தொழில் அதிபர்கள் மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓட மோடியே வழிகாட்டுகிறார் : ராகுல் காந்தி

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு விரைவில் தேர்தல் வர இருப்பதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரம் செய்து வருகிறார். பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகிறார்.

2-ம் கட்டமாக கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். பெலகாவியில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பல்வேறு நலத்திடங்களை நிறைவேற்றி இருக்கிறது. ஊழலற்ற ஆட்சியால் கர்நாடகம் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் சித்தராமையா நிறைவேற்றி உள்ளார்.

மத்தியில் ஆளும் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. வெளி நாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்பேன். ஏழைகளின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் எதையும் செய்யவில்லை.

மோடியின் பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆளானார்கள். வெயிலிலும், குளிரிலும் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கி வாசலில் காத்திருந்து செலுத்தினர்.

இதை பார்த்து பெரும் தொழில் அதிபர்கள் எளிதாக மக்களின் பணத்தை கொள்ளையடித்து விட்டனர். நிரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கியில் சேமித்த பணத்தை கொள்ளையடிக்க மோடியே வழிகாட்டுகிறார்.

பா.ஜனதா ஆட்சியில் தொழில் அதிபர்கள் மக்களின் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவது வாடிக்கையாகி விட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.