சொல்லால், செயலால் உள்ளங்களை உடைக்காமல் ஒன்றிணைந்து வாழ்வோம்..!

நபித்தோழர் அப்ரு இப்னு அபதா (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்திடம் பேசிக்கொண்டிருந்த போது, “நாயகமே இஸ்லாத்தில் சிறந்த செயல் என்று கருதப்படுவது எது?” என்று வினவினார்.
அவரின் எதிர்பார்ப்பு, ‘வணக்க வழிபாடுகளைப் பற்றி அண்ணலார் சொல்வார்கள், அதனை பின்பற்றி நாம் நன்மையைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்பதே.
நபிகளார் கூறினார்கள்: ‘நீ பிறரிடம் அழகிய முறையில் பேசுவதும், பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதுமே இஸ்லாத்தின் நற்செயல்’.
அபதா (ரலி) விடவில்லை, ‘அப்படியானால் அதிலும் மிகச்சிறந்த செயலைப்பற்றி எங்களுக்கு அறிவித்தால் நாங்கள் அதைச்செய்ய வசதியாக இருக்குமே’ என்று மீண்டும் கேட்டார்.
‘உங்கள் கைகளால், நாவால் பிறருக்கு எந்தவித துன்பங்களையும், துயரங்களையும் கொடுக்காமல் இருப்பதே இஸ்லாத்தில் நன்மைகளைத் தரும் செயல்களில் சிறந்த செயலாகும்’ என்று அண்ணலார் பதிலுரைத்தார்கள்.
நரம்பில்லாத, மடங்கி விரியும் சிறிய சதைத்துண்டு நாக்கு. அதன் செயல்பாடுகள் மிகப்பெரிய விளைவுகளை தரக்கூடியது. மெதுவாகவும், மிருதுவாகவும், மென்மையாகவும் அதன் செய்கைகள் அமைந்தால், அது உடைந்த உள்ளங்களைக் கூட ஒட்ட வைத்து விடும். அதுவே எதிர்மறையாக செயல்பட்டால் உறுதியான கொள்கைகளைக் கூட உடைத்து சிதறடித்து விடும்.
‘நாவினைப் பேணிக்கொள்வது ஒரு முஸ்லிமின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று. எவர் ஒருவரின் நாவாலும், கை களின் செய்கைகளாலும் பிறர் பாதுகாப்பை உணர்கிறார்களோ, அவர் நன்மையின் பக்கம் இருக்கின்றார். அதுவே நேரான வழி’ என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக நபித்தோழர் அனஸ் (ரலி) இவ்வாறு சொல் கிறார்:

‘ஒருவர் என்னுடைய உம்மத்தில் ஒரு வருக்கு அவருடைய தேவையை நிறைவேற்றி அவருடைய உள்ளத்தை மகிழுறச் செய்கின்றாரோ, அவர் என்னை சந்தோஷப்படுத்தியவர் ஆவார். என்னை சந்தோஷப்படுத்தியதால் அல்லாஹ் சந்தோஷப்பட்டு என்னோடு கூடவே அவரை சுவர்க்கத்தில் நுழையச் செய்கின்றான்’.
உள்ளங்களை மகிழ்விப்பதால் உயர்ந்த சொர்க்கமே கிடைக்கும் என்று அல்லாஹ் உறுதியளிக் கிறான். அதேநேரத்தில் கற்பனையாய் எதையுமே சொல்வது மிகப் பெரிய பாவம் என்றும் திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரிக்கிறது:
“உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப் போல் (எதைப்பற்றியும், மார்க்கத்தில்) இது ஆகும்; இது ஆகாது, என்று கூறாதீர்கள். (அவ்வாறு கூறினால் அல்லாஹ்வின் மீது அபாண்டமாக பொய் கூறுவது போல் ஆகும்.) எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யை கற்பனை செய் கிறார்களோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடையவே மாட்டார்கள்” (16:116).
