பிரதமர் மோடி மீது காங்கிரஸ் பகிரங்க குற்றச்சாட்டு


ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேரம் நடத்தினார் என்று காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது பேசப்பட்ட விலையை விட அதிக விலை கொடுத்து இந்த விமானங்களை தற்போதைய பாரதீய ஜனதா கூட்டணி அரசு வாங்குவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

நாடாளுமன்ற மேல்சபையில், சமாஜ்வாடி உறுப்பினர் நரேஷ் அகர்வால் நேற்று முன்தினம், “ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே நடந்த ஒப்பந்தம் பற்றிய தகவல்களை பொதுவெளியில் வெளியிட அரசு விரும்ப வில்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், “அது பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் என்பதால் அது பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்வதற்கு இல்லை” என்று கூறினார்.

இந்த நிலையில் டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல் காந்தி நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “முதல்முறையாக ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று ராணுவ மந்திரி சொல்கிறார். அதில் ஊழல் நடந்து இருப்பதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தின் போது நான் கூறினேன். பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இந்த பேரத்தை நடத்தி உள்ளார்” என்று கூறினார்.

மேலும், “மோடி தனிப்பட்ட முறையில் பாரீஸ் சென்றார். தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் மாற்றப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவும் இதை அறியும். ஆனால் ராணுவ மந்திரி, விமானங்கள் வாங்க எவ்வளவு செலவானது என்பது பற்றி இந்தியாவிடம், இந்திய தியாகிகளிடம், அவர்களின் குடும்பங்களிடம் கூற மாட்டோம் என்று சொல்கிறார். இதற்கு என்ன அர்த்தம்? இதற்கு அர்த்தம், அதில் ஊழல் உள்ளது என்பதுதான்” என குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான குலாம் நபி ஆசாத்தும், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் பிரச்சினையில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

அப்போது அவர், “மோடி அரசு தேச நலன்களிலும், தேச பாதுகாப்பிலும் சமரசம் செய்து கொள்கிறது. இந்திய விமானப்படைக்கு விமானங்களை வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. பொதுவெளியில் இது குறித்த தகவல்களை அரசு பகிராதது, அரசு கஜானாவுக்கு எவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்குமோ என்று மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்.

அத்துடன், “காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ரூ.526.10 கோடிக்கு விலை பேசப்பட்ட விமானத்துக்கு, பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் ரூ.1,570.80 கோடி என விலை பேசப்பட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. கத்தார் நாட்டுக்கு அதே கம்பெனியால் ஒரு விமானம் ரூ.694.80 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு மட்டும் எப்படி மேலும் 100 சதவீத அதிக விலையில் விற்கப்பட்டது? எதற்காக பிரதமரும், ராணுவ மந்திரியும் கொள்முதல் விலையை மறைக்கின்றனர்?” என்று கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நிருபர்களிடம் பேசுகையில், “கட்டாயம் பின்பற்ற வேண்டிய ராணுவ கொள்முதல் நடைமுறையை மீறியும், அந்த நேரத்தில் இரு நாட்டு அரசுகளிடையே இரு தரப்பு உடன்பாடு இல்லாதபோதும், எப்படி பிரதமர் 36 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு தானே முடிவு எடுத்தார்?” என்று கேள்வி எழுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.