இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் : மஹிந்த ராஜபக்ச

ஐ.நா மனித உரிமைகள் சபை தீர்மானங்கள் ஊடாகவோ அல்லது அழுத்தங்கள் மூலமாகவோ இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பை திணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று தெரிவித்துள்ளார்.
 ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில், புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் உள்ளடக்க வேண்டும் என தமிழர் தரப்புக்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
 தீர்மானத்தைச் சமர்ப்பிக்கும் என்று நம்பப்படும் கனடா, ஜேர்மனி, பிரிட்டன், மசிடோனியா ஆகிய நாடுகளுடன் இது தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,இந்த பின்னணியில் சம்பந்தன் – சுமந்திரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ரணில் அரச தரப்பினரும் இருப்பார்கள்.
உள்நாட்டில் நிறைவேற்ற முடியாதவற்றை ஐ.நா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உதவியுடன் நிறைவேற்ற இவர்கள் முயல்கின்றார்கள்.இதை நாம் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம். நாமும் நாட்டு மக்களைத் திரட்டி பதில் நடவடிக்கையில் இறங்குவோம்.நாட்டின் பெரும்பாலான வளங்களை சர்வதேச சமூகத்துக்கு தாரைவார்த்து கொடுத்த ரணில் அரசு, தற்போது நாட்டையும் துண்டு துண்டாகப் பிளவுபடுத்த முயல்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன் இந்த மோசமான கருமங்களில் ரணில் அரசு ஈடுபடுகின்றது.புலத்தில் இருக்கும் புலிப் பயங்கரவாதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நேரடித் தொடர்புகளையும், ரணில் அரச தரப்பினருடன் மறைமுகத் தொடர்புகளையும் வைத்திருக்கின்றனர்.இவர்களின் நோக்கங்கள் நிறைவேற நாமும் நாட்டு மக்களும் அனுமதிக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.