உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க இனியும் காலதாமதம் ஏற்படுத்தப்படமாட்டாது: தேர்தல்கள் ஆணையகம்

புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளின் பெயர் பட்டியல் அடங்கிய வர்த்தமானி நாளை வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 20 ஆம் திகதிக்கு பின்னர் உள்ளுராட்சி மன்றங்களை ஸ்தாபிக்க முடியும் என  ஏற்கனவே  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  இனியும் இவ்விடயத்தில்  காலதாமதம் ஏற்படுத்தப்படமாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெற்றிருந்தது. இதனுள் 24 மாநகர சபைகளும் 41 நகர சபைகளும் உள்ளடங்குகின்றன. நாட்டிலுள்ள அனைத்து உள்ளூர்மன்றங்களுக்கான பிரதிநிதிகள்  மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும்,   நூற்றுக்கு 25 வீத பெண் பிரதிநிதித்துவத்தில் காணப்பட்ட சிக்கல் நிலை காரணமாக புதிய உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதில்  சிக்கல் நிலை ஏற்பட்டது. எனினும் தற்போது இதற்கான தீர்வுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் இனி இவ்விடயத்தில் காலதாமதம் ஏற்படாது. 

உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பது தொடர்பாக அனைத்து உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்களுக்கும் ஆலோசணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெறமுடியாத வகையில் உரிய முறையில் புதிய உள்ளுாராட்சி மன்றங்கள் ஸ்தாபிக்கப்படும். 

தேர்தல் இடம்பெற்று 38 நாட்களுக்குள் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். இதேவேளை இம்முறை தேர்தலில் நூற்றுக்கு 25 வீதம் பெண் பிரதிநிதித்துவம் என்ற அம்சம் வரவேற்கத்தக்கதாகும். அதனையும் உள்ளடக்கி இம்முறை புதிய உள்ளூராட்சி மன்றங்கள் அமைக்கப்படவுள்ளமை சிறப்பம்சமாகும் .