• Home »
  • Slider »
  • சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு

சீரற்ற காலநிலையினால் 19 மாவட்டங்களின் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு

தென்மேல் பரு­வப்­பெ­யர்ச்சி கால­நிலை கார­ண­மாக நாட்டில் நிலவும் கடும் மழையால் 19 மாவட்­டங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அம்­மா­வட்­டங்­களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. நேற்றும் அம்­மா­வட்­டங்­களை ஊட­றுத்து பாயும், நில்­வளா, கிங், களு, களனி, மகா­வலி ஆகிய கங்­கை­களும், அத்­த­ன­கல்ல ஓயா, மா ஓயா, கட்­டு­பிட்டி ஓயா, ரத்­த­ஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகி­ய­னவும் பல இடங்­களில் பெருக்­கெ­டுத்­துள்ள நிலையில் எமில்டன் கால்­வாயும் பெருக்­கெ­டுத்­ததில் பாரிய அவலம் ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் குறித்த 19 மாவட்­டங்­க­ளிலும் மீட்பு, நிவா­ரண சேவைகள் தொடர்பில் மேல­திக பொலிஸ், இரா­ணுவப் படை­யணி கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

FILE IMAGE

எனினும் வெள்ள நீரினால் சிறைப்­பட்­டுள்ள பலரை மீட்­ப­திலும், அவர்­க­ளுக்­கான நிவா­ர­ணங்­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­திலும் பாரிய சிக்­கல்கள் ஏற்­பட்­டுள்­ளன. பல பகு­தி­களில் தொடர்­பாடல், மின் இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் பாதிக்­கப்­பட்­டோரை அணு­கு­வதில் சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தாக மீட்பு பணியில் ஈடு­பட்­டுள்ள உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
எவ்­வா­றா­யினும் பெரும்­பாலும் பட­குகள், வள்­ளங்­களின் உத­வி­யுடன் மீட்பு, நிவா­ரணப் பணி­களை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கவும் பல இடங்­களை அண்­மிப்­பதில் வெள்ள நீர் தடை­யாக உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இந்­நி­லையில் நேற்று வரை வெள்ளம், மண்­ச­ரிவு, இடி, மின்னல் தாக்கம், மரம் முறிந்து விழுந்­தமை கார­ண­மாக 10 பேர் பலி­யா­கி­யுள்­ளனர். அத்­துடன் மேலும் ஏழு பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் மழை, வெள்ளம் கார­ண­மாக 14432 குடும்­பங்­களைச் சேர்ந்த 52380 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 4075 குடும்­பங்­களைச் சேர்ந்த 12132 பேர் 137 நலன்­புரி முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் அனு­ரா­த­புரம், முல்­லைத்­தீவு, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை, களுத்­துறை, குரு­ணாகல், புத்­தளம், கொழும்பு, கம்­பஹா, மொன­ரா­கலை, மாத்­தளை, பொலன்­ன­றுவை, அம்­பாந்­தோட்டை மற்றும் வவு­னியா மாவட்­டங்­களில் தொடர்ச்­சி­யாக மழை­வீழ்ச்சி பதி­வாகி வரும் நிலையில் அம்­மா­வட்ட மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அன்­றாட தொழில் நட­வ­டிக்­கைகள், கல்வி நட­வ­டிக்­கைகள் மற்றும் உணவு பெற்­றுக்­கொள்­வதில் அம்­மா­வட்­டங்­களைச் சேர்ந்த பாதிக்­கப்­பட்ட மக்கள் பெரும் இன்­னல்­களை எதிர்­கொண்­டுள்­ளனர். 

குறித்த 19 மாவட்­டங்­க­ளிலும் நேற்று காலை மழை­வீழ்ச்­சி­யா­னது குறைந்­தி­ருந்­த­போதும் பிற்­பகல் முதல் மீள மழை பொழிய ஆரம்­பித்­துள்­ளன. இதனால் குறித்த 15 மாவட்­டங்­க­ளி­னதும் தாழ் நில பிர­தேச மக்கள் பாரிய வெள்ள அச்­சு­றுத்­த­லுக்கு முகம்­கொ­டுத்­துள்­ளனர். 

