நேர்மையான,தூய்மையான, மக்கள் சார்பான அரசியலுக்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி

தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்பும் பயணத்தில், கட்சி, நிறம் அல்லது எவ்வித உறவு தொடர்புகளையும் கவனத்தில் கொள்ள போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இம்முறை தேர்தலில் போட்டியிடும் 31 அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் வெளியீட்டு நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
 இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில், நாட்டையும் மக்களையும் நேசிக்கும், ஊழல், மோசடி, வீண்விரயத்திற்கு எந்த வகையிலும் அடிப்பணியாத, நேர்மையான புதிய அரசியல்வாதிகளை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்பார்த்துள்ளது.
 நேர்மையான, தூய்மையான, மக்கள்சார்பான அரசியலுக்கு தகுதியான நபர்களை தெரிவு செய்து, எதிர்காலத்தில் சிறந்த அரசாங்கத்தை கட்டியெழுப்பும் ஆரம்பமாக இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும்.அரசியலில் ஈடுபடும் எவருக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இருக்க முடியாது.நாடு, இனம் மற்றும் மக்களின் எதிர்காலத்திற்கான பொதுவான நிகழ்ச்சி நிரலே அனைவருக்கும் இருக்க வேண்டும்.
 இம்முறை தேர்தலை தொகுதிவாரியாக நடத்த கிடைத்தமை மிகப் பெரிய வெற்றி. இதன் ஊடாக சிறந்த அரசியல் கலாச்சாரத்திற்கான ஆரம்பம் கிடைக்கும்.இதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியேற்பட்டது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.