அம்பாறை கலவரம் தொடர்பில் ஆராய சிங்கப்பூரிலிருந்து பிரதமர் ,ஹக்கீமை தொடர்பு கொண்டுள்ளார்

சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வௌ்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் நாடு திரும்பியவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவசரமாக சந்திக்கவுள்ளார்.

அம்பாறை கலவரம் தொடர்பாக கொழும்பு 07இல் 5ஆம் ஒழுங்கையிலுள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தில் நடைபெறவுள்ள இச்சந்திப்புக்கு பொலிஸ் மா அதிபரும் அழைக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்த பிரதமர் 3 தடவைகள் தொலைபேசி மூலம் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் தொடர்புகொண்டு அம்பாறை நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதன் அவசரத் தேவை குறித்தும், சட்டத்தை முறையாக பிரயோகிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார். அம்பாறையில் நடைபெற்ற சம்பவங்களையடுத்து, முஸ்லிம்கள் மத்தியில் அச்சமும்  சந்தேகமும் அதிருப்தியும் அதிகரித்துள்ளதை அவர் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்பாறை விவகாரத்தில் சட்டத்தை அமுல்படுத்துவதில் பின்னடைவு காணப்படும் நிலையில் இன்றிரவு நடைபெறும் அவசர கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, நாளை (03) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு செல்லும் ஜனாதிபதியுடன் அம்பாறை பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேசவுள்ளார்.

ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்