அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை நினைவூட்டிய இன்றைய நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

 

 

அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பை நினைவூட்டிய இன்றைய நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவம் .

அவை மிருகங்கள், நரமாமிசம் புசிக்கும் காட்டேரிகள்…..

நியூசிலாந்தின பள்ளிவாசலில் எடுக்கப்பட்ட வீடியோவைப் பார்த்தேன்.

இதே போன்று தான் அன்றும், ஒருவேளை இன்றைய நாட்களில் அது நடந்திருந்தால் முகநூலில் அதுவும் கூட பலரும் பொங்கி எழவும் பக்கம் பக்கமாக கட்டுரைகள் கவிதைகள் எழுதி தங்கள் சம்முவ அக்கறையை அள்ளிப் பொளிந்திட ஒரு சூப்பர் சமாச்சாரமாக இருந்திருக்கும், துரதிஷ்டம் என் போன்ற சிலருடைய கண்களுக்குள் மட்டுமே மீட்சியற்று பதிவாகிக் கிடக்கிறது.

நண்பர் Gazzaly AJ அவர்களின் வீட்டில் அதிகாலை வரை தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு சாய்ந்திருந்தோம். சுபஹுக்கு இகாமத் சொல்லப்பட்டு சில நொடிகளில் பாரிய குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. பள்ளிவாசல் ஒலியெழுப்பியின் பாங்கோசை காதுகளைக் கிழித்துக் கொண்டு வர பள்ளிக்குள் தான் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்து மாவடிச் சந்தியில் இருந்து பெரிய பள்ளிக்கு ஓடிச்சென்று சேர்ந்தோம். புகைமூட்டம் அப்போதும் பள்ளியைவிட்டு அகன்றிருக்க வில்லை. மிம்பர் அருகிலேயே பலர் உடல்சிதறி உயிரை விட்டிருந்தனர். பெரும்பாலும் தொழுக்காக நின்றிருந்த அனைவருக்கும் பலத்த காயங்கள் இருந்தன. தவழ்ந்து கொண்டே எல்லோரும் தப்பிக்க முயன்று கொண்டிருந்ததால் பள்ளிவாசலின் தரை முழுக்க இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. அந்த இந்த வெள்ளத்தில் என்றும் எங்களோடு அன்பைப் பரிமாறிக் கொள்ளத் தவறாத Mushahith Jalaldeen அவர்களின் மாமாவும் இருந்தார். இரத்தம் தோய்ந்த சிவப்பிகிப் போன வெள்ளை ஆடையில் அவரைக் கண்டதும் எங்களை அறியாமலே அழுது ஓலமிட்டோம்.

ஆத்திரம் மேலிட்டு நிதானம் இழக்கும் நிலைக்கே வந்திருந்தோம், யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்கவும் முடிந்தது, திருப்பித் தாக்கிடவும் போதிய பலம் இருந்தது. ஆனாலும் நாங்கள் செய்யவில்லை. நிதானமாகவே வழிநடத்தப் பட்டோம். பதுங்கி வந்து தாக்குதலை நடத்திய மிருகங்களைப் பழிதீர்க்க பிள்ளையார் கோயிலில் வழிபாட்டுக் கொண்டிருக்கும் நாகம்மாளோ சுந்தரமூர்த்தியோ எப்படி ஈடாகமுடியும் என்பதை உச்சிமண்டையில் ஆணி அடித்தாற்போல் பகுத்தறிவு குடைந்து கொண்டிருக்க ஒருகனம் சர்வமே ஸ்தம்பித்து இப்போது பள்ளிக்குள் குண்டு வீசியவனின் சிந்தனைச் சூத்திரம் எதுவாக இருக்கும் என்பதை அறியமுயன்றேன்?

முடியவில்லை.

அவை மிருகங்கள், நரமாமிசம் புசிக்கும் காட்டேரிகள்.

அன்று ஜனாஷா தொழுகைக்காக ஊரே கூடியது, அழுது வடித்துப் பிரார்த்தனை செய்தோம். அதே இரவு ஒன்பது மணிச் செய்தியில் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருந்தார்.

யாவும் முற்றும்

கானொளி இணைக்கப்பட்டுள்ளது.

Ajmal lebbe