதியாக முஸ்லிம்களின் நகரம்; என்ற விடயங்கள் வெளியில் கொண்டுவரப்படவில்லை.

1897ம் ஆண்டிலிருந்து கல்முனையின் எல்லை; வடக்கே தாளவட்டுவானும் தெற்கே மஹுமூத் மகளிர் கல்லூரி வீதியும் என்பது வெணிக்கொணரப்படவில்லை.

கல்முனை என்ற அடையாளத்திற்கு வெளியேயுள்ள பாண்டிருப்பு, மணற்சேனை மற்றும் நிலத்தொடர்பற்ற சேனைக்குடியிருப்பு, பெரியநீலாவணையின் ஒரு பகுதி, திரவந்தியமடு போன்ற பிரதேசங்களை இணைத்து அதற்கு முத்துமணியாக கல்முனையின் பிரதானபகுதியான முஸ்லிம் வர்த்தக கேந்திரப்பகுதியை, முஸ்லிம் அரசியல்வாதிகளால் நூறுவருடங்களுக்குமேலாக ஒவ்வொன்றாக கட்டியெழுப்பிய அரச நிறுவனங்களை உள்ளடக்கிய கல்முனையின் இதயத்தை கல்முனையுடன் தொடர்பில்லாத பிரதேசங்களுடன் இணைத்து செயலகம் கோருவது எந்தவகையில் நியாயம்? என்ற கேள்வி முன்வைக்கப்படவில்லை.

தங்களது நியாயங்களை ஏன் இவர்கள் 1897இல் இருந்து ஆயுதப்பலம்பெற்ற 1989 வரை எழுப்பவில்லை; என்ற வினா தொடுக்கப்படவில்லை.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக ( இடையில் ஒரு சிறிய சந்தர்ப்பத்தைத் தவிர்த்து) கல்முனை, முஸ்லிம் உயரதிகாரிகளால், முஸ்லிம் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டபோது கல்முனை முஸ்லிம்களின் பெரும்பான்மைப் பிரதேசம் என்பதை அவர்கள் ஏன் மறுதலிக்கவில்லை? என்று கேட்கப்படவில்லை.

வட கிழக்கை அவர்கள் ஆள அதிகாரப்பகிர்வை வழங்கவேண்டும்! வட கிழக்கை இணைக்கவேண்டும்! சமஷ்டி வேண்டும்! இவையெல்லாவற்றிற்கும் முஸ்லிம்கள் ஆதரவு கொடுக்கவேண்டும்! ஆனால் 1897ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்கள் நிர்வகித்து வருகின்ற கல்முனையின் முஸ்லிம்களின் வர்த்தகப் பிராந்தியத்தை கல்முனைக்கு அப்பாலுள்ள பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்புடன் சேர்த்து நிர்வகிக்க வழங்கவேண்டும்; என்பது நமது கிராமிய பேச்சுவழக்கில் “ பழம்பொலிசில்” கூட எடுபடக்கூடிய நியாயமா? என்ற கேள்வி அவர்களை நோக்கி வீசப்படவில்லை.

இந்த நாட்டில் தமிழர் அண்ணளவாக 12%, முஸ்லிம்கள் 10%. 12 வீத தமிழர் வட கிழக்கை ஆளவேண்டும். யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு நகரங்களையெல்லாம் ஆளும்போது முஸ்லிம்கள் ஆண்டாண்டுகாலமாய் நிர்வாகம் செய்த கல்முனை நகரத்தைக்கூட அவர்கள் நிர்வகிக்கக்கூடாது? என்பதை மனிதர்களாகத்தான் கூறுகிறீர்களா? என்று அவர்களிடம் கேட்கப்படவில்லை.

