கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்தால் ருஹுணு மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பார்கள்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்பட்டால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருஹுணு மக்களுடன் கொழும்புக்குப் படையடுப்பேன் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு நேற்றைய தினம்(28) வழக்கு விசாரணையொன்றுக்காக வருகைதந்த பின்னர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அவர் கடுமையாக உழைத்தவர். துட்டகைமுனு மன்னன் யுத்தம் செய்த பின்னர் அனைத்தையும் எடுத்துச்செல்லுமாறு மக்களுக்காகத் திறைசேரியைத் திறந்துவிடுவார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைசெய்யும் வகையிலேயே அவர் அவ்வாறு செய்தார். கோத்தபாய ராஜபக்சவும் இவ்வாறானவர்தான் என்றும் கூறியுள்ளார்.நாங்களும் ருஹுணு பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கோத்தபாய ராஜபக்சவை கைதுசெய்தால் ருஹுணு மக்கள் கொழும்புக்குப் படையெடுப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வரையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.