நாளை மறுதினம் மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கவுள்ள ஜனாதிபதி

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி விநியோகம் தொடர்பில் நாளை மறுதினம் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த 30ஆம் திகதி விசாரணை அறிக்கையினை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது.சுமார் 1400 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில் 70 பேர் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், விசாரணை அறிக்கையினை தேர்தலுக்கு பின்னர் பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் 9 அரசியல்வாதிகள் தொடர்புபட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.இந்நிலையிலேயே, நாளை மறுதினம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி நேற்று (01/01/2018) அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.