பொதுமக்களின் சில கேள்விகளுக்கு கமல் ஹாசனின் பதில்கள்…!

மதுரை பொதுக்கூட்டத்தில் கட்சி அறிவிப்பை வெளியிட்டு பேசிய கமல்ஹாசன்,  பொதுமக்களின் கேள்விகளுக்கு மேடையிலேயே பதில் அளித்தார்.
அது வருமாறு:-
கேள்வி: அரசியலில் எத்தனை நாட்கள் நீங்கள் தாக்குப் பிடிப்பீர்கள்?
பதில்: என் மூச்சு உள்ள வரை தாக்குப்பிடிப்பேன். 
கேள்வி: உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்ததால்தான் விஸ்வரூபம் எடுத்தீர்களா?
பதில்: மக்களின் நிலையைக் கண்டு இனிமேல்தான் விஸ்வரூபம் எடுக்கவேண்டும். இவர்களுடன் சேர்ந்து(மக்கள்) விஸ்வரூபம் எடுப்பேன்.
கேள்வி: அரசியலில் உங்கள் வழிகாட்டி யார்? காந்தியா, பெரியாரா, அம்பேத்கரா, காமராஜரா?
பதில்: அனைத்து கடவுள்களையும் பிடிக்கும் என்று நாம் சொல்வதை ஏற்றுக்கொள்கிறோம். அதேபோல் எனக்கும் அனைத்து தலைவர்களையும் பிடிக்கும். 
கேள்வி: ஊழலை ஒழிப்போம் என்கிறீர்கள்? எப்படி ஒழிப்பீர்கள்?
பதில்: நான் எப்படி ஒழிப்பேன்? இது நல்ல கதையாக இருக்கிறதே? எல்லாரும் சேர்ந்து செய்து காட்டுவோம். என்னை மட்டும் சொன்னால் எப்படி? தனி மரம் தோப்பாகாது. ஊழலை ஒழிப்பதற்கு நீங்கள் தனிப்பட்ட சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். அப்படி செய்தால் தன்னால் ஊழல் போய்விடும். முதலில் உங்கள் அளவில் ஊழல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கேள்வி: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்துவிட்டால் இலவச திட்டங்கள் இருக்குமா?
பதில்: குவாட்டர், ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் கண்டிப்பாக இருக்காது. மற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கும் அளவிற்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: தமிழ் செத்துக்கொண்டிக்கிறது, அதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?
பதில்: சந்தோஷமாக தமிழ் பேசுங்கள். உரையாடலில் தமிழ் இருந்தால் தமிழ் வளரும், பேச்சு வழக்கில் தமிழ் இருந்தால் தமிழ் வாழும். பேசுவதற்கு வெட்கப்பட்டால் தமிழ் மெல்ல மெல்ல அல்ல, உடனே சாகும். எனவே, தமிழை குழந்தைப்பருவத்தில் இருந்தே கற்றுக்கொடுங்கள். அதற்காக வேறு எந்த மொழியையும் வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. 
கேள்வி: அரசியல் பயணம் தொடங்க எதற்கு ராமேஸ்வரம்? எதற்கு கலாம் வீடு?
பதில்: கலாம் வீடு ராமேஸ்வரத்தில் இருக்கிறது. அதனால் அங்கு சென்றேன். பாவ புண்ணியத்தைவிட நியாய தர்மத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். இதுவே என் புண்ணிய பூமி. அதனால்தான் கலாம் வீட்டில் இருந்து பயணத்தை தொடங்கினேன்.
கேள்வி: உங்கள் வாரிசுகள் அரசியலுக்கு வருவார்களா?
பதில்: மக்களாகிய என் வாரிசுகள் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். என் வாரிசுகள் அரசியலுக்கு வருவதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.