பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைக்கும் 
முஸ்லிம்கள் மீதான நெருக்குவாரங்கள்
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்
 
– பிறவ்ஸ்
–––––––––––––––––––––––––––––
அலரி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு
–––––––––––––––––––––––––––––
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலினால் நாடு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும் காயமடைந்தோரும் பெரும் சோகத்துக்கு ஆளாகியுள்ளனர். அதுமாத்திரமின்றி, முஸ்லிம் சமூகமும் இதனால் பெரும் அதிர்ச்சிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளது.
நாடளாவிய ரீதியில் முப்படையினரும் சிறப்பான முறையில் தேடுதல் நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் சிவில் சமூகம் அரசியல் சமூகமும் பூரண ஆதரவை வழங்கி வருகின்றன. இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகளின்போது ஊடகங்களை அழைத்துச் செல்லும்போது, சாதாரண விடயங்கள்கூட பெரிதுபடுத்தப்பட்டு சித்தரித்துக் காட்டப்படுவதால் அவை மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்க வழிவகுக்கும். 
சிறிய விடயங்களை ஊடங்களில் மிகைப்படுத்தி காண்பித்து, அதன்மூலம் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்கள் மீண்டும் மனம் நோகாதபடி நடந்துகொள்ள வேண்டும். இதற்காக தேடுதல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு நாங்கள் கோரவில்லை. இதனால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதனையே நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
முஸ்லிம் மக்கள் மீதான சந்தேகத்தில், அப்பாவிகள் பலர் குற்றமிழைத்தவர்களாக சித்தரிக்கப்படும் சூழல் இதன்மூலம் உருவாக்கப்படலாம் என்பதில் நாங்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும். இந்த சிறிய பயங்கரவாதக் குழுவின் வெளிநாட்டு சக்திகளை கண்டறிய வேண்டும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் வழங்கும். 
முஸ்லிம் சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் துளியளவும் ஆதரவும் அனுதாபமும் இல்லாத சிறிய பயங்கரவாத கும்பலை முழுமையாக அழித்தொழிப்பதற்கு முஸ்லிம்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இப்படியான சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளையும் சந்தேகத்தை உருவாக்கி பயங்கரவாதிகளுக்கு அனுதாபம் தேடுகின்ற சூழலுக்கு ஒருபோதும் இட்டுச்செல்லக் கூடாது. 
இதுவரையும் அனுதாபமில்லாக ஒரு சிறிய குழுவினருக்கு அனுதாபம் தேடிக்கொடுக்கின்ற ஒரு நடவடிக்கை இந்த தேடுதல்கள் மாறிவிடக் கூடாது. அப்பாவிகள் மீது குற்றம்சுமத்தி அவர்களை மன உழைச்சலுக்கு ஆளாக்காமல் சரியான முறையில் குற்றவாளிகளை அடையாளம்காண வேண்டும். இதனை கவனத்திற்கொண்டு பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
சமூக மட்டத்திலும் சமய மட்டத்திலும் தேவையில்லாத பழிச்சொல்லுக்கு ஆளாக்குகின்ற அடிப்படையில் முஸ்லிம்கள் செயற்படுன்றனர் என்ற கருத்தாடல் எழும்பிவிடாமல், மக்களின் உணர்வுகளை மதித்து பாதுகாப்பாகவும் கவனமாகவும் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு முஸ்லிம்கள் பல வழிகளும் உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கி வருகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்தை ஆதரிக்காமைதான் இதற்கு காரணமாகும். இந்நிலையில் மக்கள் மத்தியில் தேவையில்லாத பயம், பீதியை ஏற்படுத்துவதற்கு ஊடகங்களும் பாதுகாப்புத் தரப்பும் காரணமாக இருந்துவிடக் கூடாது.
இப்படியான தேடுதல் நடவடிக்கைகள் ஏனைய பிரதேசங்களில் நடைபெற்றால், இதைவிட அதிகமான பொருட்கள் கைப்பற்றப்படலாம். இதனால்தான் ஆயுதங்களை கையளிப்பதற்கு அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது. இதனால் சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படலாம். மூதாதையர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற புராதன பொங்கிஷங்கள் கூட, இன்று ஆயுதங்களாக கணிக்கப்பட்டு அவை பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. 
