ஜெருசலம் தொடர்பில் ட்ரம்பின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்ட ஐ.நா.சபையை பழி தீர்த்த அமெரிக்கா

ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கும் நிதியில் 285 மில்லியன் டொலரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐ.நாவின் அமெரிக்க தூதுவர் Nikki Haley தெரிவித்துள்ளார்.இது குறித்த தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஐ.நாவை திறமையான மற்றும் பொறுப்புணர்வு வாய்ந்த நிலையை நோக்கி நகர செய்யும் என்று Nikki Haley கூறினார்.

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கான அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் முடிவை எதிர்த்து ஐ.நாவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.தன்னுடைய தீர்மானத்துக்கு எதிராக ஐ.நா வெளிப்படுத்திய கருத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க இந்த நிதிக் குறைப்பு தீர்மானத்தை அறிவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை ஏற்பதாக அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தன. இலங்கையும் அமெரிக்காவின் இந்த அறிவிப்பை எதிர்ப்பதாக தெரிவித்திருந்தது.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பவர்களுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.எனினும், இந்த மிரட்டலுக்கு அஞ்சாது உலக நாடுகள் பலவும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.