தென் ஆபிரிக்கா பந்து வீச்சாளர்கள் பலவிதமான வடிவில் தாக்குதல் நடத்தக்கூடியவர்கள் – ரோகித் சர்மா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு கடும் அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் டெஸ்டிற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின், மோர்னே மோர்கல், ரபாடா, பெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.


இந்திய அணியில் 6-வது பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு மிகவும் அபாயகரமானது என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘தென்ஆப்பிரிக்கா அணியின் பந்து வீச்சுதான் உலகின் தலைசிறந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் அவர்களது சொந்த மண்ணில் சிறப்பாக பந்து வீசுவார்கள். ஆனால், தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு முற்றிலும் மாறுபட்டது. உண்மையிலேயே மிகவும் அபாயகரமானது. ஒரு நிலையோடு அவர்கள் தாக்குதல் இருக்காது. பலவிதமான வடிவில் தாக்குதல் நடத்தக்கூடியவர்கள்.

அந்த அணியில் அனுபவ பந்து வீச்சாளர்கள் மற்றும் மாறுபட்ட திறமை உடைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ரபாடா மற்றும் மோர்னே மோர்கல் உயரமானவர்கள். அதேவேளையில் ஸ்டெயின் தனது அனுபவத்தால் புதிய மற்றும் பழைய பந்தை சிறப்பாக பயன்படுத்தக் கூடியவர்.

பிலாண்டர் தென்ஆப்பிரிக்கா மண்ணில் மிகவும் அபாயகரமானவர்.  அவரை மாதிரி லென்த்-ஆன பந்து வீச்சை யாராலும் வீச முடியாது. அடுத்த ஒரு வருடத்தில் அதிகப்படியான சவால்கள் காத்திருக்கின்றன’’ என்றார்.