முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்து வருகின்றனர் : அநுரகுமார திசாநாயக்க

முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியலை வியாபார நோக்கோடு செய்வதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு மக்கள் விடுதலை முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வாழைச்சேனையில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.,

இலங்கையில் தற்போது அரசியலின் மூலம் தான் அதிக பணம் உழைக்கின்றனர். தூள் வியாபாரிகள் பொலிஸைக் கண்டால் பயப்படுகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளுக்கு சலூட் அடிக்கின்றனர்.முஸ்லிம் தலைவர்கள் அரசியல் வேசம் போட்டு மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி, பிரதமர் ரணிலிடம் போய் இங்கு பெறும் வாக்குகளை காட்டி என்ன தருவீர்கள் என்று பேச்சுவார்த்தை நடாத்தி மக்களை ஏமாற்றுகின்றனர்.வளவு விற்கும் தரகர்கள் போன்று சென்று வாக்குகளை விற்கின்றனர்.இந்த நாட்டில் மஹிந்த ஆட்சிக் காலம் மைத்திரி ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு இந்த அரசாங்கம் இவ்விடயம் சார்பாக ஏதும் கதைத்தார்களா?

பேருவளை பள்ளியவாசல் உடைத்த போது பாராளுமன்றத்தில் என்னால் விவாதம் எழுப்பிய போது ரவூப் ஹக்கீம் எழும்பி சென்று விட்டார்.கொழும்பில் இருந்து மாபிள் விற்பனைக்கு வியாபாரிகள் இங்கு வருகின்றனர். ஆனால் ரவூப் ஹக்கீம் இங்கிருந்து கொழும்புக்கு வாக்குகளை கொண்டு சென்று விற்பனை செய்கின்றார் என தெரிவித்தார்.