கேள்விச் செவியர் அல்ல நாம், கேள்வி கேட்போம் வா தோழா

 

மழையின் கூதலில் வீட்டில் இருந்த படி எதைப்பற்றியும் சிந்திக்காமல் பொய்யான செய்திகளை பரப்பும் நண்பர்கள் இறைவனை அச்சப்பட்டுக் கொள்ளட்டும். உங்கள் சுயநலச் சுருட்டலுக்கு,ஆதாய அரசியலுக்கு அவசரமாய்த் தேவை ஒரு அசம்பாவிதம். அது தானே உங்கள் நோக்கும், போக்கும்.

நேற்று நடந்த ஒரு சிறிய கல் வீச்சை கலவரமாக சித்தரிக்க முயன்று தோற்றுப் போய் இப்போது வேறொரு கதை. சா.மருது பெண்கள் சந்தையில் எல்லோரும் தாய் பிள்ளைகள் போல வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ர்றார்கள். கல்முனை- சா.மருது என்றெல்லாம் மக்கள் பார்த்ததில்லை. வீண் புரளிகளை கிளப்பி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டாம்.

இது அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் போராட்டமே ஒழிய பிரதேசங்களுக்கிடையிலான சச்சரவு அல்ல என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரபு வசந்தம் போல மாற்றம் துளிர்த்திருக்கிறது. தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் முஸ்லிம் சமூகமாகிய நாம் இந்த மாற்றத்தை சுவைக்க வேண்டும்.

இந்த நூற்றாண்டில் நமது தலைவர்கள் நம்மை சிக்கல்களில் இருந்து மீட்பார்கள் என நினைப்பது அல்லது அவர்களை இன்னும் ‘பச்சைக் குழந்தைகள்’ என நினைத்து பாதுகாப்பது மடமையின் உச்சம்.

அவர்கள் நம் கரங்களை விட்டு மீறி விட்டார்கள். அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் பெரிய பெரிய பேரங்களில் நமது மீட்பர்கள் பிஸியாகி விட்டார்கள். வட்டமடு,சா.மருது,அட்டாளைச்சேனை, மாயக்கல்லி விவகாரம் எல்லாம் இவர்களுக்கு ஜுஜுபி கேஸ்.

தேர்தலின் முதல் நாளன்று உங்களை ஆயிரம் ரூபாயால்,ஒரு அரிசி பேக்கால் வாங்கி விடலாம் எனும் அசட்டுத் தைரியம் அவர்களுக்கு. நீங்கள் அவர்களுக்கு ஏற்படுத்திய நியாயமான தைரியம் இது.

தேர்தல் வாரத்தின் இரு நாட்களை மகிழ்ச்சியாக கழிப்பதற்காக வரலாறு நெடுகிலும் நாம் இழைத்து வரும் மகா தவறுகள் அல்லவா இவை.

இப்போது வீதியில் கண்ணீர் மல்க அனாதையாய் நிற்பது யார்..? நானும், நீயும், நமது பிள்ளைகளும். போதாக்குறைக்கு கற்களால் உங்கள் தலைகள், நாடிகள் பதம் பார்க்கப்படுகின்றன. கழுதைகள் அரசியலை மீட்க மாடு கட்டி போராட்டம் வேறு. எம்மை இந்த நிர்க்கதிக்குள் தள்ளியது யார்? நாம் யாருக்காக விரல்களில் மை பூசினோமோ, அந்த கையாலாகாத அரசியல் கைம் பொம்மைகள் தான்.

மக்கள் விழித்துக் கொள்ளும் போது திசை திருப்ப தருணம் பார்த்து அலைகின்ற அவர்களின் பின்னால் என்றுமே நியாயத்தை எதிர்பார்க்க முடியாது.

நியாயத்தை மக்கள் தான் உணர வேண்டும். ஒரு பொது மகன் அரசியல்வாதி போல் சிந்திக்க முடியாது. தேர்தலை தேவையாக கொண்டவன் அரசியல்வாதி. தேவைகளை வாழ்க்கையாக சுமப்பவன் பொது மகன். நாம் சத்தியப் பாதையில் இருந்து சறுக்கி நடை பயில்வது சிறப்பல்ல.

மருதும் முனையும் ஒரு தடவை மாற்றத்தின் சுவையை ருசித்துப் பாருங்கள். அது ஏமாற்றத்திற்கு எதிரான சத்தியப் புரட்சி.

எஸ்.ஜனூஸ்- Viyuham tv
25.11.2017