• Home »
  • Slider »
  • அஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)

அஸீஸ் முதல் ஹனிபா வரை நிர்வாக சேவையும் முஸ்லிம்களின் வகிபங்கும் (ஏ.எல்.நிப்ராஸ்)

நூறு அரசியல்வாதிகள் அறிக்கைவிட்டு, பம்மாத்துக் காட்டி செய்கின்ற வேலையை ஒரு அரச உயரதிகாரி எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் செய்து விட்டுப் போகின்றார்கள். எனவேதான், முஸ்லிம் சமூகத்தில் படித்த தொழில்வாண்மையாளர்களான உயரதிகாரிகளை உருவாக்க வேணடுமென உணரப்படுகின்றது. குறிப்பாக இலங்கை நிர்வாக சேவையில் முஸ்லிம்கள் தங்களது வகிபாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையிலேயே முப்பது வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாகவும், இலங்கையின் சிவில் சேவை மற்றும் நிர்வாக சேவை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் இரண்டாவதாகவும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாக சேவை அதிகாரியான ஐ.எம்.ஹனிபா வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கை முஸ்லிம்களுக்கு மனமகிழ்வு ஏற்பட்டுள்ள இச்சந்தர்ப்பத்தில், இலங்கை நிர்வாக சேவையில் முஸ்லிம் அதிகாரிகள் இந்த நாட்டுக்கும், தாம் சார்ந்த சமூகத்திற்கும் ஆற்றிய – ஆற்றக்கூடிய பங்களிப்புக்கள் குறித்த மீள் வாசிப்பொன்று அவசியமாகின்றது.
சேவையின் முன்கதை
1796 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் பிரித்தானியாவின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதன் பின்னர் அப்பிரதேசங்களின் நிர்வாக நடவடிக்கைகள் இந்தியாவின் மதுரையிலிருந்து இயங்கிய கிழக்கிந்திய வர்த்தக கம்பனி அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன் போது ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக 1802 ஆம் ஆண்டு இலங்கையின் நிர்வாக நடவடிக்கைகளுக்கென பிரத்தியேகமாக அதிகாரிகள் சிலரை பிரித்தானியா நியமித்தது.
இதுவே இந்நாட்டின் சிவில் சேவையின் ஆரம்பமாக கொள்ளப்படுகின்றது. இதன் பின்னர் இந்தச் சேவை பிரித்தானிய சிவில் சேவையை அடிப்படையாகக் கொண்டதாக, 1833 இல் சிலோன் சிவில் சேவை எனப் பெயரிடப்பட்டது. இது பின்னர் அதாவது 1963 ஆம் ஆண்டு அப்போது காணப்பட்ட பிராந்திய வருமான நிர்வாக அதிகாரி சேவையையும் உள்ளடக்கியதாக சிலோன் நிர்வாக சேவை என பரிணாம மாற்றம் பெற்றது. அதனைத் தொடர்ந்து 1972 இல் இலங்கை குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டதை அடுத்து இலங்கை நிர்வாக சேவையென பெயரிடப்பட்டது.
இலங்கை நிர்வாக சேவையில் தற்போது கணிசமான முஸ்லிம்கள் இருக்கின்றனர். பிரதேச செயலாளர்களாக, உதவிப் பிரதேச செயலாளர்களாக, உதவி அரசாங்க அதிபர்களாக, அமைச்சுக்களின் செயலாளர்களாக, அமைச்சுக்களின் உதவி மற்றும் மேலதிகச் செயலாளர்களாக, ஆணையாளர்களாகவும் மேலும் பல பதவிகளையும் வகித்து வந்தனர். ஆனால் எத்தனையோ முஸ்லிம்கள் நிர்வாக சேவையில் இருந்த போதிலும் கடந்த 30 வருடங்களாக அரசாங்க அதிபர் அல்லது மாவட்ட செயலாளர் என்ற பதவியை பெற முடியாமல் போய்விட்டது.
முதலாவதாக அஸீஸ்
இலங்கை நிர்வாக சேவையின் முதலாவது முஸ்லிம் அதிகாரி – கல்வியியலாளர், சமூக சிந்தனையாளர், நல்லிணக்கவாதி, முற்போக்காளர் என்ற பன்முக ஆளுமையான கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ் ஆவார். அவர் பற்றி வாசிக்கின்ற போது, இவர் போன்ற ஒருவரை முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி இந்த நாடே கண்டிருக்குமா என்பதே சந்தேகமாகத்தான் இருக்கின்றது.