 உயிர் சேதங்கள்:
இந்­நி­லையில் இந்த சீரற்ற கால­நிலை கார­ண­மாக நேற்று வரை 10 உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன. மழை­யுடன் ஏற்­பட்ட இடி, மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்றால் மரம் விழுந்­தமை, வெள்­ளத்­தினால் அடித்துச் செல்­லப்­பட்­டமை மற்றும் மண்­ச­ரிவு ஆகி­ய­வற்றால் இந்த 10 உயி­ரி­ழப்­புக்­களும் வெலிக்­கந்த, மொன­ரா­கலை, அனு­ரா­த­புரம், புத்­தளம் – தப்­போவ, காலி, ஹொரணை, ரம்­புக்­கனை, மில்­லெ­னிய பகு­தி­களில் பதி­வா­கி­யுள்­ளன.

கடந்த ஞாயிறு மாலை 5.00 மணி­ய­ளவில் வெலி­கந்த பொலிஸ் பிரிவில் எப்.5 கால்வாய்ப் பகு­தியில் வயல் வேலையில் ஈடு­பட்­டி­ருந்­த­போது மின்னல் தாக்­கி­யதில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர். .
நிமந்த டில்ருக் டி சொய்ஸா எனும் 33 வய­தான நபரும், பரண விதா­ர­னகே லக் ஷான் எனும் 17 வய­தான இளை­ஞ­னுமே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இந்­நி­லை­யி­லேயே மொன­ரா­கலை, படல்­கும்­பர பகு­தியைச் சேர்ந்த பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்­ததில் உயி­ரி­ழந்­துள்ளார். 30 வய­தான முன்­பள்ளி ஆசி­ரியர் ஒரு­வரே இதன்­போது உயி­ரி­ழந்­துள்ளார். இத­னை­விட ஹொரணை பகு­தியில் தியான மண்­டபம் ஒன்றின் மீது மின்னல் தாக்­கி­யதில் 62 வய­தான பிக்­குனி ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். புத்­தளம் தப்­போவ குளத்தில் மீன் பிடித்­துக்­கொண்­டி­ருந்த 34 வய­தான ஒரு­வரும் மின்னல் தாக்கி உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் ரம்­புக்­கனை பகு­தி­யிலும் மரம் வீழ்ந்து ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
இத­னை­விட கேகாலை,- புளத்­கொ­ஹு­பிட்­டி­யவில் வீடொன்றின் மீது மண் திட்­டொன்று சரிந்து விழுந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். மற்­றொ­ருவர் காய­ம­டைந்­துள்ளார். களுத்­துறை, மில்­லெ­னிய பகு­தி­யிலும் மண்­ச­ரிவில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அனு­ரா­த­பு­ரத்தில் மரம் சரிந்து விழுந்­ததில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

அத்­துடன் காலி,- தல­வம பகு­தியில் மீன் பிடிக்க வலை வீசி­ய­போது நில்­வளா கங்­கையின் வெள்ள நீரினால் அடித்­துச்­செல்­லப்­பட்ட நபரின் சட­லமும் நேற்று முன்­தினம் கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டது. 

 

நீர்த்­தேக்­கங்கள், நதி­கள் பெருக்கெ­டுப்பு:
இந்­நி­லையில் நாட­ளா­விய ரீதியில் பல நீர்த்­தேக்­கங்­களில் நீர் மட்டம் தொடர்ச்­சி­யாக உயர்­வ­டை­வது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. மலை­ய­கத்தில் ரந்­தெ­னி­கல, கொத்­மலை நீர்த்­தேக்­கத்தின் நீர் சடு­தி­யாக  உயர்­வ­டைந்­துள்­ளது. இதனால் கொத்­மலை நீர்த்­தேக்­கத்தின் இரு வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ச்­சி­யாக அங்கு மழை பெய்து வரு­வதால் மேலும் வான் கத­வுகள் சுய­மா­கவே திறந்­து­கொள்ளும் என எச்­ச­ரிக்கும் நீர்ப்­பா­சன அதி­கா­ரிகள், கொத்­மலை நீர்த்­தேக்­கத்தை அண்­டிய பகு­தி­களில் வாழ்­வோ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். 

