இந்தியாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார்

இந்தியாவுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப், ட்விட்டர் மூலம் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளார். 

இம்மாதம் 12-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத்திடம், `இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதத்தை உபயோகிக்குமா?’ என்று கேள்வி எழுப்பட்டது. அதற்கு ராவத், `இது பாகிஸ்தானின் `நியூக்ளியர் ப்ளஃப்’. அரசு கேட்டுக் கொண்டால் எல்லைத் தாண்டி எந்தவிதமான நடவடிக்கையிலும் இறங்க ராணுவம் தயாராக இருக்கிறது’ என்று பதிலளித்தார். 

இதையொட்டி ஆசிஃப், அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `இந்திய ராணுவத் தளபதி மிக பொறுப்பற்றத்தனமாக ஒரு பதிலை கூறியுள்ளார். அவரது பதவிக்கு ஏற்றாற் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. இது அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு வழிகோலும். அதுதான் விருப்பமென்றால், அணு ஆயுதத்தை சோதனை செய்ய நாங்கள் தயார். அப்படிச் செய்வதன் மூலம், தளபதியின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார். இரு நாட்டு எல்லையிலும் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் வெளிப்படையாகவே அணு ஆயுதத்தைப் பயன்படுத்தத் தயார் என்று சொல்லி இருப்பது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.