பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்

மாம்பிஞ்சை, நன்றாக வாடவைத்து, ஊசியால் பல இடங்களில் குத்தி, உப்புநீரில் ஊற போட்டு, பிறகு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் பசி உண்டாகும். வாய், குமட்டல் நீங்கும். வாந்தி, மந்தம் நாக்கு சுவை உணர்வை இழந்திருப்பது என்பன போன்ற பிரச்சினைகள் தீரும்.
மாம்பழம் மலமிளக்கியாகச் செயல்படும். ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பேதி ஆகும்.
மாங்கொட்டையை உடைத்து, அதனுள்ளே இருக்கும் துவர்ப்பான பருப்பை சாப்பிட்டால் சீதபேதி, ரத்தக் கழிச்சல், ரத்தக்கடுப்பு, சூடு எல்லாமே குணமாகும்.
மாம்பட்டையை வெயிலில் உலர்த்தி, உடைத்து அரைத்த அந்த பொடி வயிற்று புண், வயிற்று போக்குக்கு நல்ல மருந்து.
மாதுளையின் பூவும், பழத்தோலும் பசியைத் தூண்டும். மரப்பட்டையும், வேர்ப்பட்டையும் கிருமி நாசினியாகும்.
மாதுளைப்பழச்சாறு ஜீரத்தால் ஏற்படும் வாந்தி, மந்தம், விக்கல், நெஞ்செரிச்சல், வாயில் நீர் ஊறுதல், மயக்கம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்து.
மாதுளைத்தோலைப் பொடித்துச் சாப்பிட்டால் வயிற்றுக்கடுப்பு சரியாகும். இப்பொடியைத்தேனுடன் கலந்து சிறுவர்களுக்குக் கொடுத்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி, பூச்சித்தொல்லை சரியாகும்.
திராட்சைச்சாறு, தண்ணீர் கலக்காமல் காலையும், மாலையும் ஒரு தேக்கரண்டி கொடுத்தால், குழந்தைகளுக்கு பல் முளைக்கும் போது உண்டாகும் வயிற்றுக்கழிச்சல் குணமாகும்.
எலுமிச்சங்காய் வாந்தியை போக்கும். எலுமிச்சம் பழம், மயக்கம், வாந்தி, குமட்டலுக்கு மருந்து. எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கழிச்சலும் வாந்தியும் எலுமிச்சையால் நிற்கும். எலுமிச்சைச்சாறுடன் வறுத்த சீரகம் சேர்த்து நீர் கலந்து, காய்ச்சிக் குடித்தால் வயிற்று போக்கும், வாந்தியும் கட்டுப்படும்.
எலுமிச்சை பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அத்துடன் மிளகுத்தூள், சுக்குத்தூள் சேர்த்துக்காயவைத்து எடுத்துக் கொண்டால் செரிமானக்கோளாறு நீங்கி பசி உண்டாகும்.எலுமிச்சைச்சாறு இரண்டு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி போதுமான சர்க்கரை சேர்த்துக்குடித்தால் வயிற்று வலி சரியாகும்.
வாழைப்பூ வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும்.