எல்லா சமூகத்திலும் குற்றவாளிகள் இருக்கின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள். ஆனால், பயங்கரவாதத்தை எந்த சமூகமும் ஆதரிப்பதில்லை. எனவே, பயங்கரவாதத்தையும் ஏனைய குற்றங்களையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.
தற்போது கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் எனக் கருதிவிட முடியாது. அவர்களில் ஒருசிலர் மாத்திரமே பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இவர்களில் சாதாரண குற்றம்புரிந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உரிய முறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும்.
அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை 90 நாட்கள் வரை தடுத்துவைத்து விசாரிக்க முடியும். அதற்கான முழுப்பொறுப்பும் பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் நாங்கள் எவ்வித தலையீடுகளையும் செய்யப்போவதில்லை.
வீடுகளில் முஸ்லிம்கள் வாசிக்கும் சஞ்சிகைகள் கூட இன்று பாதுகாப்புத் தரப்பினால் கைப்பற்றப்படுகின்றன. உதாரணமாக பின்லேடனின் புகைப்படத்துடன் ஒரு ஆக்கம் தமிழிலோ அல்லது அரபியிலோ இருந்தால், அதன் அர்த்தம் தெரியாமல் அதை பயங்கரவாத புத்தகமாக கருதமுடியாது. அது பயங்கரவாதத்துக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட புத்தகமாகவும் இருக்கலாம்.
இப்படியான புத்தகம், சஞ்சிகைகளை விசாரிக்கும் அதுதொடர்பில் தெளிவுபடுத்தக்கூடிய துறைசார்ந்த நிறுவனங்களின் உதவியை பாதுகாப்புத் தரப்பினர் பெற்றுக்கொள்ள வேண்டும். அல்லது அதனை அடையாளம் காணக்கூடியவர்கள் தேடுதல் நடவடிக்கைகளின்போது உடனிருக்க வேண்டும்.
இந்த தீவிரவாதக் குழுவினர் 150–200 பேர் வரை இருக்கலாமென உளவுத்துறை நம்புகிறது. முஸ்லிம்கள் எப்போதும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கின்றனர். தேவையில்லாத செயற்பாடுகள் மூலம் சிறிய குழுவுக்கு ஆதரவாக, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற ஒரு சூழ்நிலையை யாரும் உருவாக்கிவிடக்கூடாது.
பள்ளிவாசல்களில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவை என்ன நோக்கத்துக்காக அங்கு கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். பள்ளிவாசலுக்கு ஆயுதங்கள் எப்படி வந்தன, ஏன் வந்தன, அவற்றை யார் கொண்டுவந்தார்கள் என தீவிரமாக ஆராயப்பட வேண்டும்.
நாட்டில் 9 ஆயிரம் பள்ளிவாசல்கள் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், 2500 பள்ளிவாசல்கள் மாத்திரமே இலங்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்னும் பதிவுசெய்யப்படாத பள்ளிவாசல்கள் 300 அளவில் இருக்கின்றன. பதிவுசெய்யாத பள்ளிவாசல்கள் விடயத்தில் தீர்மானமெடுக்கும் அதிகாரம் முஸ்லிம் சமய அமைச்சுக்கு உள்ளது. இந்த விடயத்தில் யாரும் குழப்பமடைய வேண்டாம். இவற்றை அரசாங்கம் சரியான முறையில் ஒழுங்கமைக்கும்.
முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து நேரம் தொழுகையில் ஈடுபடவேண்டும். பள்ளிவாசல்கள் தூரத்தில் இருந்தால் ஐந்து நேரம் அங்கு சென்று வருவது மிகவும் சிரமமாக இருக்கும். இதனால்தான் அருகருகில் பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
இலங்கையிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு நிதி எவ்வாறு கிடைக்கிறது, அது எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்து பள்ளிவாசல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஏதும் குளறுபடிகள் இந்தால் அதன் நம்பிக்கையாளர் சபையை விசாரிக்கும் உரிமை திணைக்களத்துக்கு உள்ளது. 
