• Home »
  • Slider »
  • தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …

தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …

நன்மாராயம்
*************
தம்பி அன்ஸில் அஸ்ஸலாமு அலைக்கும்!

உங்கள் மீதான அன்புடனும் அக்கறையுடனும் சமூகத்தின் மீதான கவனிப்புடனும் இதனை எழுதுகிறேன்.

நீங்கள் பாலமுனை கடற்கரையோரமாக ‘ரோந்து’ சென்ற ஆமிக்காரர்கள் முஸ்லிம் மக்கள் சிலரை தாக்கியமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு செய்த செய்தியை வாசித்தேன். இலங்கை சிங்களப் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை சிங்கள பொலிசில் முறைப்படி முறைப்பாடு செய்தால் நீதி கிடைக்கும் என்ற உங்களது ஈமானின் (நம்பிக்கையின்) பலத்தை மெச்சுகிறேன்.ஆனாலும்; பாதுகாப்பு நிலை கொதி நிலையில் இருக்கும் காலத்தில் புத்திசாதுரியமாக தகவல்களைத் திரட்டி அதற்கேற்ற வகையில் அணுகு முறைகளை மேற்கொள்வது அவசியம் என்பதை சட்டத்தரணியாகிய நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள்.

இதனை அறியாமலிருந்தால் அல்லது அறிந்திருந்தும் வெற்றுக் கோசமிட்டு ஜனரஞ்சக செய்கைகள் மூலம் அரசியல் செய்து மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் என்றால் மடையர்கள் கூட்டத்தைச் சேர்ந்த மடைதிறந்த மனிதர்கள் என் போன்றோர் என்னதான் செய்யலாம்?

பயங்கரவாதி ஸஹ்ரான் பாலமுனையில் Career guidance என்ற பெயரில் கிழக்கைச் சேர்ந்த சுமார் 500 முஸ்லிம் இளைஞர்களுக்கு வகுப்பெடுத்துள்ளார். ஸஹ்ரானின் லப்டொப் பாலமுனையிலிருந்தே மீட்கப்பட்டது.இந்த வகுப்பில் கலந்து கொண்டவர்களின் பெயர்ப்பட்டியலை இராணுவம் தேடி எடுத்துள்ளதாக அறிகிறேன்.இதனால்தான் பாலமுனையில் இராணுவக் கண்காணிப்பு அதிகமாக உள்ளது. எந்த நாட்டு இராணுவமாக இருந்தாலும், இராணுவத்தின் உளவியல் பொதுவானது.தமக்கு சந்தேகம் உள்ள பகுதியில் வாழும் அனைத்து மக்களும் பெரும்பான்மை அப்பாவிகள் உட்பட தமக்கு எதிரானவர்களாகவே அவர்களை இராணுவம் பார்க்கும். அப்படிப் பார்த்தால்தான் தமது இலக்கை அடைய முடியும் என அவர்கள் ஈமான் கொள்கிறார்கள். அல்லது அப்படி ஈமான் கொள்ளுமாறு ‘தஹ்வா’ செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் இன,மத,நிற வாத உறுப்பினர்களும் அங்கே உள்ளனர். இராணுவம் முதலில் திட்டும் முறைக்கும் பின்னர் அடிக்கும் உதைக்கும் தேவைப்படாவிட்டாலும்,தேவைப்படாவிட்டாலும் சுட்டுக் கொல்லும்.

நீங்கள் தவ்ஹீத் இயக்க உறுப்பினர் என்று உண்மையையும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர் என்று பொய்யையும் சொல்லும். எந்த பொய்யையும் பன்மையான உண்மை என நிரூபிப்பது மூன்றாம் உலகில் கடினமானதா என்ன? நிரூபிக்கப்படாதவர்கள் இருபது வருடங்களாக நமது சிறைகளில் வாடவில்லையா? இரண்டு நாட்களுக்கு முன்னர்தானே முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் கதிர்காமரின் கொலையில் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர் நிரூபிக்கப்படாமலே இறந்து போனார்.

இனி, ஷரீஆ சட்டம் முழுவதுமாக சரி என்கிற இலங்கை முஸ்லிம் மக்கள் மற்றும் இயக்கங்கள் எனும் அதிகாரத்துக்கும் ஷரீஆ சட்டம் முழுவதுமாகப் பிழை என்கிற முஸ்லிமல்லாத மக்கள், இயக்கங்கள் மற்றும் அரசு, அரசாங்கம் ஆகிய அதிகாரத்துக்கும் இடையிலான போர்தானே இலங்கையின் எதிர்கால அரசியல் இராணுவ பொருளாதார விடயமும் வாழ்வும்!

சோர்வற்று வறுமை வாழ்வு வாழத் தயாரான அனைத்து இலங்கையரும் நம்மவரே!

பஷீர் சேகு தாவூத் 

Ex minister

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-