ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றியுள்ள கூட்டு எதிர்க்கட்சியினர்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி தலைமையிலான கூட்டணியின் சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவிக்கும் வரை அது பற்றி பேசுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் வேட்பாளர் பற்றி தற்போதே பேசி கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.

இதனால், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், முன்னாள் ஜனாதிபதி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுடன் கலந்துரையாடி தகுதியான வேட்பாளரை அறிவிப்பதாகவும் அதன் பின்னர், அவரது வெற்றிக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, வேட்பாளரை அறிவிக்கும் வரை ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசுவதில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.