இந்தியாவில் 12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை

12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்வதற்காக சிறார் சட்டத்தில் (போக்ஸோ) திருத்தம் செய்து மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இந்த அவசர சட்ட வரைவு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. சில மாதங்களில் கூட இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட மசோதா இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும்.

உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் மசோதா வாக்கெடுப்புக்கு விடப்படும். மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னர் இது நிரந்தர சட்டமாக அங்கீகரிக்கப்படும். மசோதா தோல்வியடையும் பட்சத்தில் இரண்டாவது முறையாக அவசர சட்டம் பிறப்பிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.