இதன்பின் சகல பள்ளிவாசல்களும் நெறிப்படுத்தப்பட்ட ஒரு கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படும். பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்ட நிபந்தனைக்கு முரண்பட்டால் அவற்றை தடைசெய்யும் அதிகாரம் திணைக்களத்துக்கு இருக்கின்றது. அவ்வாறு தடைசெய்யப்பட்ட பள்ளிவாசல்களின் விபரங்களை வக்பு சபையிடம் பெற்றுக்கொள்ள முடியும். 
இஸ்லாமிய மார்க்க கல்வி புகட்டப்படும் மத்ரசாக்களின் பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். அதற்கான பூர்வாங்க வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிரும் நிலையில்தான் இந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது மத்ரசாக்களின் பாடத்திட்டம் முஸ்லிம் சமய அமைச்சினால் ஒருங்கமைப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஏதாவது பள்ளிவாசல்களில் தீவிரவாத கருத்துகள் பேசப்பட்டால் முஸ்லிம்கள் அவற்றை அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு கூறியுள்ளனர். இப்படியான தகவல்கள் முஸ்லிம்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்றதை உளவுத்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. மார்க்கத்தின் பெயரால் மாற்று சமூகத்துக்கு எதிராக தீவிரவாதக் கருத்துகளை பரப்புவோரை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. தீவிரவாதக் கருத்துக்களை பரப்புவோரை முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்கின்றனர்.
சமய வழிபாட்டுத் தளங்களுக்குள் நுழையும்போது அதற்குரிய கெளரவத்தை கொடுக்கவேண்டும். சப்பாத்துகளை அணிந்துகொண்டும், நாய்களுடனும் பள்ளிவாசல்களுக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் மிகவும் பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கிறோம்.
புனித ரமழான் காலம் நெருங்கியுள்ள சூழலில் நள்ளிரவு தாண்டியும் ஆண்களும் பெண்களும் பள்ளிவாசலில் மார்க்க கடமைகளில் ஈடுபடுவார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலைய கருத்திற்கொண்டு பெண்களை பள்ளிவாசலுக்கு வரவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்களை சோதனையின் பின்னரே பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கிறோம். எங்களது சமூகத்தையும் நாங்களே பாதுகாக்க வேண்டியுள்ளது.
ஏனென்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தேவாலயங்கள், விகாரைகள், பள்ளிவாசல்கள் என்ற தரம்பிரித்து தாக்குதல் நடாத்துவதில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் மூலம் ஈராக்கில் பள்ளிவாசல்களே அதிகளவில் அழிக்கப்பட்டன என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களின் பள்ளிவாசல்கள் தடைசெய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் மாற்று மதங்களை நோக்கி விசமப் பிரசாரங்களை மேற்கொள்ளும்போதே அவர்களிடமிருந்து பெரும்பாலானோர் ஒதுங்கியுள்ளனர். இந்த பள்ளிவாசல்கள் நீண்டகாலம் கண்காணிப்பில் இருந்துவந்தது. இதனை பொறுப்புவாய்ந்தவர்களுக்கு அறிவித்தும் அவர்கள் அசமந்தப் போக்குடன் நடந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நாங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளிலிருந்து நாங்கள் தவிர்ந்துகொள்ள விரும்பவில்லை. இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அசமந்தப்போக்குடன் செயற்பட்டுள்ளனர். ஆனால், யாரும் இவர்களுக்கு அனுசரணை வழங்கவில்லை. அதேசமயம் யாரிடமிருந்தும் இவர்களுக்கு அனுதாபம் இல்லை என்பதையும் உறுதியுடன் கூறுகின்றேன்.
விடுதலைப் புலிகளுக்கு தனியான பாரிய பிரதேசம் இருந்தது. அவர்களிடம் தனிப் படைகள் இருந்தன. அவர்கள் கெரில்லா தாக்குதல்களை நடத்தினார்கள். அத்துடன் அவர்களுக்கு மக்கள் ஆதரவும் இருந்தது. ஆனால், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நின்றுநிலைக்கும் சூழல் இல்லை. ஏனென்றால் அவர்களுக்கு சமூக ஆதரவோ, அரசியல் ஆதரவோ இல்லை. இதனால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. 
ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒரு அடிப்படைவாதக் குழுவாகும். அவர்களை அடியோடு பிடுங்கியெறிவது நாட்டுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்யும் பேருதவியாகும். 
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்