றிசாட் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கூட்டமைப்பில் அதாவுல்லா இணைவாரா ?(‘சேர்த்திக்கு செய்தல்’ )

கிராமப் புறங்களில் மனம் ஒத்துப்போகாத ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் அல்லது கணவன் – மனைவிக்கு இடையில் அவர்கள் அறியாமலேயே செயற்கையாக அன்பை ஏற்படுத்துவதற்காக பரிகாரியிடம் சென்று செய்வினை செய்து கொடுப்பதை ‘சேர்த்திக்கு செய்தல்’ என்று சொல்வார்கள்.

முஸ்லிம் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளிடையே பரஸ்பர நம்பிக்கையையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தி முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக இதுபோன்ற ஒரு காரியமே செய்ய வேண்டும் போலிருக்கின்றது.

‘ஒற்றுமை எனும் கையிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாமிய மதம் சொல்கின்றது. ஆனால் ஒற்றுமை பற்றிப் பேசிப்பேசியே தமக்கும் எல்லா அடிப்படைகளிலும் பிரிந்து சென்றிருக்கின்ற ஒரு சமூகம் இருக்குமென்றால் அது இலங்கை முஸ்லிம்களாகவே இருப்பார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய ஒரு காலகட்டத்தில் ஒற்றுமைக்குள்ளும் வேற்றுமைகளைத் தேடும் அரசியலாக சோனக அரசியலையே குறிப்பிடவும் முடியும்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு அடிப்படையில் ஒன்றுபட வேண்டுமென்ற விருப்பம் மக்களிடையே ஏற்பட்டு நெடுங்காலமாயிற்று. சாதாரணமாகவே ஒற்றுமைப் பலத்தின் அனுகூலத்தை அனுபவிப்பதற்காக எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அதன் தேவைப்பாட்டை கடுமையாக உணர்ந்துள்ளனர். வழக்கமான அரசியல் பாரபட்சங்களுக்கு மேலதிகமாக பிராந்தியத்தில் பௌத்த கடும்போக்கு மற்றும் மென்போக்கு வாதங்கள், சியோனிசம், கடும்போக்கு இந்துத்துவா போன்ற சக்திகள் திரைமறைவில் ஒன்றிணைந்து வேலைசெய்து கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமாகவும் கருதப்படுகின்றது.

தமிழர் முன்மாதிரி

ஒற்றுமையை ஒரு அடிப்படைப் பண்பியல்பாக இஸ்லாம் போதித்த போதிலும் நடைமுறைச் சூழலில் தமிழர்களிடமிருந்தே முஸ்லிம்கள் ஒற்றுமையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழர் விடுதலை (ஆயுதப்) போராட்டமும், அரசியல் விடுதலை (ஜனநாயக) முன்னெடுப்புக்களும் முஸ்லிம்களுக்கு கண்முன்னே இருக்கின்ற வாழும் முன்மாதிரிகளாகும்.

தமிழர் ஆயுதப் போராட்டம் பிற்காலத்தில் முஸ்லிம்களையும் பலிகொண்டது என்றாலும், அந்த போராட்ட உணர்வென்பது லேசுபட்டதல்ல. அதற்காக உலகெங்கும் வாழ்ந்த தமிழ் மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமை என்பது குறைத்து மதிப்பீடு செய்யக்கூடியதல்ல. அந்த ஆயுதப் போராட்டமே, தமிழ் அரசியல்வாதிகளின் இன்றைய கோரிக்கைகளுக்கு உலகம் செவிமடுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆனால், ஆயுதப் போராட்டம் செய்ய முடியாத பலவற்றை தமிழ் மக்களின் அரசியல் முன்னெடுப்புக்கள் செய்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலின் ஊடாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் பல அடைவுகளைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அரசியலமைப்பு மறுசீரமைப்பு, தீர்வுத்திட்ட முயற்சிகள் காலதாமதமடைவதால் அல்லது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பிணைமுறி போன்ற நெருக்கடிகளால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சிகள் வீணாகி விடுமோ என்ற ஐயப்பாடு ஏற்பட்டிருந்தாலும் கூட தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான த.தே.கூட்டமைப்பின் முயற்சிகள் முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை மறுக்கவியலாது.

இது எதனால் சாத்தியமானது? தமிழ் ஆயுதக்குழுக்களாகவும் ஆயுதமேந்தி அரசியல் இயக்கங்களாகவும் இருந்த தரப்பினர் எல்லோரும் தங்களது பகையை மறந்து தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கியமையாலேயே இது நடந்திருக்கின்றது.