பொய்யாக கற்பனை செய்பவர்கள் வெற்றியடைய மாட்டார்கள் என்று திருமறையில் குறிப்பிட்ட அல்லாஹ், அதே திருக்குர் ஆனில் வெற்றியாளர்களைப் பற்றி கருத்துச் சொல்லும் போது இப்படி பதிவு செய்கின்றான்:
“நம்பிக்கையாளர்களே! உங்களில் ஒரு கூட்டத்தார் மனிதர்களை சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கி கொண்டும் இருக்கவும், இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்”. (3:104)
ஒருவர் ஓர் நற்செயலைச் செய்கின்றார், அதனை நாம் பாராட்டுகிறோம். அதனால் அவர் உள்ளம் மகிழ்வடைகின்றார். இது நமக்கு நன்மையைப் பெற்று தந்து விடும்.
அவரது உள்ளத்தை பாதிக்கின்ற அளவிற்கு நம் வார்த்தைகள் அமையக்கூடாது அது நமக்கு பாவத்தைச் சேர்த்து விடும். அப்படியானால் அவர் செய்கின்ற அத்தனை காரியங்களையும் அங்கீகரித்து தான் ஆக வேண்டுமா?
பாவச்செயலை செய்யும் ஒருவரை அதில் இருந்து தடுத்தால் அவர் மனம் வருந்தும் என்பதற்காக அதைச்செய்யாமல் இருக்கலாமா? என்றால், அதுவும் தவறுதான் என்கின்றது திருமறை.
“ஒரு தவறான செயலை ஒருவன் செய்வதை கண்ணுற்றால் அதனை உங்களுக்கு சக்தி இருக்குமானால் கைகளால் தடுங்கள். முடியவில்லை என்றால் உங்கள் வார்த்தைகளால் திருத்த முயற்சி செய்யுங்கள். அதற்கும் நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள் என்றால் உங்கள் மனதால் அவன் செய்யும் தீய காரியத்தை வெறுத்து ஒதுக்குங்கள். இதுதான் ஈமானின் மிக பலவீனமானது” என்று நபிகள் நாயகம் சொல்லி இருக்கிறார்கள்.
ஒருவன் ஒரு நன்மையைச் செய்கின்றான், அதே சமயம் வட்டி வாங்கி வயிறு வளர்க்கின்றான். ஊருக்கு உபதேசம் செய்கின்றான், ஆனால் தன் உறவுகளோடு ஒட்டி வாழாமல் வெட்டி ஒதுக்குகிறான். தான தர்மம் செய்கின்றான், ஆனால் பதுக்கல், கலப்படம் போன்ற தீய செயல்களை வியாபாரத்தில் கலக்கின்றான்.
இதுபோல பாவத்தைக் கொண்டு ஒரு நன்மை செய்வதை அல்லாஹ் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அது போன்று தான் ஏகத்துவத்தில் நம்பிக்கை கொள்ளாமல் எந்த நன்மையான காரியத்தைச் செய்தாலும் அல்லாஹ் அவற்றை பொருட்டாகவே கருத மாட்டான். எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவான், இறை மறுப்பைத் தவிர.
நபிகள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடும் போது, ‘யார் ஒருவர் மற்றவர்களின் உள்ளத்தில் சந்தோஷத்தை ஏற்படுத்துகின்றார்களோ, அதுவே அல்லாஹ்விற்கு மிக பிடித்தமான செயல். யார் ஒருவர் பிறரின் உள்ளத்தை காயப் படுத்துகிறார்களோ அந்த செயல் அல்லாஹ்வின் கோபத்தை பெற்றுத் தரும்’ என்றார் கள்.
“அல்லாஹ் எங்கெல்லாம் ‘தன்னை வணங்குங்கள்’ என்று சொல்கின்றானோ, அங்கெல்லாம் ‘பெற்றோர்களுக்கு கண்ணியம் செய்யுங்கள், கீழ்படியுங்கள்’ என்று சொல்லியவன், தனக்கு இணை வைக்க அவர்கள் உங்களைப் பணித்தால் அதனை முற்றிலுமாக நிராகரித்து விடுங்கள். அதனால் அவர்கள் மனம் வருந்தும் என்றாலும் கூட அது பாவமாக உங்களை வந்து சேராது” என்று திருக்குர்ஆனிலே தெளிவாக விளக்கிச் சொல்கின்றான்.
சொல்லால், செயலால் உள்ளங்களை உடைக்காமல் ஒன்றிணைந்து வாழ்வோம். இறைவழி நடந்து பிறரை மகிழச்செய்வோம்.