30 வருடம்
—————
30 வருடங்கள் இயங்கியதை தரமுயர்த்த்தானே கேட்கிறோம்? என்கிறீர்கள். ஆயுதபலத்தில் அடாத்தாக உருவாக்கி வைத்திருந்துவிட்டு அதற்கு 30 வருடம் எனக்கூறுவது எந்த வகையில் நியாயம். ஏதாவதொன்றை பலவந்தமாக தன்னிடம் வைத்திருந்துவிட்டு இத்தனை ஆண்டுகள் வைத்திருந்த நான் ஏன் அதன் சொந்தக்காரனாகக்கூடாது; என்று கேட்பது நியாயமா? என்றும் கேட்கப்படவில்லை.

29: 29 குறிச்சிகள்
————————-
முஸ்லிம்களுக்கு 29 குறிச்சிகள் இருக்கின்ற அதேவேளை தமக்கும் 29 குறிச்சிகள் இருக்கின்றன. எனவே, எங்களுக்கு தனியாக ஒரு செயலகம் தருவதில் என்ன பிழை? எனக் கேட்கிறார்கள்.

இது வெளித்தோற்றத்தில் நியாயமாகவேபடுகிறது.
இதைத் தடுக்கின்ற முஸ்லிம்களே அநியாயக்காரர்கள் போன்ற ஒரு தோற்றப்பாட்டையே இது கொடுக்கின்றது. ஆனால் 64% வீதமுள்ள முஸ்லிம்களுக்கும் 36% வீதமுள்ள தமிழர்களுக்கும் எவ்வாறு 29:29 குறிச்சிகள் உருவாக்கப்பட்டன? அதற்குப் பாவிக்கப்பட்ட தந்திரம் என்ன? என்பதைக்கூற மாட்டார்கள்.

கல்முனையின் பிரதான வர்த்தகமையப் பகுதிக்கு கிழக்கே 5701 முஸ்லிம்களும் 5623 தமிழர்களும் வாழும்போது, முஸ்லிம்களுக்கு 3 குறிச்சிகள் மட்டும் இருக்க, எவ்வாறு அன்று ஆயுத பலத்தின் பின்புலத்தில் அந்த 5623 தமிழர்கட்கு 11 குறிச்சிகள் உருவாக்கப்பட்டன; என்பதை வெளியில் கூறமாட்டார்கள்.

கூறினால் அவர்கள் தரப்புக் கோரிக்கையின் நியாயமற்றதன்மை வெளிப்பட்டுவிடும். எனவே, அதனை மறைத்து கல்முனையில் எங்களுக்கு 11 குறிச்சிகள் இருக்கின்றன. கல்முனை எங்களுக்கே சொந்தம் என்று பீடிகை போடுவார்கள்.

இந்த வர்த்தக மையப்பகுதி ஒரு இரட்டை அங்கத்தவர் வட்டாரமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கல்முனையில் விஷேட பொதுக்கூட்டம் போட்டு முஸ்லிம்கள் இந்த வட்டாரத்தில் குறிப்பாக, ஒரு திசையில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தைப்பற்றிப் பேசினேன்.

சாய்ந்தமருதில் வேட்பாளர்களை நிறுத்தாத கட்சிகளெல்லாம் கல்முனை வாக்குகளைக்கூறுபோட கல்முனையில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள். உண்மையில் அவர்கள் மனச்சாட்சி உள்ளவர்களாக இருந்திருந்தால் எங்கு வேட்பாளர்களை நிறுத்தினாலும் கல்முனையில் நிறுத்தியிருக்கக்கூடாது.

விளைவு மேற்படி இரட்டை வட்டாரத்தில் முஸ்லிம் வாக்குகள் பிரிந்ததன் காரணமாக தமிழ்த்தரப்பு வெற்றிபெற்றது. சட்டத்தின் கோலத்தால் இரண்டு ஆசனங்களையும் அவர்களே பெற்றார்கள். இன்று அதையும் கல்முனைக்கு சொந்தம் கொண்டாட ஆதாரமாக காட்டுகிறார்கள்.