இரா சம்பந்தன் ஒரு கட்சியிலும், மாவை சேனாதிராஜா ஒரு அணியிலும் செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் போன்றோர் வேறு வேறு கட்சிகளாகவும் நின்று பேசியிருந்தால் அரசாங்கம் இவர்களை கணக்கில் எடுத்திருக்குமா என்பதை முஸ்லிம்களே சிந்திக்க வேண்டும்.
இன்று முஸ்லிம் அரசியலுக்குள் நடப்பது போல, மாவை சேனாதிராஜாவை வைத்து சம்பந்தனும் சம்பந்தரை வைத்து சுமந்திரனும் வெட்டிவீழ்த்தப்பட்டிருப்பார்கள். ஆனால், அப்படியொரு நிலை ஏற்படாமல் இருப்பதற்கும்;,அரைவாசிக்கு மேற்பட்ட வடக்கு, கிழக்கு தமிழர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பதற்கும் இந்த கூட்டமைப்பு என்ற கோட்பாடே காரணமாகும். எனவேதான், இவ்வாறான ஒரு கூட்டமைப்பை முஸ்லிம் அரசியலிலும் ஏற்படுத்த வேண்டும் என்ற குரல்கள் கடந்த பல வருடங்களாக மேலெழுந்து வருகின்றன.

முஸ்லிம் கூட்டமைப்புக்காக

ஆனால், முஸ்லிம்களிடையே இருக்கின்ற சமய, பிரதேச, பிராந்திய பிளவுகள் போல அரசியல் பிளவுகளும் அதேபோன்று முஸ்லிம் கட்;சித் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்ற தானே பெரிய ஆள் என்ற எண்ணமும் ஈகோவும் முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை நிறுவுவதில் பாரிய தடையாக இருக்கின்றன. இதற்கான முயற்சிகள் எல்லாம் சாண் ஏற முழம் சறுக்குவதாகவும், முழம் ஏறி சாண் சறுக்குவதாகவுமே இருக்கக் காண்கின்றோம்.

முஸ்லிம் மக்கள் தங்களது அரசியல்வாதிகளை ஒற்றுமைப்பட வேண்டுமென்று சொல்கின்றார்கள். அரசியல்வாதிகளோ, ‘நாங்கள் ஒற்றுமைப்படா விட்டாலும் பரவாயில்லை மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும்’ என்று சொல்கின்றார்கள். ஆனால் ஆளுக்காள் இவ்வாறு சொன்னதுதான் மிச்சம் மாறாக எந்த ஒற்றுமையும் ஏற்பட்டதாக தெரியவில்லை. ஒரு உள்ள10ராட்சி சபைக்காக, தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்காக, ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக ஓரணியில் திரண்டு போராட துணிகின்ற முஸ்லிம்கள், ஒரு தேசியமாக, இனக்குழுமாக தமக்குள் ஒற்றுமைப்பவடுவதற்கும் அதன்மூலம் முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட்டமைப்பாக ஒன்றிணைப்பதற்கும் களத்தில் இறங்கி வேலைசெய்யவில்லை என்பதே நிதர்சனமாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் சுதந்திரக் கட்சியிலும் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் எம்;.பி.க்கள் அந்தந்த பெருந்தேசிய கட்சிகளின் நிகழ்ச்சிநிரல்களுக்குள் நின்றுகொண்டு தங்களது சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியுமா என்று மட்டுமே சிந்திக்கின்றனர். பெருந்தேசியக் கட்சிகளின் ஊடாக எம்.பி. பெற்றவர் என்றால் அவர் முஸ்லிம் கட்சி தலைவர் என்றாலும் அவரது நிலையும் இவ்வாறே இருக்கும். அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரைத் தவிர வேறு யாரும் இதற்கு விதிவிலக்கல்லர். அதற்கப்பால் இவ்வாறானவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றி சிந்திப்பது கூட இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸ்; ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசறையில் அரசியல் கற்று, இன்று தனித்தனி அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் தளபதிகளாகவும் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒரு கூட்டமைப்பாக ஒரணியில் திரட்ட முடியாதிருக்கின்றமையாகும். ஆளுக்காள் முட்டிமோதிக் கொண்டிருந்த தமிழ் இயக்கங்கள் ஒன்றாக இணைந்து த.தே.கூட்டமைப்பாக ஆகியிருக்கின்ற போது, சமூக விடுதலை உணர்வோடு ஒரே பாயில் இருந்து அரசியல் கற்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று ஆளுக்கொரு கண்ணாடிக்கூண்டில் நின்றுகொண்டு கல்லெறிவதும், கூட்டமைப்பாக இணைய தயங்குவதும் வினோதமாக இருக்கின்றது.

