முஸ்லிம் காங்கிரஸை தோற்கடித்து முசலி பிரதேச சபையை கைப்பற்றிய மக்கள் காங்கிரஸ்

ஊடகப்பிரிவு

மன்னார் முசலி பிரதேச சபையை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அப்துல் கபூர் கலீபத்  சுபியான் 9 வாக்குகளைப் பெற்று, முசலி பிரதேச சபையின் புதிய தவிசாளராகவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஜே. ஈசான் 6 வாக்குகளையும் பெற்றார். 

தவிசாளராக தெரிவுசெய்யப்பட்ட சுபியானுக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 7வாக்குகளுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு வாக்கும் பொதுஜன பெரமுனவின் ஒரு வாக்கும் மொத்தமாக 9வாக்குகள்  கிடைக்கப் பெற்றன. முசலி பிரதேசசபையில் ஒரு பிரதிநிதியைக்  கொண்டுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வாக்களிப்பின் போது நடுநிலை வகித்தது. 

பிரதி தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரசை சார்ந்த முஹ்சின் றைசுதீன் 9 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார். இவருக்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7வாக்குகளும், பொதுஜன பெரமுனவின் ஒரு வாக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு வாக்கும் கிடைத்தது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடுநிலை வகித்தது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த பிலிப் சஹாயநாதன் இவரை எதிர்த்து போட்டியிட்டு, 6வாக்குகளை பெற்றார். முஸ்லிம் காங்கிரசின் 4வாக்குகளும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் 2வாக்குகளும் கிடைத்தன. 

முசலி பிரதேசசபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 4உறுப்பினர்களையும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 2உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஓர் உறுப்பினரையும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஓர் உறுப்பினரையும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் பெற்றமை குறிப்பிடத்தக்கது.