உள்ளூராட்சி மன்ற விவகாரம் என்பது அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்பட்டதே தவிர அடுத்த ஊரான கல்முனை மக்களுடன் தொடர்பானதல்ல

சாய்ந்தமருது மக்களே…!

நானும் சாய்ந்தமருது மண்ணைச் சேர்ந்தவன் என்பதால் உங்களை விழித்து இந்தச் சிறிய பதிவை இங்கு பதிவிடுகிறேன்.

எமது மண்ணுக்கான போராட்டம் என்பது நியாயமானது. அதில் தப்பு இல்லை. எங்களது இலக்கை அடையும் வரை நீங்கள் போராடுங்கள். அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

File image

ஆனால், உங்கள் போராட்டத்தை செயற்றிறன்மிக்கதாக அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, வன்முறையானதாக அல்லது வன்முறையைத் தூண்டக் கூடியதாக மாற்றிக் கொள்ள முயற்சிக்காதீர்கள்.

நமது போராட்டம் பள்ளிவாசலின் தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்ததாகவிருந்தால் அதில் வன்முறைக்கு இடமிருக்கவே முடியாது.

அஹிம்சை அல்லது சாத்வீக அடிப்படையில் உங்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் நேற்று (24) அங்கு நடந்த சம்பவங்கள் என்னைப் பொறுத்த வரையில் எனக்கு மிக மன வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தின.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் முகநூல்களில் பல தரப்பினராலும் வெளியிடப்படும் பதிவுகளைப் படிக்கும் போது வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது. இவ்வாறான பதிவுகளை இரு தரப்பினரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறைவனைப் பயந்து கொள்ளுங்கள், மரணம், மறுமை என்ற விடயங்களை நினைவு கூர்ந்து கொள்ளுங்கள். எமது அனைத்துச் செயல்களுக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிவரும். இன்று இருப்போம். நாளையும் நாம் வாழ்வோம் என நம்பி விடாதீர்கள்.

கப்ருக்குள்ளும் கியாம நாளிலும் எமக்காகப் போராட மனிதர்கள் எவரும் வரப் போவதில்லை. இந்த உலகில் நாம் செய்த நற்செயல்கள் மட்டுமே எமக்காகப் போராடும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற விவகாரம் என்பது
அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்பட்டதே தவிர அடுத்த ஊரான கல்முனைக்குடி முஸ்லிம் மக்களுடன் தொடர்புடையது அல்ல. எனவே யாரையும் நாங்கள் வலிந்து வம்புக்கு இழுக்கவோ சம்பந்தப்படாதவர்களின் மனதை வேதனைப்படுத்தவோ கூடாது.

கல்முனை மேயராகவிருந்த சிராஸ் மீராசாகிபின் இரண்டரை வருட காலம் முடிந்த பின்னர், அவரை நீக்கி கல்முனைக்குடியைச் சேர்ந்த நிஸாம் காரியப்பரை மேயராக நியமிக்க வேண்டுமென கல்முனைக்குடி மக்கள் போராட்டம் நடத்தவில்லை. வீதிகளில் இறங்கி அவர்கள் டயர்களை எரிக்கவில்லை என்பதனை நீங்கள் மனதில் கொள்ளுங்கள்.

மேலும், சாய்ந்தமருது பிரச்சினையை இன்று பூதாகரமாக்கி முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனைச் செய்பவர்களும் சில முஸ்லிம்கள்தான் என்பதனை மனதில் இருத்திக் கொள்ளுங்கள். இந்த விடயத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடமும் பிரதியமைச்சர் ஹாரிஸிடமும் அதிக அழுத்தங்களைப் பிரயோகித்தவர்களும் சாய்ந்தமருதிலுள்ள சில அரசியல்வாதிகள்தான் என்பதனையும் நான் நன்கு அறிவேன். அதேவேளை, பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளார் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இது இவ்வாறிருக்க, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் என்ற விடயத்தில் இறுக்கமாக நடந்து கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் இன்று தங்களது இறுக்கத்தைத் தளர்த்தி சாய்ந்தமருதுக்கு மட்டும் உள்ளூராட்சி சபையை வழங்குவோம்.. கல்முனையை நான்காகப் பிரிக்கத் தேவை இல்லை என்ற ஒரு கட்டாய நிலைக்கு வந்துள்ளனர். இந்த விவகாரம் நேற்றிரவு (24) முஸ்லிம் தரப்பினராலும் இன்று காலை (25) தமிழ்த் தரப்பினராலும் தனித்தனியாக ஆராயப்பட்டு ஓர் இணக்க நிலையை எட்டியுள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்தன. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் வெண்ணெய் திரளும் போது தாழியை உடைத்த விடாதீர்கள் என சாய்ந்தமருது மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்