பூனைக்கு மணிகட்டுதல்

இந்த அசாத்தியங்களை எல்லாம், சாத்தியமாக்கி முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருவதுடன், இப்போது அம்முயற்சி கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றது என்று சொல்லலாம்.
ஆரம்பத்தில் பூனைக்கு யார் மணிகட்டுவது என்ற பிரச்சினையே இருந்தது. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட குத்துவெட்டுக்களால் அதிருப்தியுற்று அக்கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த எம்.ரி.ஹசனலி, தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூத் மற்றும் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள் உள்ளிட்டோர் கட்சியை விட்டுப் பிரிந்து தனி அணியாக இயங்க ஆரம்பித்தவுடன் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சாத்தியவளம் ஏற்பட்டது.

மாமூலான முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் போலன்றி, சமூகத்திற்காக குரல்கொடுக்கும் மாற்று அரசியல் சக்தி ஒன்றின் தேவைப்பாடு மக்களிடையே இருப்பதை இதன்போது உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில், ஒன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான நேசக்கரங்களும் பரஸ்பரம் நீட்டப்பட்டன. சமூக விடயங்களை முன்னிறுத்தி செயற்படும் இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையே, முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கான உந்துதலை ஏற்படுத்தியது. இந்த அடிப்படையிலேயே உத்தேச முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.

முஸ்லிம் அரசியல் பெருவெளியில் செயற்படுகின்ற எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் ஒன்றிணைப்பதற்கான முயற்சியாகவே இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், வடக்கு, கிழக்கிற்கு வெளியில் உள்ள முஸ்லிம் அரசியல் என்பது பெரும்பான்மை அரசியலோடு பின்னிப் பிணைந்தது என்பதாலும் அங்குள்ள மக்களின் பிரச்சினை வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினையில் இருந்தும் வேறுபட்டது என்பதாலும், வடக்கு, கிழக்கில் இயங்கும் அரசியல் கட்சிகளை மட்டும் ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மு.கா.வின் நிலைப்பாடு

இவ்விரு மாகாணங்களிலும் செயற்படுகின்ற அரசியல்கட்சிகள் என்று வரும்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அத்துடன், தூய முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் இயங்கி வருகின்ற ஹசனலி – பசீர் அணியினர் ஆகியோர் இந்தக் கூட்டமைப்பில் உள்ளடங்குவது அவசியம் என்ற கருத்தே ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளாலும் தெரிவான எம்.பி.யான, மு.கா.தலைவர் முஸ்லிம் கூட்டமைப்புக்கு ஆதரவான எவ்வித சமக்கையையும் இதுவரை காட்டவில்லை.

முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான தரப்பினர் இந்த கூட்டமைப்புக்குள் உள்ளடங்குவதால் மு.கா.வை அழிப்பதற்கான முயற்சியாக றவூப் ஹக்கீம் இதனை பார்க்கின்றார். ஆனால். உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் சற்று வளர்சியடைந்த கட்சியாக இருப்பதால் ‘இவர்களோடு சேர்ந்து கொண்டு தமது வாக்குப்பலத்தை பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை’ என்றே அவர் கருதுகின்றார்.

முஸ்லிம் தனி அடையாள அரசியலில் தன்னைவிட சிரேஷ்டமானவர்களுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் தனது அதிகாரம் குறைவடைந்து போகலாம் என்ற அச்சமும் அவருக்கு இருக்கலாம். அத்துடன், முஸ்லிம் கூட்டமைப்பை சிங்கள தேசியம் விரும்பாது என்பது ஹக்கீமுக்கு தர்மசங்கடமான விடயமாகும். இவ்வாறான காரணங்களால் அவர் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை எனலாம்.

