இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் சந்திப்பு

இலங்கையின் அபிவிருத்திக்கும், இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் குறிப்பாக முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கும் சவூதி அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாஸர் எச்.அல் ஹாரதியிடம் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்தார். 


சவூதி அரேபியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அப்துல் நாஸர் எச்.அல் ஹாரதியை இன்று செவ்வாய்க்கிழமை இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தியோகபூர்வமாக தூதுரகத்தில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். 

இதன்போது, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான நிரந்தர தூதுவர் இல்லாத காரணத்தால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்த சூழ்நிலையில் புதிய தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு இராஜாங்க அமைச்சர் நன்றி தெரிவித்ததோடு குறிப்பாக இலங்கை அரசாங்கத்துக்கும் சவூதி அரசாங்கத்துக்கும் இடையில் நெருக்கமான உறவை பேணுவதற்கும் எதிர்காலத்தில் பல்வேறு பட்ட உறவுகளை வளர்ப்பதற்கும் புதிய தூதுவர் நியமனம் நன்மையாக அமையும் என இதன்போது இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 

புதிய தூதுவர் தனது பணிகளை தொடர்வதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இலங்கையின் அபிவிருத்திக்கும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதற்கும் குறிப்பாக முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கும் சவூதி அரசாங்கம் கடந்த காலங்களைப் போன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

இராஜாங்க அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சவூதி தூதுவர், இரண்டு அரசாங்கங்களினதும் உறவை கட்டியெழுப்பி எதிர்காலத்தில் இலங்கையில் மிக அதிகமான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க சவூதி அரசாங்கத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுப்பதாகவும் உறுதியளித்தார்.