அக்கரைப்பற்று சர்ச்சையை தொடர்ந்து இணைத் தலைவர் பதவியிலிருந்து பைசல் காசிம் நீக்கம்

 ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே.ஆதம்லெப்பை (லொயிட்ஸ் றபீக்) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.

மேற்படி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவராக பதவி வகித்த பிரதியமைச்சர் பைசல் காசிம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில், அப்பதவியில் இருந்து பிரதியமைச்சர் நீக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக யூ.கே.ஆதம்லெப்பை ஜனாதிபதியால் நியமிக்கப்படுவதாகவும் ஜனாதிபதியின் செயலாளர், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்.

யூ.கே.ஆதம்லெப்பை கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டவர் என்பதுடன் பிரதமரின் வேண்டுகோளுக்கமைய இம்முறை உள்ளுராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.