1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் பிறந்த ஏ.எம்.ஏ. அஸீஸ், பிரித்தானியாவின் கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த போது சிலோன் சிவில் சேவை பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தார். 1935ஆம் ஆண்டு சிவில் சேவையில் (முதலாவது முஸ்லிம்) அதிகாரியாக நியமிக்கப்பட்ட இவர் மாத்தளை மற்றும் கண்டியில் உதவி அரசாங்க அதிபராகவும் பின்னர் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கைச் சுங்கம் உள்ளிட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளையும் வகித்தார்.
இந்நிலையில், இரண்டாம் உலக மகா யுத்தம் உலகை ஆட்கொண்டிருந்தது. ஜப்பானின் தாக்குதல் கப்பல்கள் இலங்கையை நோக்கி திருப்பப்பட்டிருந்தன. இதனால் இலங்கைக்கு கடல்மார்க்கமாக உணவு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது. 1942ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று ஜப்பான் படைகள் கொழும்புத் துறைமுகத்தையும் 7ஆம் திகதி திருமலை துறைமுகத்தையும் தாக்கியழித்தன. இதனால் நிலைமை இன்னும் மோசமடைந்தது.
இலங்கையின் அப்போதைய காணி அமைச்சரான டி.எஸ்.சேனனாயக்க உள்நாட்டு உற்பத்தி குறித்து சிந்தித்தார். அந்த அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு உற்பத்திக்கு மிகப் பொருத்தமான இடமாக அப்போதிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியை (தற்போதைய அம்பாறை மாவட்டத்தை) அவர் அடையாளம் கண்டார். உடனடியாக கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸை உதவி அரசாங்க அதிபராக நியமித்ததுடன் கல்முனையில் அவசரகால கச்சேரியை நிறுவி உணவு உற்பத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டத்தையும் அவரிடமே ஒப்படைத்தார்.
1942.04.16ஆம் திகதி உதவி அரசாங்க அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட ஏ.எம்.ஏ.அஸீஸ் கல்முனையில் அவசரகால கச்சேரியை நிறுவி வேலைத்திட்டங்களை துரிதகெதியில் முன்னெடுத்தார். அக்கரைப்பற்று, கரைவாகுப்பற்று, பணமைப்பற்று, வேகாமம்பற்று, சம்மாந்துறைப் பற்று உள்ளடங்கலாக பட்டிருப்பு தேர்தல் தொகுதியுமாக பெரும் நிலப்பரப்பு இவரின் நியாயாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அவசரகால கச்சேரியின் முதலாவது கூட்டம் அவ்வருடம் மே 6ஆம் திகதி உதவி அரச அதிபர் ஏ.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே கிழக்கின் நெல்லுற்பத்திக்கான வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். உள்நாட்டில் உணவுப் பஞ்சத்தை போக்கி உணவு உற்பத்தியை அதிகரிப்பது முதன்மை நோக்கமாக இருந்தமையால்…அரச காணிகளை துப்பரவு செய்து விவசாயம் செய்வதற்காக பகிர்ந்தளித்தல், குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைத்தல், ஆடு மாடு கோழிப் பண்ணைகளை நிறுவுதல் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன.
