யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு இடமாற்றம் ? பொது அமைப்புக்கள் கண்டனம்

 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர்.

 

 இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். மாவட்டம் ஓரளவு அமைதியான சூழலில் காணப்படுகின்றது.

 

 பல்வேறு அதிரடி தீர்ப்புக்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளுடனான ஆக்கபூர்வமான சந்திப்புக்கள், தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றுவதென்பது எந்தவொரு நீதிபதியும் இதுவரை ஆற்றியிராத செயற்பாடுகள்.இவையனைத்தையும், உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் ஆற்றிவருகின்ற நிலையில் மூன்று வருட நிறைவின் காரணத்தை மாத்திரம் கணித்து இடமாற்றம் வழங்குவதென்பது ஒட்டுமொத்த யாழ். மக்களின் தலையில் நெருப்பு வைப்பது போன்றது.

 

 அனைத்து சமூக, பொது அமைப்புக்களும் மேற்படி இடமாற்றத்தினை இரத்துச் செய்து மீண்டும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியனே செயற்படவேண்டுமென்று கோரிக்கைகைளை முன்வைப்பது காலத்தின் கட்டாயமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.