எனவே, முஸ்லிம் கூட்டமைப்பிற்குள் எதிர்காலத்தில் சில மு.கா. முக்கியஸ்தர்கள் உள்வரலாம் என்றாலும் கூட இப்போதைக்கு, முஸ்லிம் காங்கிரஸ் இக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காது என்றே கூற முடியும். முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் தேசியக் கூட்டமைப்பை போன்று முதலில் வடக்கு,கிழக்கை மையப்படுத்தியதாக உருவாக்கப்பட்டு அங்கிருந்தவாறு தென்னிலங்கை முஸ்லிம்களின் நலன்களிலும் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக கடந்த 6 மாதங்களாக கொழும்பிலும் கிழக்கிலுமாக சுமார் 20 பேச்சுவார்த்தைகள், சந்திப்புக்கள் பல மட்டங்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. அந்த அடிப்படையில் ஒரு கூட்டமைப்பின் அவசியத்தை மு.கா. தவிர்ந்த முஸ்லிம் கட்சிகள் உணர்ந்து கொண்டுள்ள போதிலும், முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பொதுமைப்படுத்தலின் கீழ் ஒரு அங்கமாக, ஒரு உபகட்சியாக அங்கத்துவம் பெறுவதா? இல்லை வெளியில் இருந்து கொண்டு ஆதரவளிப்பதா? என்பதிலேயே இன்னும் எல்லாக் கட்சிகளும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

நடைபெறவுள்ள உள்ளுரா்சி தேர்தல் என்பது ஊர்களின் வட்டாரங்களில் அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ‘உள்ள10ர் போட்டியாக’ இருப்பதால் அதில் கூட்டமைப்பு பெரிதாக செல்வாக்கு செலுத்தாது என்று கருதி சில அரசியல்வாதிகள் முடிவெடுப்பதில் தடுமாறுகின்றனர். ஆனால், இதுவே தொகுதிவாரி அடிப்படையிலான ஒரு (மாகாண சபை, பாராளுமன்ற பொது) தேர்தலாக இருந்திருக்குமாயின் அவர்களுடைய தீர்மானங்கள் வேறு மாதிரி அமைந்திருக்க வாய்ப்புள்ளது.

ஹசனலியும் பசீரும்

எது எப்படியோ ஹசனலி – பசீர் அணியினர் எல்லாப் பூனைகளுக்கும் மணிகட்டுவதற்கான ஒரு ஏற்பாட்டாளராக மட்டுல்லாது கடந்த 17 வருட முஸ்லிம் தனிஅடையாள அரசியல் பின்னடைவை சீர்செய்வதற்கான ஒரு வழிமுறையாகவும் முஸ்லிம் கூட்டமைப்பை கருதுகின்றனர். அதனை உருவாக்குவதற்காக பாடுபடுகின்றனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் முரண்பட்ட பிறகு மேடைபோட்டு பிரசாரம் செய்த மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலி மற்றும் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூதையும் தலைமமையாக கொண்ட அணியினர் அண்மைக்காலத்தில் மக்கள் மன்றத்தில் தோன்றவில்லை.

அதுமட்டுமன்றி, வடக்கு, கிழக்கு இணைப்பு, தனிஅலகு கோரிக்கை, அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை, தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக பசீர் சேகுதாவூத் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்ற போதிலும் பொதுவாக ஹசனலியோ அவரது அணியினரோ தம்முடைய நிலைப்பாட்டை ஒரு பொதுத்தளத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை என்பது மக்களது கவனிப்பை பெற்றுள்ளது.

மேடைபோட்டு, மக்களை தம்பக்கம் திரட்டிய ஹசனலி அணியினர் எங்கே காணாமல் போய்விட்டார்களா? என்ற கேள்விகளும் ஆங்காங்கே முன்வைக்கப்பட்டன. இந்த அணியின் கருத்துக்களோடு உடன்பட்ட கணிசமான அலைக்கழியும் வாக்காளர்கள் கடந்த சில மாதங்களாக எந்தப்பக்கம் செல்வது என்ற தடுமாற்றத்தில் இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. விசாரித்துப் பார்த்ததில், ஹசனலி அணியினர் முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக இரவும்பகலும் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றமை தெரியவந்தது. எனவே, வழக்கமான பிரசார அரசியலை தவிர்த்து, கூட்டமைப்பை நிறுவுவதற்காக முழுமூச்சுடன் இந்த அணி செயற்படுகின்றது என்றால் அது பாராட்டுக்குரியது.

