திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்

திருமலை சண்முகா ஆசிரியர் இடமாற்ற விவகாரம்

வை எல் எஸ் ஹமீட்

இந்த விவகாரம் கடந்த பல மாதங்களாக தீர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக நீடிக்கின்றது.
இது தற்போது மீண்டும் விசுவரூபம் எடுத்திருக்கின்றது.

தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?
————————————————————

குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மா க பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண படசாலைகளைப் பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர். தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி.

இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான் செயற்படுத்த வேண்டும். சில நேரங்களில் தற்காலிக இடமாற்றங்களைச் செய்யலாம். பின்னர் இசுறுபாயவின் அனுமதியைப்பெற வேண்டும்.

மனித உரிமை ஆணைகுழுவினால் ஏற்கனவே செய்யப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ரத்துச்செய்து பழைய பாடசாலைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அமுல்படுத்தாமல் இசுறுபாயவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள பணிப்பாளர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு கடிதம் எழுதுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில் இசுறுபாயவின் பிரதிநிதி என்றமுறையில் இசுறுபாயவின் தீர்மானத்தையே அவர் அமுல்படுத்த வேண்டும். அவர் வெறுமனே மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவைக் குறிப்பிட்டு அதன்பிரதியுடன் இசுறுப்பாயவின் மேலதிக அறிவுறுத்தலைக் கோரியிருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு அப்பாலும் அதன் உள்ளடக்கம் இருந்ததால் அவ்வுள்ளடக்கத்தின் பொருத்தத் தன்மை கேள்விக்குறியாகவும் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.

அது வெறுமனே பொருத்தமற்ற உள்ளடக்கம் என்பதற்காக அல்ல. மாறாக அதன் உள்ளடக்கமே பிரச்சினையின் திருப்புமுனையாக மாறியிருக்கின்றது; என்ற கருத்தே இன்றைய பாரிய விமர்சனங்களின் பிரதான அம்சமாக இருக்கின்றது. அதாவது, இசுறுபாயவின் உத்தரவின் பேரிலேயே இடமாற்றம் இடம்பெற்றபோதும் அவ்வகையான உத்தரவுக்கு அக்கடிதத்தின் உள்ளடக்கமே பிரதான காரணம் என்பதே இவ்விமர்சனங்களின் மையப்புள்ளியாகும். அதன் உள்ளடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவையே நலிவுற்றதாக்கிவிட்டது; என்பதும் விமர்கள் வெளியிடும் கவலையாகும். இவற்றிற்கு பின்னர் வருகின்றேன்.

இப்பிரச்சினையின் ஆழ அகலம் என்ன?
—————————————————-
இங்கு பல கேள்விகள் எழுகின்றன.

(1) குறித்த ஆடைகளை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையா?
(2) அந்த ஆடைகள் அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் ஏதும் தடைகள் உள்ளனவா?
(3) இல்லையெனில், பாடசாலை மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் அவ்வாடைக்கு பாடசாலை தடைவிதிக்க முடியுமா?
(4) ஆசிரியைகளுக்கு சீருடை உண்டா? ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலைக்கு உண்டா?
( 5) இல்லையெனில், அவர்களை கல்வியமைச்சு ஏன் வேறுபாடசாலைகளுக்கு ஆரம்பத்திலேயே தற்காலிக இணைப்பிற்கு உத்தரவிட்டது?
(6) மனித உரிமை ஆணைக்குழு வழங்கிய இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் இசுறுபாயவுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் பொருத்தமானதா?
(7) அதன் உள்ளடக்கம்தான் தற்போது இந்தப் பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்ததற்கு காரணம் என்ற கூற்றில் நியாயம் இருக்கின்றதா?
(8) குறித்த ஆடை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையானால் அதனை நிலை நிறுத்துவதில் உரிமைகளுக்காக போராடவென்று மக்கள் வாக்குகள்பெற்ற அரசியல் அதிகாரவர்க்கம் இத்தனை மாதங்களாக வாழாவிருந்ததேன்?
(9) கல்விப்பணிப்பாளர் அண்மையில் வியூகம் தொலைக்காட்சியில் செய்த சில நியாயப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா?
(10) அபாயா முஸ்லிம்களின் கலாச்சார ஆடையா? இதற்காக போராட வேண்டுமா? என்ற வாதங்கள் இந்த இடத்திற்குப் பொருந்துமா?
(11) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் இங்கு விட்டுக்கொடுப்புச் செய்யமுடியுமா?
(12) அவ்விட்டுக்கொடுப்புகள் எதிர்காலத்தில் வட கிழக்கில் மாத்திரமல்லாமல் அதற்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டா?
(13) நாம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை; என்கின்ற கிழக்கிலேயே, ஒரு கௌரவமான ஆடை அணிகின்ற சிறிய உரிமையைக்கூட பல மாதங்களாக போராடியும் இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதேன்?
(14) கல்விப் பணிப்பாளர் அல்லது உயர் பதவியிலுள்ள முஸ்லிம்கள், சமூகத்திற்கு சாதகமாக நடக்கவேண்டுமா? நடுநிலையாக நடக்க வேண்டுமா?
(15) குறித்த பணிப்பாளரினுடைய இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகள், பேச்சுக்கள், முஸ்லிம்களுக்கு சாதகமானவையா? நடுநிலையானவையா? பாதகமானவையா?
(16) பாதகமானவே எனில் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?
(17) ஆளுநர், அரச அதிபர் உட்பட நியாமாக முஸ்லிம்கள் நியமிக்கப்படாதபோது அவற்றிற்கெதிராக குரலெழுப்புகின்றோமே! ஏன்?
(18) இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
(19) அத்தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர்கள் யார்?
(20) அத்தீர்வூ என்பது அவ்வாசிரியைகளுக்குரிய தீர்வா? அல்லது சமூகத்திற்கு தீர்வா? இரண்டாவதெனில் எவ்வாறு?

இப்பிரச்சினையை சரியாக அடையாளம் கண்டு தீர்வுக்காண இக்கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும்.

அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் விடைகளைத் தேடுவோம்.