ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற இந்திய பிரதமர் மோடி; பட்டத்து இளவரசருடன் சந்திப்பு

 

பாலஸ்தீனம் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு, பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக பாலஸ்தீனம், யு.ஏ.இ. ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜோர்டானில் இருந்து நேற்று பாலஸ்தீனம் சென்றடைந்தார்.

பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு சென்ற மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. யாசர் அராபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மோடி, அந்நாட்டு அதிபர் முகமது அப்பாசை சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, வெளிநாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்தீனத்தின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் காலர் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் மீண்டும் ஜோர்டன் சென்று அங்கிருந்து ஐக்கிய அரசு எமிரேட்ஸ் சென்றார். அபுதாபி சென்றடைந்த பிரதமர் மோடியை பட்டத்து இளவரசர் முகமது பின் ஜையத் அல் நெஹயான் வரவேற்றார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், அபுதாபியில் முதல் முதலாக கட்டப்பட உள்ள இந்து கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டவுள்ளார் என வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது பிரதமர் மோடியின் இரண்டாவது பயணம். ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மோடி பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.