காணி பகிர்ந்தளிப்பு
நமது அரசியல்வாதிகளைப் போல தீர்மானங்களை எடுத்தவிட்டு அன்றிரவே அதனை மறந்து விடாமல், அஸீஸ் உடனடியாக செயலில் இறங்கினார். முதலாவது காணிக் கச்சேரியை நடாத்தி பொருத்தமான மக்களுக்கு ஓரிரு நாட்களுக்குள்ளேயே 690 ஏக்கர் காணிகளை முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் பகிர்ந்தளித்தார். இவ்வாறு 12ஆயிரத்து 70 ஏக்கர் அரச காணிகள் ஒரு வருடத்திற்குள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்காக 1520 ஏக்கர் காணி கொடுக்கப்பட்டதுடன், சுமார் 30ஆயிரம் ஏக்கர் தரிசுநிலக் காணிகள் பயிர்;ச்செய்கைக்காக விடுவிக்கப்பட்டன. அத்துடன் கோழி, ஆட்டு, மாட்டு பண்ணைகளும் உருவாக்கப்பட்டன. இவை அத்தனையும் இப்போதிருக்கின்ற அம்பாறை மாவட்டத்தையும் பட்டிருப்பு தொகுதியையும் உள்ளடக்கிய அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்பகுதியில் 2 வருடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற அறுவடை விழாவே கிழக்கின் முதலாவது பிரமாண்டமான நிகழ்வு என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக வருகைதந்திருந்த காணி அமைச்சர் டி.எஸ். சேனனாயக்க, உதவி அரசாங்க அதிபர் அஸீஸின் இன, மத பேதமற்ற அர்ப்பணிப்புமிக்க வெற்றிகரமான சேவையையும் இப்பகுதி மக்களின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டினார்.  அத்துடன், அம்பாறை மாவட்டத்தின் சாகாமத்திலுள்ளள 500 ஏக்கர் காணிக்கு மக்கள் அஸீஸ் துரைக் கண்டம் என்று மக்கள் பெயர்சூட்டி இன்றுவரை அழைக்கின்றனர். .
விபுலானந்த அடிகள் உள்ளடங்கலாக தமிழ் மக்களோடு (அப்போது சொற்பளவான சிங்களவர்களே இருந்தனர்) மிக அந்நியோன்யமாக இருந்தவாறு, ஒரு செயல்வீரனாக செயற்பட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.எம்.ஏ.அஸீஸ் செய்த சேவையாலேயே இன்று நாட்டின் நெற்களஞ்சியமாக அம்பாறை மாவட்டம் மாறியிருக்கின்றது. இன்று 60 வீதமான நெல்லுற்பத்தி இங்கு மேற்கொள்ளப்படுகின்றது என்றால் அதற்கு முழு முதற்காரணமும் நன்றிக்குரியவரும் மறைந்த ஏ.எம்.ஏ.அஸீஸ்தான். ஐ.தே.க. அங்கத்தவராக இருந்து கொண்டுதனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து கட்சியைவிட்டு வெளியேறிய சமூக அக்கறைசார் தைரியமும் கூட அவருக்கிருந்தது.
ஒரு சிவில் நிர்வாக அதிகாரியாக இருந்து அஸீஸ் இரு வருடங்களுக்குள் செய்த சேவையை அவருக்குப் பிறகு வந்த நூறு முஸ்லிம் அரசியல் வாதிகளும் சேர்ந்து செய்யவில்லை. எனவேதான் அரச உயர் பதவிகளில் முஸ்லிம்களின் வகிபங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது.
சுடப்பட்ட அரச அதிபர்
அதற்குப் பிறகு பல மாற்றங்களுக்குள்ளான இலங்கை நிர்வாக சேவையில் முதலாவது முஸ்லிம் அரசாங்க அதிபராக எம்.எம்.மக்பூல் 1981ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நிர்வாக சேவையில் பதவிநிலை அடிப்படையில் ஆகவும் உயர்ந்த பதவியை முதன்முதலாக வகித்த முஸ்லிம் சமூக ஆளுமையாகவும் இவரைக் குறிப்பிட முடியும்.
வட மாகாணத்தில் பிறந்து, 1960களில் நிர்வாக சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டு, பின்னர் மன்னார் மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு அதன்பிறகு அரச அதிபராக பதவியுயர்வு பெற்ற எம்.எம்.மக்பூல் மிகச் சிறந்த சமூக சேவையாளரும் நிர்வாக அதிகாரியாகவும் போற்றப்படத்தக்கவர்.
இன பேதம் கடந்து அவர் செய்த சேவைகள் அதற்கு சான்றுபகர்கின்றன. குறிப்பாக திருவையறு படித்த வாலிபர் திட்டம்,விஸ்வமடு வாலிபர் திட்டம், கானகாம்பிகை குடியேற்றத்திட்டம் போன்றவற்றை முன்னெடுத்ததுடன், மர்ஹூம் அஸீஸைப் போலவே மக்பூலும் அங்குள்ள மக்களுக்கு அரச காணிகளையும் பகிர்ந்தளித்தார் என்பதை மறக்க முடியாது.