இந்­நி­லையில் தெதுரு ஓயாவின் 8 வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்ள நிலையில் உட­வ­லவ நீர்த்­தேக்­கத்தின் ஒரு வான் கதவு திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சனத் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.
தப்­போவ நீர்த்­தேக்­கத்தின் இரு வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்ள நிலையில், பொல்­கொல்ல நீர்த்­தேக்­கத்தின் 7 வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன.

களனி கங்கை, அவிஸ்­ஸா­வளை பகு­தியில் பெருக்­கெ­டுத்­துள்ள நிலையில் ஹங்­வெல்லை, கொலன்­னாவ, பிய­கம, மல்­வானை, கொழும்புப் பகு­தியும் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக களனி கங்கை பெருக்­கெ­டுப்பால் பிய­கம பகு­தியின் பல வீதிகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. மல்­வானை, பிய­கம, பண்­டா­ர­வத்த, மாபிட்­டி­கம உள்­ளிட்ட பகு­திகள் ஊடான போக்­கு­வ­ரத்து களனி கங்­கையின் பெருக்­கெ­டுப்பால் தடைப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் கொலன்­னாவ, வெல்­லம்­பிட்­டிய பகு­தி­க­ளுக்கும் களனி கங்­கையால் வெள்ள அச்­சு­றுத்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட கிங் கங்கை பெருக்­கெ­டுத்­த­மையால் காலியின் ஹினி­தும, மஹா போதி­வத்த பகுதி 5 அடி வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளது. அத்­துடன் ஹினி­தும பொலிஸ் நிலையம் முன்­பாக உள்ள வீதி, தவ­லம, நெலும, பகு­தி­களும் கிங் கங்கை பெருக்­கெ­டுப்பால் வெள்ள அனர்த்­தத்­துக்கு முகம்­கொ­டுத்­துள்­ளன.

இத­னை­விட கலா ஓயாவின் நீர் மட்டம் சடு­தி­யாக உயர்ந்­ததால் புத்­தளம் –- மன்னார் போக்­கு­வ­ரத்து நேற்றும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அதில் எலு­வலன் குளம் சப்­பாத்து பாலத்­துக்கு மேலாக இரண்­டரை அடிக்கு நேற்று காலை  வெள்ள நீர் பாய்ந்­தது.
அத்­துடன் மவு­சா­கலை, -காசல் நீர்த்­தேக்­கங்­க­ளுக்கு நீரைப் பெற்­றுக்­கொ­டுக்கும் பிர­தான நதி­க­ளான மஸ்­கெ­லியா ஓயா பெருக்­கெ­டுத்­ததில் மஸ்­கெ­லி­யாவில் 10 குடும்­பங்­க­ளுக்கு மேல் இருப்­பி­டங்­களை விட்டு வெளி­யேற்­றப்­பட்­டனர். கெசல்­க­முவ ஓயா பெருக்­கெ­டுத்­ததால் 9 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 

அத்­துடன் மகா­வலி கங்கை பெருக்­கெ­டுத்­துள்­ளதால் நாவ­லப்­பிட்டி உள்­ளிட்ட நக­ரங்கள் பாதிப்பை எதிர்­கொண்­டுள்­ளன.
நில்­வளா கங்கை பெருக்­கெ­டுத்­த­தினால் மாத்­த­றையின் பல தாழ் நில பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கிய நிலையில், அத்­த­ன­கல்ல ஓயா பெருக்­கெ­டுத்­ததில் கம்­பஹா மாவட்­டத்தின் பல பகு­தி­களில் வெள்ளம் ஏற்­பட்­டுள்­ளது. மா ஓயா பெருக்­கெ­டுத்­ததன் விளை­வாக திவு­ல­பிட்­டிய, பன்­னல பகு­தி­களின் தாழ்­நிலப் பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. அத்­துடன் கிரி உல்ல பகு­திக்கும் வெள்ள அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. 

