நாளைய தினம் சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும் – அமைச்சர் டிலான்

நாடாளுமன்றத்தில் நாளைய தினம் என்ன நடக்க போகிறது என்பது கருணாரட்ன ஜயசூரியவுக்கே தெரியும் எனவும் ஆரம்பத்திலேயே தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்ற விடயத்தை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.சபாநாயகர் கரு ஜயசூரிய இதனை ஏற்றுக்கொண்டுள்ளதன் மூலம் அதற்கு முன்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தவறானவை என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், எதுவும் நடக்கக் கூடும். சபாநாயகருக்கு பௌர்ணமி தினத்தில் பிடிக்கும் பேய் பிடிக்கக் கூடும். நாளைய தினம் பௌர்ணமி தினத்திற்கு மறுதினம் என்பதால், அது நடக்கலாம் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு, ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரம் பற்றி தெரியும். அவர்கள் முட்டாள்கள் இல்லை எனக் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட டிலான் பெரேரா, இடைக்கால வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பிரதமராக இருப்பார். நிறைவேற்றப்படவில்லை என்றால் தேர்தல் நடக்கும். தேர்தலுக்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.

ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலுக்கு செல்ல பயப்படுகிறது. மகிந்த ராஜபக்சவையும் அவர்களால் பிரதமராக ஏற்க முடியவில்லை. அவர்கள் இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டும். நாங்கள் அனைத்துக்கும் தயார் எனக் கூறியுள்ளார்.