மன்னார் அரசாங்க அதிபராக பல வருடங்கள் சேவையாற்றிய எம்.எம்.மக்பூல் எந்தளவுக்கு தமிழ் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தார் என்பது மனிதநேயமுள்ள தமிழ் சகோதரர்கள் இன்றும் நினைவுகூர்கின்றனர். ஆனாலும் எக்காலத்திலும் துப்பாக்கிகளுக்கும் அதை ஏந்தியிருந்த சிலருக்கும் மனிதநேயம் இருக்கவில்லை.
1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம்; 22ஆம் திகதி கடமை நிமித்தம் ஒரு இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் மக்பூல் முன்னிரவுப் பொழுதில் மன்னர் – தலைமன்னார் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது தோட்டவெளி எனும் இடத்தில் விடுதலைப் புலிகளால் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை விட்டு இறக்கப்பட்டு கைகள் இரண்டும் பின்னால் கட்டப்பட்டு, சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் சோனகத்தெருவில் பிறந்து ஒரு நிர்வாக சேவை அதிகாரியாக, மாவட்ட அரச அதிபராக வடபுல மக்களுக்கு சேவை செய்து மக்கள் மனங்களை வென்ற ஒரு ஜீவன், அநியாயமாக துப்பாக்கிகளுக்கு இரையாக்கப்பட்டார். இவ்வாறு கோழைத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட முதலாவது முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரி எம்.எம்.மக்பூல் என்றாலும், அந்தப் பட்டியலில் அவர் கடைசியான ‘குறியிலக்காக’ இருக்கவில்லை.
பலியெடுக்கப்பட்ட பட்டியல்
மன்னார் அரச அதிபர் மக்பூலைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளாலும் ஏனைய ஆயுத இயக்கங்களாலும் பலியெடுக்கப்பட்ட நிர்வாக சேவையின் முஸ்லிம் அதிகாரிகளின் பட்டியல் நீளமானது.
அதன்படி உதவி அரசாங்க அதிபராக பதவி வகித்த உதுமான், முதூர் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஹபீப் முஹம்மது, மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வை. அகமட், குச்சவெளியில் உதவி அரசாங்க அதிபராக கடமைபுரிந்த இப்றாகிம் ஆகியோர் பலியெடுக்கப்பட்டனர். இந்தப்பட்டியலில் இறுதியாக, எழுத்தாளரும் கதை ஆசிரியருமாக இருந்துகொண்டு நிர்வாக சேவைப் பரீட்சையில் திறமைச் சித்தி பெற்று பின்னர் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த நற்பிட்டிமுனை பளீல் படுகொலை செய்யப்பட்டார்.
ஒரு வெள்ளிக்கிழமை; காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இருந்து பள்ளிவாசலுக்கு செல்லத் தயாராகிக் கொண்டிருந்த போது காட்டு மிராண்டித்தனமாக ஏ.எல்.எம். பளீல் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். ஒரு காணித் தகராறில் நீதி தீர்த்தாகவும் அது தனது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் அதற்கு சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் கூறியிருந்தாக ஞாபகமிருக்கின்றது.
இப்படியாக, முஸ்;லிம் சமூகத்தில் இருந்து நிர்வாக சேவைக்கு வந்து மாவட்ட செயலாளராக, பிரதேச செயலாளர்களாக கடமையாற்றிய பலர் ஆயுதக் குழுக்களால் பலியெடுக்கப்பட்டது ஒருபுறமிருக்க, கடந்த 30 வருடகாலத்தில் கடந்த மாதம் வரை ஒரு முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரியேனும் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படவில்லை என்பது கவனிப்பிற்குரியது.
ஹனிபா நியமனம்
முஸ்லிம்களின் விகிதாசாரப்படி பார்த்தால் ஆகக்குறைந்தது 2 மாவட்டங்களுக்காவது முஸ்லிம் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அத்திபூத்தாற்போல் சேவைமூப்பு அடிப்படையில் அவ்வப்போது ஓரிரு முஸ்லிம்கள் மாத்திரம் அமைச்சின் செயலாளர்களாக, உதவி மற்றும் மேலதிக செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர் என்பதே நிதர்சனமாகும்.
எனவே முஸ்லிம்களுக்காக ஒரு தனியான மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவந்த காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திற்கோ அல்லது வேறு எந்த மாவட்டத்திற்காவது முஸ்லிம் ஒருவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட வேண்டுமென்று முஸ்லிம்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக கோரி வருகின்றனர். ஆனால் மேலதிக, உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு மேல், முஸ்லிம்கள் யாரும் பதவி உயர்த்தப்படவில்லை.
