மஹிந்தவுடன் கூட்டு சேரும் ஹக்கீம், மனோ, டக்ளஸ்?

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதி பத்திரிகையொன்று பிரதான செய்தியாக இதனை வெளியிட்டுள்ளது.
ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் விரைவில் கூட்டு எதிர்க்கட்யுடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறித்த ஞாயிறு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையென்றால் அதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மஹிந்த ராஜபக்ஸ, குறித்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளக ரீதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் இதுவரையில் போதியளவு நிறைவேற்றப்படாமையினால் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.

தமது கட்சி எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.