இலங்கையின் முஸ்லிம் தேசிய அரசியலில் அதாஉல்லா ஒரு தங்கப்பாத்திரம் என்கின்றார் சித்திக் காரியப்பர்

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
—————————-

முன்னாள் அமைச்சர் கௌரவ அதாவுல்லாஹ் அவர்களின் தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முக்கியஸ்தருமான உதுமாலெவ்வை உட்பட பலர் தாங்கள் வகித்த பதவிகளிலிருந்தும் கட்சி அங்கத்துவத்திலிருந்தும் முற்று முழுதாக வெளியேறியமை கவலை தரும் விடயமே.

முரண்பாடுகள், மனத்தாங்கல்கள் கட்சிகளுக்குள் ஏற்படுவது சாதாரண விடயம். பலர் வெளியேறுவதும் பலர் உங்வாங்கப்படுவதும் அரசியல் தளத்தில் மாமூலனாவை.

ஆனால், இன்றைய நிலையில், தேசிய காங்கிரஸில் இவ்வாறானதொரு நிலைமை, பிளவு ஏற்பட்டிருக்கவே கூடாது. இரண்டு தரப்பையும் ஒற்றுமைப்படுத்தி கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென்பதற்காக அதிகாலை 2.00 மணிக்குக் கூட தொலைபேசியில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேசியவன் நான். ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை தீவிரமாக முன்னெடுத்திருந்தேன்.

கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் கௌரவ ஏ.எல்.எம் அதாவுல்லாஹ் அவர்களுடனுடம் கட்சியின் முதுசொமான உதுமாலெவ்வை அவர்களுடனும் இந்த விடயம் தொடர்பில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசினேன். அதனை அவர்கள் நிச்சயமாக அறிவார்கள்.

 

எனது முயற்சிகள் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் செயற்பட்டேன். ஆனால், அனைத்தும் விழலுக்கு இறைத்த வீணான நீராகிப் போனமை எனது மனதை தொடர்ந்தும் வருடிக் கொண்டிருக்கிறது.

நான் தேசிய காங்கிரஸை சேர்ந்தவன் அல்ல. ஆனால், கௌரவ அதாவுல்லாஹ்வின் கட்சி சிதைவடையக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன். அதாவுல்லாஹ்வின் குரல் அக்கரைப்பற்றிலிருந்துதான் ஒலித்தாலும் அது இந்த நாட்டில் வாழும் முழு சமூகத்துக்குமான குரலாகவே அமையும்.

அவர் உள்வாங்கி வெளியிடும் சூடான காற்றுக் கூட முஸ்லிம் துரோகத் தனங்களைச் சுட்டெரிப்பதாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒருவர் இலங்கையின் முஸ்லிம் தேசிய அரசியலில் ஒரு தங்கப் பாத்திரம். எத்தனை தடவைகள் புடம் போட்டாலும் தன் நிறம் (தன் கொள்கை மாறாத) மாறாத ஒருவர்.

அண்மையில் தேசியக் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பலரும் கட்சித் தலைமையுடன் முரண்பட்டே விலகினார்களே தவிர, அதாவுல்லாஹ்வை சமூக அக்கறை அற்ற தலைமை என விமர்சித்து, குற்றஞ்சாட்டி எவரும் விலகவில்லை. அதனை அவர்களே வெளிப்படையாக இன்றும் தெரிவித்து வருகின்றனர். இதுதான் உண்மையும். எதிரிகளாலும் ஒருவன் நேசிக்கப்படுகிறான் என்றால் அவன் சரியாக உள்ளான் என்பதே உண்மை.

எது எப்படியிருப்பினும் பகலில் விளக்கைத் தொலைத்து விட்டு இரவில் அதனைத் தேடும் நிலைமை இன்று எதிர்கொள்ளப்பட்டுள்ளது. விளக்கைத் தொலைத்தவர்கள் மெழுகு திரியை ஏற்றும் போதுதான் நிச்சயமாக அதாவுல்லாஹ் என்ற விளக்கின் பிரகாசத்தைப் புரிந்து கொள்வர்.

-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்