கட்­டு­பிட்டி ஓயா பெருக்­கெ­டுத்­ததில் சிலாபம்– கொழும்பு பிர­தான வீதி­யூ­டான போக்­கு­வ­ரத்து பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரத்­த­ஓலா ஓயா பெருக்­கெ­டுத்­ததில் ஆன­ம­டுவ, மத­வாக் குளம் உள்­ளிட்ட பகு­திகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. கலா ஓயாவின் பெருக்­கெ­டுப்பால் புத்­தளம் – மன்னார் வீதி போக்­கு­வ­ரத்து நேற்றும் முற்­றாகக் பாதிக்­கப்­பட்­டது.
அத்­துடன் குளி­யா­பிட்­டிய பகு­தியில் தொடர்ச்­சி­யான மழை கார­ண­மாக குளி­யா­பிட்­டி நகரம் முற்­றாக நீரில் மூழ்­கிய நிலையில் அங்கு இயல்பு நிலைமை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பஸ் உள்­ளிட்ட அனைத்து போக்­கு­வ­ரத்தும் குளி­யா­பிட்­டி­யில் தடைப்­பட்­டுள்­ளன.
அத்­துடன் எமில்டன் கால்வாய் பெருக்­கெ­டுத்­ததில் புத்­தளம் –- கொழும்பு ரயில் சேவை பாதிக்­கப்­பட்டு அந்த ரயில் சேவைகள் லுணு­வெ­ல­வுடன் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இத­னை­விட எமில்டன் கால்­வாயின் பெருக்­கெ­டுப்பால் நாத்­தாண்­டிய பகு­தியும் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளது. நாத்­தாண்­டி­யவின் தும்­மோ­தர பகு­தியில் வெள்­ளத்தில் சிக்­கிய 6 பேரை மீட்­ட­தாகக் கடற்­ப­டை­யினர் தெரி­வித்­தனர்.
இத­னை­விட இரத்­தி­ன­பு­ரியில் 9 கர்ப்­பி­ணிகள் உள்­ளிட்ட 172 பேர் வெள்­ளத்தில் சிக்­கிய நிலையில் கடற்­ப­டை­யி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­களில் 6 கர்ப்­பி­ணிகள் தற்­போது கல­வான வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

கொழும்பின் நிலைமை
தொடர்ச்­சி­யாக கொழும்பில் பெய்­து­வரும் மழையால் தலை­ந­கரை அண்­டியப் பகு­தி­களில் வெள்ள நிலைமை ஏற்­படும் என பலரும் அச்சம் கொண்­டுள்­ளனர்.கொழும்­புக்கு வெள்ளம் ஏற்­பட முக்­கிய கார­ண­மாக அமையும் களனி கங்­கையின் நீர் மட்டம் வெள்ள அபா­யத்தை எட்­டி­யுள்ள நிலையில் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்பு அச்­சத்­துக்குக் காரணம் என கொலன்­னாவை, வெல்­லம்­பிட்­டிய, தொட்­ட­லங்க மக்கள் தெரி­வித்­தனர்.களனி கங்­கையின் நீர் மட்­ட­மா­னது ஹங்­வெல்­லை­யிலும் கிராண்ட்பாஸ், – நாக­லகம் வீதி, வெள்ள அள­வீட்­டு­மா­னியில் சிறு வெள்ள அளவை தாண்­டி­யுள்ள நிலையில், தொடர்ந்து மழை பெய்­யு­மானால் நிலைமை மோச­மாகும் என அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­விக்­கின்­றது.இந்­நி­லையில் களனி கங்­கையின் இரு மருங்­கிலும் உள்­ளோ­ருக்கு வெளி­யே­று­மாறு அந்த நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. 