இந்த நியாயங்களை நாங்கள் பாராளுமன்றிலோ, வெளியிலோ பேசவில்லை.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக:
——————————————
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முஸ்லிம் பெரும்பான்மை அலகில் 5000 தமிழர்கள் இருக்கமுடியாது? என்பது அவர்களது நிலைப்பாடானால் அது மொத்த வட கிழக்கிற்கும் மொத்த நாட்டிற்கும் பொருந்தவேண்டுமே! அது எவ்வாறு கல்முனைக்கு மாத்திரம் பொருந்தமுடியும்? அவ்வாறாயின் ஆகக்குறைந்தது மொத்த வட கிழக்கிலாவது தமிழர்களும் முஸ்லிம்களும் ஏன் பிரிக்கப்படக்கூடாது? என்ற கேள்வியை நாம் எழுப்பவில்லை.

மட்டுமல்ல, அவர்களது இந்த நிலைப்பாடு அதிகாரப்பகிர்வுக்கு முரணானது. ஏனெனில் கிழக்கு மாகாண நிர்வாகம் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்ததாகவே பெரும்பாலும் இருக்கும். கல்முனையில் 5000 முஸ்லிம்களும் 5000 தமிழர்களும் இணையமுடியாது; என்றால் கிழக்கு மாகாணத்தில் பல லட்சம் முஸ்லிம்களும் தமிழர்களும் எவ்வாறு இணைய முடியும்?

கல்முனையில் 5000 தமிழர்கள் முஸ்லிம் பெரும்பான்மை நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் வடக்கில் எவ்வாறு ஒரு லட்சம் முஸ்லிம்கள் வட மாகாண தமிழ் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள முடியும்? யாழ்ப்பாண மாநகராட்சியில் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? திருகோணமலை நகராட்சியில் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளை நாம் எழுப்பவில்லை.

வெறுமனே, எல்லைப் பிரச்சினை, எல்லைப் பிரச்சினை எனக்கூறி காலத்தைக் கடத்தினோம். அவர்கள் தங்களது சூட்சுமங்களை மறைத்து தமது நியாயமற்ற கோரிக்கையை நியாயமான கோரிக்கையாக பறைசாற்றினார்கள். மற்றவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

போதாக்குறைக்கு சுமந்திரன் அதிர்வில் வந்து எனது வீட்டில் வைத்து கல்முனை எம் பி “ உங்களது கோரிக்கை நியாயமானதுதான்; என ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார். உங்களது கோரிக்கை நியாயமற்றது. இதுதான் நியாயம் என்று ஏன் அவருக்கு பதில் கூறமுடியவில்லை; என்பது புரியவில்லை.

இவ்வாறு முஸ்லிம் அரசியலின் பலயீனம் அனைத்து நியாயங்களும் நம்பக்கம் இருந்தும் நியாமற்ற அவர்களது கோரிக்கையை துடைத்தெறிய சக்தியற்று அலைந்து திரிக்கின்றோம். இந்நிலையில் இப்பொழுதான் மெதுமெதுவாக நமது பக்க நியாயங்களை அடுத்தவர்கள் புரிய ஆரம்பித்திருக்கிறார்கள். அதனை, அண்மைய பிரதமரின் வாக்குறுதி காட்டியது.

நோயை முற்றவிட்ட பிறகு வைத்தியம் செய்ய விளைந்து கொண்டிருக்கின்றோம். நோயை குணப்படுத்துவோமா? நோய்க்குப் பலியாகுவோமா? என்பது எதிர்வரும் நாட்களில்தான் தெரியவரும். ஆனாலும் நாம் சந்தித்தபோது பிரதமர் தந்த வாக்குறுதியும் அதன்பின் நிகழ்ந்த கணக்காளர் நியமனத்திற்கான அனுமதியும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றது.

அதேநேரம் கிடைக்கின்ற சில தகவல்கள் கவலைதரக்கூடியதாக இருக்கின்றன. இவற்றை அடுத்த ஆக்கத்தில் பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ்.