NFGG கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கட்சியல்ல : அஷூர்

சகலருக்கும் சம நீதி என்பது இன்றளவும் எமது அரசியலமைப்பில் இருக்கின்றது. புதிதாக போராடிப் பெற வேண்டிய ஒன்றல்ல. ஆனாலும் 1983 இன் கலவரத்தின் போதும், பேருவளை தர்கா டவுன் கலவரங்களின் போதும், ஏன் அண்மைய ஜிந்தோட்டை கலவரத்தின் போதும் இன்ன பல சம்பவங்களின் போதும் சகலருக்கும் சமமான நீதி இந்நாட்டில் இருந்தது.

ஜிந்தோட்டை கலவரத்தின் போது, பாதுகாப்பளிக்க வந்த பாதுகாப்புத் தரப்பினரே முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அப்போதும் சகலருக்கும் சமமான நீதியே இருந்தது.

அம்பாறை மாவட்டத்தின் சிறுபான்மை ஆதிக்கத்தை ஒழிப்பதற்காக 1960 களில் பெரும்பான்மை இனவிகிதம் ஐந்நூறு வீதத்திற்கும் அதிகமாக, திட்டமிட்ட முறையில் குடியேற்றம் செய்து அதிகரிக்கப்பட்டது. பல சிங்கள பிரதேசங்கள் வலுக்கட்டாயமாக அம்பாறையுடன் இணைக்கப்பட்டன.

தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட அம்பாறையில், தமிழ் பேசும் ஒருவர் இதுவரை அரச அதிபராக வர முடியவில்லை. .

இலங்கையிலுள்ள மாவட்டங்களின் தலை நகரங்களில் அம்பாறையில் சிறுபான்மை இனத்தவர் ஒரு கடையைத்தானும் திறப்பதும் குதிரைக் கொம்பாக உள்ளது.

சகலருக்கும் சம நீதி என்பது வெறுமனே ஏட்டில் மட்டுமே இருக்கின்றது

தமிழர்கள் தம்மை ஒரு தேசியமாக கொண்டு, பல தசாப்தங்களாக தமது அபிலாஷைகளுக்காக போராடிக் கொண்டு வருகிறார்கள். ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்ததில் ஏற்பட்ட மயக்கம், சுய நிர்ணய கோரிக்கை ஒரு தோற்றுப்போன கொள்கை என்ற முடிவுக்கு வருவதற்கு வழி கோலியிருக்கலாம். அது தவறான முடிவு.

ஆனாலும் முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழர்களது போராட்டம் சர்வதேச அளவில் முனைப்படைந்திருப்பதை கவனிக்கத் தவறிவிடக் கூடாது.

இலங்கையின் மொத்த முஸ்லிம் சனத்தொகையில் கிழக்கில் இருக்கும் மூன்றிலொரு பங்கான முஸ்லிம்கள் மாத்திரமே தம்மை ஒரு தேசியமாக கொள்ளக்கூடிய தகைமைகளைக் கொண்டிருக்கின்றனர்.

தீகவாப்பி பன்சலையின் மணி ஒலி கேட்கும் இடம் வரையான பிரதேசங்கள் அதன் எல்லைகளாயிருந்தன என்பது, இன்று தயா கமகே போன்றோரினால் முழு முஸ்லிம் பிரதேசங்களையும் உள்ளடக்கிய
விதமாக உரிமை கோரப்படுகின்றது.

இந்நிலமைகளில் மாயக்கல்லியில் சிலை வைக்கப்பட்ட நோக்கங்களின் நதி மூலம் ரிஷி மூலம் ஆராயப்பட வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டும். சிங்களப் பிரதேசங்களின் புதிய எல்லைக் கற்களாகவே அவை நிறுவப்படுகின்றன.

“சிலை வைப்பதனால் முஸ்லிம்கள் மதம் மாறிவிடப் போவதில்லை” என்பது எத்தனை சிறுபிள்ளைத்தனமான கருத்து என்பதை இவ்வடிப்படைகளில் புரிந்து கொள்ள கூடியதாக இருக்கும்.

இதனாலேயே கிழக்கில் பிறக்காதவரால் எமது பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியுமாயினும், உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறினோம்.

கிழக்கில் முஸ்லிமகளுக்கு ஒரு அதிகார அலகு கிட்டுவது வடகிழக்கிற்கு வெளியிலிருக்கும் முஸ்லிம்களை பாதிக்கும் என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடிய காலங்களிலும் மாத்தறை ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்தனர். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவில்லை. அதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

இதனாலேயே வடகிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் தமது அரசியலை பெரும்பான்மை கட்சிகளுடன் முன்னெடுப்பது அறிவுபூர்வமாகின்றது. இவர்களின் அரசியலில் தலையிட்டது சுயநிர்ணய கோரிக்கையை முன்னிலைப்படுத்திய முஸ்லிம் கட்சிகளின் முன்யோசனையற்ற நடவடிக்கையாகும்.

இந்நிலமைகளில் தமிழர்களுடனான கடந்த கால கசப்பான நிகழ்வுகளாலும், சிங்களத் தலைமைகளின் தொடர்ந்தேச்சியான புறக்கணிப்புகளாலும், முஸ்லிம் தலைவர்களின் தீர்க்கதரிசனமற்ற, அனுபவமற்ற, சுயநலனான ஏமாற்று அரசியலாலும் சலிப்படைந்து ஒரு மாற்றத்தை வேண்டி நிற்பது தெளிவாக தெரிகின்றது.

ஆனால் மக்கள் வேண்டுகின்ற இம்மாற்றத்திற்கு உறுதி கொடுக்குமாற் போன்ற தகுதிகளை தற்போதுள்ள எந்த பழைய கட்சிகளும் கொண்டிருக்கவில்லை என்பதே உண்மையாகும்.

புதிதாக பதியப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (NFGG) சகலருக்கும் சம நீதி என்ற கோட்பாட்டில் இயங்கி, சிறுபான்மையினருக்கு சுய நிர்ணய உரித்து அவசியமில்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பது அக்கட்சி கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய கட்சியல்ல என்பதை தெளிவு படுத்துகின்றது.

இந்நிலமைகளிலேயே கிழக்கில் அரசியல் செய்யும் முஸ்லிம் கட்சிகள் ஒரு கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தோம்.

புதிதாக கூட்டமைப்பாக இயங்க முன்வந்துள்ள மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய சமாதான கூட்டமைப்பு என்பவற்றின் கூட்டு அறிக்கை நம்பிக்கை தருவதாக இருக்கின்றது. அதை தேடிப் படியுங்கள். கூட்டில் இணையாத கட்சிகளை இணையும் படி அழுத்தம் கொடுங்கள். அவ்வறிக்கையில் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். கூட்டாக இயங்குங்கள்.

அரசியல் செய்வது சமூக நலனுக்காக என்பது உண்மையானால் செய்யப்பட வேண்டியது இது ஒன்றே.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்