சிலாவத்துறையிலிருந்து கடற்படையினர் வெளியேறுவார்களா? (எழுத்து – முகுசீன் றயீசுத்தீன்)

முகுசீன் றயீசுத்தீன்-

சிலாவத்துறை – வட மாகாணத்தில் கடற்படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் கிராமமாகும். பல்வேறு முக்கியத்துவமிக்கதும் பழைமை வாய்ந்ததுமான சிலாவத்துறை வட மாகாணத்தில் முஸ்லிம்களைப்பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு பிரதேசமான முசலியின் தலைநகரமாகும்.

1990 ஆம் ஆண்டு வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சிலாவத்துறை முஸ்லிம்கள்புத்தளம் கொழும்பு போன்ற இடங்களில் தஞ்சமடைந்தனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து சிலாவத்துறைமக்கள் மீள்குடியேற முயற்சித்த போது அழிவடைந்த தமது வீடு வாசல்கள் இருந்த இடத்தில் கடற்படையினர் முழுமையாக முகாமமைத்திருந்ததால் மீள்குடியேற்றம் சாத்தியமாகவில்லை.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட போது சுமார் 220 குடும்பங்களாக இருந்த சிலாவத்துறை மக்கள் தற்போது சுமார் 800 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இதில் சுமார் 250 குடும்பங்கள் மாத்திரம் தற்போது சிலாவத்துறையில்மீள்குடியேறியுள்ளனர். இன்னும் சுமார் 550 குடும்பங்கள் புத்தளம் கொழும்பில் மீள்குடியேறக் காத்திருக்கின்ற நிலையில்அவர்களில் சுமார் 220 குடும்பங்களின் சொந்த- பரம்பரைக் காணிகள் தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில்இருக்கின்றன.

சென்ற 2017 ஏப்ரல் 5 ஆம் திகதி கேள்வியொன்றிற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிலாவத்துறை தொடர்பாகதரமற்றதும் ஆதாரமற்றதுமான சில தகவல்களை வெளியிட்டிருந்தார். பிரதமர் தமது உரையில் சிலாவத்துறையில்கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 34 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 6 ஏக்கர் விடுவிக்கப்படுவதாகத் தெரிவித்தார். இதன்படி தற்போது சுமார் 6 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவது உண்மையே.

ஆனால் சிலாவத்துறைக் கடல் மூலம் போதைப் பொருள் நாட்டிற்குள் கடத்தப்படுவதால் கடற்படையினர் அங்கு இருக்கவேண்டியது அவசியமானதெனக் குறிப்பிட்டிருந்தார். இது எவ்வித ஆதாரமும் அடிப்படையுமற்ற குற்றச்சாட்டாகும்.

சிலாவத்துறைப் பிரதேசத்தில் வாழும் எந்த ஒரு நபரும் சிலாவத்துறை கடல் மூலம் போதைப் பொருட்களை நாட்டிற்குள்கடத்தி வந்ததாக எவ்வித பதிவும் இதுவரை இல்லை. மாத்திரமன்றி கடற்படையினர் இங்கு நிலைகொண்ட பின்னர்இவ்வாறான குற்றச்சாட்டு எழுகின்றதென்றால் சிலாவத்துறையில் கடற்படையினரை தொடர்ந்து நிலைகொள்ளச்செய்வதற்கான ஒரு யுக்தியாகவே இது கருதப்படுகின்றது. அத்துடன் சிலாவத்துறையில் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ளகாணிகளில் வாழ்ந்த மக்கள் தொடர்பாக பிரதமர் தெரிவித்த புள்ளிவிபரங்களும் பிழையானவையாகும். சிலாவத்துறையில்இன்னும் மக்கள் முழுமையாக மீள்குடியேறியிருக்காத நிலையில் அரைகுறையாகப் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு நாட்டின் உயர் சபையான பாராளுமன்றத்தில் பிரதம மந்திரி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எனினும் 2018 ஜனவரி மாதம் சிலாவத்துறையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்பேசும்போது சிலாவத்துறையின் நகர அபிவிருத்தியைக் கவனத்திற் கொண்டு சிலாவத்துறை கடற்படை முகாம் தொடர்பானவிடயம் கவனிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.சிலாவத்துறையில் கடற்படையினர் கையகப்படுத்தி வைத்துள்ள காணிகளில்வாழ்ந்த மக்கள் தொடர்பாகவும் அவர்களின் காணிகள் தொடர்பாகவும் ‘சிலாவத்துறையை மீட்போம்’ குழுவினரால்சேகரிக்கப்பட்ட முழுமையான விபரங்கள் 2017 மே மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஹன்சாட்டில்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிலாவத்துறையில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினரை அங்கிருந்து அகற்றிமீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலாவத்துறை மக்கள்கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதில் 2015 ஆம் ஆண்டு அம்மக்கள் நடத்திய ‘போஸ்ட் கார்ட்’ போராட்டம் குறிப்பிடத்தக்கது. இறுதியாக தற்போது சிலாவத்துறையின் மக்கள்குடியிருப்புப் பகுதியில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் சிலாவத்துறையிலிருந்து வெளியேறி வேறு பொருத்தமானஇடத்திற்கு நகர வேண்டுமெனக் கோரி சிலாவத்துறை மக்கள் கடற்படை முகாமுக்கு முன்பாக கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதிமுதல் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமைபி.ப. 2 மணியளவில் பேரணியொன்றை நடத்த சிலாவத்துறை மண் மீட்புக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முகுசீன் றயீசுத்தீன்

துணைத் தவிசாளர்

முசலி பிரதேச சபை