ஏனைய கட்சிகள்

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி, கூட்டமைப்பிற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. ‘தமக்கு கூட்டமைப்பு அவசியமில்லை என்றாலும் கூட்டமைப்பு ஒன்று நிறுவப்படும் போது அதில் மக்கள் காங்கிரஸ் அங்கம் வகிக்க வேண்டும்’ என்ற நிலைப்பாட்டில் இருக்கின்ற அக்கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் பல விட்டுக் கொடுப்புக்களுக்கு தயார் என ஏற்பாட்டாளர்களிடம் கூறியுள்ளார். கூட்டமைப்பு என்று வருகின்ற போது அது முஸ்லிம் சமூகத்திற்கு நன்மையளிக்கின்ற சமகாலத்தில் கட்சிகளுக்கும் இலாபத்தை பெற்றுத் தரும். அந்த அடிப்படையில் றிசாட் விட்டுக் கொடுப்பதை விட அதிகம் பெற்றுக் கொள்வார் என்பது அவர் அறியாத சங்கதியல்ல.

முஸ்லிம் கூட்டமைப்பில் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸை இணைத்துக் கொள்வதற்கு தொடர்ந்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரும் அதாவுல்லா வழிக்கு வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்திருந்த நிலையில் இப்போது இறுதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், நிஜத்தில் அதாவுல்லாவுக்கும் றிசாட்டுக்கும் இடையில் ஒரு பனிப்போர் ஆரம்பமாகி இருக்கின்றது. மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் கால்பதித்து தேசிய காங்கிரஸின் வாக்குகளை தம்வசப்படுத்திக் கொண்டதற்காக அக்கட்சி இப்போது வன்னியில் கால்பதித்துள்ளது. அத்துடன், தொடரான பிரசாரக் கூட்டங்கள், பாலமுனைப் பிரகடனம் போன்ற நகர்வுகளால் தமது கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது என்று அதாவுல்லா நம்புகின்ற ஒரு சூழலில், றிசாட் பதியுதீன் அங்கம்வகிக்கும் முஸ்லிம் கூட்டமைப்பில் அவர் இணைவாரா என்பது சந்தேகமே.

இதேவேளை, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை இணைத்துக் கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு அக்கட்சி எதிர்கொள்ளும் முதலாவது தேர்தலாக இத்தேர்தல் இருப்பதால் அக்கட்சி தனித்துப் போட்டியிடுவதன் மூலம் தமது பலத்தை பரீட்சார்த்தம் செய்து பார்க்க விரும்புகின்றது. அத்துடன், உத்தேச கூட்டமைப்பில் அங்கம் வகிப்போர் வழக்கமான அரசியலில் ஊறியவர்களாக இருக்கின்ற நிலையில், புதியதொரு அரசியல் கலாசாரத்தின் முன்னோடியாக திகழ விரும்பும் தம்மீது அவர்களது ‘கறைகள்’ படிந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. எனவே இப்போதைக்கு நேரடியாக ந.தே.மு., முஸ்லிம் கூட்டமைப்பில் அங்கம் வகிக்காது என்றும் வெளியில் இருந்து இணக்கப்பாட்டுடன் செயற்படும் என்றும் அனுமானிக்க முடிகின்றது.

அடுத்தடுத்து தேர்தல்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் தேசிய காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற கட்சிகள் ஒரு இறுதி உடன்பாட்டுக்கு வராமல் காலத்தை இழுத்தடித்துக் கொண்டிருப்பதால், அசாத் சாலியின் ‘நுஆ’ போன்ற கட்சிகளுடனும் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், முஸ்லிம் கூட்டமைப்பு நிறுவுவதை மேலும் தாமதப்படுத்த முடியாது என்ற அடிப்படையில் இறுதி முடிவு எடுப்பதற்காக இவ்வாரமும் கொழும்பில் பல சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

கூட்டமைப்பு என்பது – ஒரு மந்திரக்கோலாகும். அந்தக் கோல் மக்களிடையே நன்றாக வேலைசெய்யும் இந்தியாவில் (ஒருசிலரால் அரசியல் காமடியனாக நோக்கப்படுகின்ற) விஜயகாந்துடன் கூட்டுச் சேர்ந்தே ஜெயலலிதா ஆட்சிபீடமேறினார். இலங்கையில் தமக்கு எதிரான கட்சியை சேர்ந்த சந்திரிகா அம்மையாரையும், மைத்திரிபால சிறிசேனவையும் இணைத்துக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பிடித்தார் என்ற வரலாறுகளை, முஸ்லிம் அரசியல்வாதிகள் மறந்துவிடக் கூடாது.

எனவே, வீண்பேச்சுக்கள் தேவையில்லை.

விட்டுக்கொடுப்புக்களே இன்றைய தேவை!

ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 11.12.2017)