அந்த அபூர்வ வாய்ப்பு சம்மாந்துறையில் பிறந்த ஐ.எம்.ஹனிபாவுக்கு கிடைத்திருக்கின்றது. இதன் இந்த நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் கனவும் தவமும் தாகமும் கொஞ்சமேனும் நிறைவேறியிருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
சம்மாந்துறையில் கல்வி கற்று ஒரு ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த ஐ.எம்.ஹனிபா பின்னர் நிர்வாக சேவை அதிகாரியாக தெரிவு செய்யப்பட்ட 1999ஆம் ஆண்டு நிந்தவூர் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதேச செயலாளராக பதவியுயர்வு பெற்றார். அதன்பிறகு காத்தான்குடி, இறக்காமம், நிந்தவூர், அட்டாளைச்சேனை, சாய்;ந்தமருது பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றினார். அட்டாளைச்சேனை போன்ற இடங்களில் அரசியல் நெருக்கடிகளுக்கு ஆளானார்.
அலுவலகத்தில் திறமையாகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய ஒரு பிரதேச செயலாளராக ஹனிபா நன்மதிப்பைப் பெற்றிருப்பதுடன், காரியம் நிறைவேற்றுவதில் வல்லமை பெற்ற முஸ்லிம் பிரதேச செயலாளர்களுள் ஒருவராகவும் இவரை குறிப்பிட முடியும். ஆனால், சமயப் பற்றுள்ள ஹனிபா, அலுவலகத்திற்கு வெளியில் ஒரு சர்வ சாதாரணமான மனிதராக பழகுபவர் என்பது பலராரும் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளது. அதுதான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது எனலாம்.
இலங்கை நிர்வாக சேவையில் 20 வருடங்கள் சேவையைப் பெற்ற ஐ.எம்.ஹனிபாவை வவுனியா அரசாங்க அதிபராக நியமிக்க பாடுபட்டவர்கள் நன்றிக்குரியவர்கள். ஆனால் இன்று அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக ‘நாங்கள்தான் நியமித்தோம்’ என்று பிரசாரம் செய்வதை காண முடிகின்றது. உண்மையில் இதற்காக பாடுபட்ட அரசியல் தலைவர் யார் என்பது மாவட்ட செயலாளர் ஹனிபாவுக்கு தெரியும். இந்த சமூகத்திற்காகவே அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காகவே அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்கின்றார்கள். எனவே  இதனை அரசியலாக்குவது ஐ.எம்.ஹனிபாவின் தகுதியை உரசிப் பார்;க்கின்ற காரியமாகவே வந்து முடியும்.
பல அரசியல்வாதிகளும் முஸ்லிம் மாவட்ட செயலாளர் ஒருவரை நியமிக்க முயற்சி செய்தனர். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிர்வாக சேவை அதிகாரியின் பெயரை பரிந்துரைத்தனர். ஆனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஐ.எம்.ஹனீபாவை நியமிக்கவே முன்னுரிமை அளித்தது. எனவே அதற்கு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து அதனை சாதித்தார்கள் என்பதே இதற்குப் பின்னாலுள்ள உண்மை நிலைவரமாகும்.
எது எப்படியாயினும், வவுனியா மாவட்ட செயலாளராக கடமையேற்றுள்ள ஐ.எம்.ஹனீபா மீது மிகப் பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஒரு நிர்வாக அதிகாரி எத்தகைய சேவைகளைச் செய்யலாம் என்பதற்கு நாம் மேலே குறிப்பிட்ட ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம். மக்பூல் போன்றோரின் சேவையும் இனநல்லிணக்கமும் முன்மாதிரிகளாகும்;. அத்துடன் இப்பதவி கத்திமேல் நடப்பது போல மிகவும் ஆபத்தானது என்பதை மக்பூல் தொடக்கம் பளீல் வரையான நிர்வாக சேவை அதிகாரிகளின் அனுபவங்கள் ஹனிபாவுக்கும் நமக்கும் உணர்த்துகின்றன.
இதற்கப்பால், சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
•ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி -15.07.2018)
முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-