மண் சரிவு நிலை­மைகள்:
கடும் மழை கார­ண­மாக மலை­ய­கத்­திலும், இரத்­தி­ன­புரி, களுத்­து­றை­யிலும் சிறு மண் சரி­வுகள் பதி­வா­கின. 
இரத்­தி­ன­பு­ரியில் அய­கம, நிவித்­தி­கல, கொலன்ன, கல­வான, கிரி­எல்ல, பெல்­ம­துளை, காவத்தை ஆகிய பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அப்­ப­கு­தி­களில் 100 மில்­லி­மீற்றர் மழை­வீழ்ச்சி பதி­வாகும் இடத்து மண்­ச­ரிவு அனர்த்தம் ஏற்­படும் என எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் களுத்­து­றைக்கு மண்­ச­ரிவு தொடர்பில் சிவப்பு அறி­வித்தல் பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இது தவிர கொழும்பு – ஹட்டன் பிர­தான வீதியில் சிறு சிறு சரி­வுகள் பதி­வா­கின. அவ்­வீ­தியில் நேற்று பல இடங்­களில் ஒரு வழி போக்­கு­வ­ரத்தே இடம்­பெற்­றன. இந்­நி­லையில் இரத்­தி­ன­புரி, களுத்­துறை, கேகாலை, கண்டி, நுவ­ரெ­லியா, குரு­ணாகல் மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதிக பாதிப்பு:
இந்த மழை, வெள்­ளத்தால் அதிக பாதிப்பு புத்­தளம் மாவட்­டத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது. அம்­மா­வட்­டத்தின் ஆன­ம­டுவை, நாத்­தாண்­டிய, சிலாபம் உள்­ளிட்ட பகு­தி­களில் கடும் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. புத்­தளம் மாவட்­டத்தில் மட்டும் 4256 குடும்­பங்­களைச் சேர்ந்த 12760 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். குளி­யா­பிட்­டிய-–- நீர்­கொ­ழும்பு பிர­தான வீதி, கொழும்பு–- சிலாபம் பிர­தான வீதி, ஆன­ம­டுவை–- சிலாபம் வீதி, புத்­தளம்– மன்னார் வீதியின் ஊடான போக்­கு­வ­ரத்­துகள் அம்­மா­வட்­டத்தில் முற்­றாக தடைப்­பட்­டுள்­ளன. அத்­துடன் அன்­றாட நட­வ­டிக்­கை­களும் முடங்­கி­யுள்­ளன.
அதற்கு அடுத்­த­ப­டி­யாக இரத்­தி­ன­பு­ரியில் 3983 குடும்­பங்­களைச் சேர்ந்த 15514 பேர் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். களுத்­து­றையில் 1278 குடும்­பங்­களைச் சேர்ந்த 4666 பேரும், கம்­ப­ஹாவில் 2677 குடும்பங்களைச் சேர்ந்த 10954 பேரும், குருணாகலையில் 934 குடும்பங்களைச் சேர்ந்த 3378 பேரும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகள், அடிப்படை வசதிகளின் சேத விபரம்:
இந்நிலையில் 19 மாவட்டங்களில் ஏற்பட்ட அடை மழை, வெள்ள நிலைமை காரணமாக 956 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் 20 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. அத்துடன் 6 வர்த்தக நிலையங்களும் 5 அடிப்படை வசதிகள் கட்டமைப்பைக் கொண்ட பாரிய நிறுவனங்களும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.

மேலதிக படை அனுப்பி வைப்பு:
இந்நிலையில் அதிக அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள, புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், ஆனமடுவ, நாத்தாண்டிய பகுதிக்கும், குளியாபிட்டிய, இரத்தினபுரி, அவிசாவளை, பியகம பகுதிகளுக்கும் மேலதிக இராணுவ, கடற்படை மற்றும் பொலிஸ் மீட்புப் படையணியினர் மேலதிகமாக அனுப்பப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, களுத்துறைக்கு மேலதிக இராணுவ படையணியும், புத்தளம், ஆனமடுவ, நாத்தாண்டிய, சிலாபத்துக்கு மேலதிக கடற்படையும் அனைத்து பகுதிகளுக்கும் மேலதிக பொலிஸாரும் அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனைவிட உதவி தேவையானோரை அடையாளம் காண விமானப்படையின் பீச் கிறாப்ட் விமானங்கள் மேற்பார்வை நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டு அதனூடாக மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.

நன்றி -Vidivelli

முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-